'இண்டலிபாட்' வழங்கும் குறைந்த கட்டண இணையவழி தொழில்நுட்பக் கல்வி!

2

2011ம் ஆண்டு திவாகர் சிட்டோரா மற்றும் ஷில்பா ஜெயின் ஆகிய இருவரும் பிக்டேடா மற்றும் ஹடூப் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். அதை பயிற்சியளிக்கக்கூடிய நிறுவனத்தை தீவிரமாக தேடி, கடைசியில் ஒரு நிறுவனத்தை அணுகிய போது அவர்கள் சொன்ன தொகையை கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். ஒருவருக்கு 55,000 ரூபாய் என்பதே அந்த கட்டணம்.

இதே பிரச்சினை தானே மற்றவர்களுக்கும் இருக்கும் என்று யோசித்தார்கள். எனவே ஜுலை 2011ம் ஆண்டு 'இண்டெல்லிபாட்' (Intellipaat) என்ற நிறுவனத்தை துவங்கினார்கள். உயர்ரக தொழில்நுட்ப பயிற்சியை சாதாரண கட்டணத்தில் வழங்க வேண்டும் என்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

இண்டெல்லிபாட் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான திவாகர் சிட்டோரா பேசியதாவது, “கடந்த நான்கு ஆண்டுகளில் 40 வாடிக்கையாளர்கள், 100 படிப்புகள், 2.5 லட்சம் பயனர்களை உலகம் முழுவதும் பெற்றிருக்கிறோம். எரிக்சன், விப்ரோ, சிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் எங்களின் வாடிக்கையாளர்கள். நான் தனிப்பட்ட முறையில் 30 கார்பரேட்டுகள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள 500 மாணவர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறேன். அதில் சிலர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் ஆவார்கள்” என்கிறார்.

ஜெய்பூரில் இயங்கக்கூடிய இந்த நிறுவனம் இப்போதுவரை நல்ல வளர்ச்சியை காட்டியிருக்கிறார்கள். 40 வாடிக்கையாளர்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். இணைய வழியில் உலகம் முழுவதும் 15,000 பேருக்கு பயிற்சியளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 80 தொழில்நுட்ப படிப்புகளின் மூலம் உலகின் தலைசிறந்த நிறுவனத்தையெல்லாம் தன் வாடிக்கையாளர்களாக பெற்றிருக்கிறார்கள்.

தொழில் வருமானம்

வெறும் ஐம்பதாயிரம் ரூபாயை கொண்டு துவக்கப்பட்ட இந்த நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் பயிற்சியளிக்கிறது. இப்போது சில முதலீட்டாளர்களோடு பேசிவருவதன் அடிப்படையில் முதல்கட்டமாக மூன்றில் இருந்து ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதியை திரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது (ரூ 19-32 கோடி)

இந்த பணத்தை வைத்து நிறுவனத்தை உலகம் முழுவதும் விரிவாக்கப்போவதாக திவாகர் தெரிவித்தார். தற்போது இருக்கும் படிப்புகளை 125லிருந்து 500 ஆக அதிகரிக்கும் திட்டமிருப்பதாகவும் தெரிவிக்கிறார். பல புதிய வாடிக்கையாளர்களை பெறுவதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டமுடியும் என நம்புகிறார்.

இணையவழி படிப்புகள்

சுயமாக ஒருவர் தானே படிக்கக்கூடிய வகையிலும், பயிற்சியாளரை உள்ளடக்கியதுமான படிப்புகளை இண்டல்லிபாட் வழங்குகிறது. இப்போதைக்கு 100க்கும் மேற்பட்ட இணைய படிப்புகளை வழங்குகிறார்கள். பிக்டேட்டா, பிசினஸ் இண்டல்லிஜன்ஸ், டேடா சயின்ஸ், க்ளவுட், ஹடூப், பில்டிங் ரெகமண்டேசன் எஞ்சின், பைதான், ப்ரின்ஸ்2, பிஎம்பி, டேப்ளூ, கிள்க்வ்யூ, ஒபி, டேலண்ட், ஸ்பாட்ஃபயர், ஜேஸ்பர், எம்எஸ்பிஐ, காக்னோஸ், ஸேஸ், டேடா ஸ்டேஜ், ஓபன்ஸ்டேக், ஸாப் ஹனா, ஜேஸ்பர்சாஃப்ட் போன்ற பல்வேறு படிப்புகளை வழங்குகிறார்கள்.

"எங்கள் எல்லா படிப்புகளும் சாதாரண கட்டணத்தில் வழங்குகிறோம். கட்டண விகிதம் ரூ 4000 முதல் 11,000 வரை. நாங்கள் வழங்கும் படிப்புகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை. இணைய வழி படிப்பில் வேறு யாரும் 24*7 சேவையை வழங்குவதில்லை என்பதை சொல்லியாக வேண்டும். லிண்டா மற்றும் ப்ளூரல்சைட் போன்ற நிறுவனங்கள் இந்த சந்தையில் இருந்தாலும் அவர்கள் மிக அடிப்படையான கல்வியையே வழங்குகிறார்கள்” என்றார் திவாகர்.

கற்பவர்கள்

இவர்களிடம் கற்பவர்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித்துறை சார்ந்தவர்களே ஆவர். வெறுமனே படிப்பு என்பதை தாண்டி திறன் மேம்பாடு சார்ந்தும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தற்போது கல்லூரி மாணவர்களுக்கென சில பிரத்யேக படிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் அது அவர்கள் வேலை பெற உதவும் என்பதாகவும் திவாகர் தெரிவிக்கிறார்.

"எங்களின் பயிற்சியாளர்கள் குழுவில் இருப்பவர்கள் இந்த துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் தான் ஒரு படிப்பை உருவாக்குகிறார்கள் அதற்கான உள்ளடக்கத்தையும் தயாரிக்கிறார்கள். எங்களின் பாடங்கள் மாறக்கூடியவை என்பதால் வேறு யாரும் காப்பியடிக்கமுடிவதில்லை. நாங்கள் பொறியியல் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் திவாகர்.

தற்போதுவரை தோராயமாக 2,50,000 பேர் வரை இவர்களிடம் பயிற்சி பெற்றிருப்பதாக தெரிவிக்கிறார் ( இவர்கள் எல்லோருமே பதிவு செய்தவர்கள்). ஒரு மில்லியன் மாணவர்கள் என்ற இலக்கை நோக்கி திட்டமிட்டு கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இவர்களின் தளத்தை மாதத்திற்கு ஒரு லட்சம் பேர் பார்ப்பதாகவும் அவர்களில் 40லிருந்து 50 சதவீதத்தினர் திரும்பவும் பார்ப்பதாக திவாகர் தெரிவிக்கிறார். இப்போதைக்கு இவர்களிடம் 40 பேர் பணியாற்றுகிறார்கள். அடுத்த சில மாதங்களில் இது 60ஆக அதிகரிக்கும் என்கிறார்.

ஓரடி முன்னே

இண்டல்லிபாட் பல புதிய தொழில்நுட்பங்களில் பாடங்களை வழங்க திட்டமிட்டிருக்கிறது. சுமார் 200 பாடங்கள் வரை இலக்காக நிர்ணயித்திருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணிசார்ந்த எல்லா படிப்புகளுக்கும் ஒரே தீர்வாக இருக்க விரும்புகிறார்கள். 50 நாடுகளுக்கு விரிவாக்கும் திட்டமும் இருக்கிறது. ஒரே வருடத்தில் 1.5லிருந்து 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக எதிர்பார்க்கிறார்கள்.

சந்தை நிலவரம்

கல்வி சந்தை என்பதற்கு எப்போதுமே நல்ல கிராக்கி இருந்தாலும் இணையவழி கற்றல் என்பது மிக வேகமாக வளர்ந்துவருகிறது. குறிப்பாக இளைஞர்கள் நிறைய பேர் இணையத்தில் கற்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். எட்டுசதவீத வளர்ச்சியை பெற்றுள்ள இந்த துறையில் கோர்ஸீரா, ககர்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களும் சேவை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு இந்தியாவில் இணைய கல்வியின் மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது என்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இணையதள முகவரி: Intellipaat

ஆங்கிலத்தில் : Aparajita Choudhury |தமிழில் : Swara Vaithee