குழந்தைகளும் தொழில் முனைவர்கள் ஆகலாம்: சுட்டிகளை ’கிட்ஸ்ப்ரூனர்’ ஆக்கும் மோகனலட்சுமி!

புதிதாக யோசித்து, அதனைச் சரியாக செய்தாலே போதும், வெற்றி நிச்சயம். இதுவரை 400 குழந்தைகளை இளம் தொழில்முனைவர்கள் ஆக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த மோகனலட்சுமி.

0

யார் இந்த மோகனலட்சுமி என்கிறீர்களா? ’கிட்ஸ்ப்ரூனர்’ 'Kidspreneur' என்கிற ஸ்டார்ட் அப்பை தொடங்கி இன்று பல குழந்தைகளை தொழில் முனைவர்கள் ஆக ஊக்கப்படுத்தி உயர்த்தியவர் தான் இவர்.

சிறு வயதில் இருந்தே எதையாவது வித்தியாசமாகச் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர் மோகனலட்சுமி. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சவாலோடு எதிர்கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்ட இவர், 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர், பின்னர் பதினொன்றாம் வகுப்பிற்கு ஆங்கில வழியில் மாறியுள்ளார். தனது கடின முயற்சியால் அதில் வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்த மோகனலட்சுமிக்கு, தானும் மற்ற மாணவர்களைப் போல் பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் என கல்லூரிகளைத் தேடி ஓட விருப்பமில்லை. ஏதாவது வித்தியாசமாக செய்து அதில் தனது திறமையை அவர் நீருபிக்க விரும்பினார். இதனால் தனது வாழ்க்கையை அவர் அடகு வைத்து, மூன்றாண்டுகள் தனது எதிர்காலம் குறித்து சிந்தித்தார். 

துறுதுறுப்பாக எப்போதும் இருக்கும் தங்களது மகள், இப்படி கல்லூரி போகாமல் வீட்டிலேயே முடங்கியது அவரது பெற்றோரை கவலையடையச் செய்தது. அவர்களுக்கு தனது எதிர்காலத் திட்டத்தைப் புரிய வைக்க மிகவும் சிரமப்பட்டார் மோகனா.

பின்னர் பெற்றோரின் மன திருப்திக்காக பார்ட் டைம் ஏர்-ஹோஸ்டஸ் கோர்ஸில் சேர்ந்த மோகனா, பின்னர் தொலைதூரக் கல்வியில் பேச்சிலர் ஆஃப் பிசினஸ் படித்தார்.

kidspreneur நிறுவனர் மோகனலட்சுமி
kidspreneur நிறுவனர் மோகனலட்சுமி
“சின்ன வயசுல இருந்தே எப்போதும் சுறுசுறுப்பா இருக்கறது தான் எனக்குப் பிடிக்கும். பகல்ல தூங்குறதுகூட பிடிக்காது. இதனால், பார்ட் டைம்மா படிச்சுட்டு இருந்த காலத்துலயே சின்னச் சின்ன ஈவன்ட்டுகள் நடத்துறது, காம்பியரிங் பண்றதுனு கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி என்னை நிரூபிச்சுக்கிட்டே இருப்பேன்.” 

அப்படித்தான் 18 வயசுல ஹோட்டல் ஒண்ணுல கெஸ்ட் மேனேஜ்மெண்ட்ல கிடைச்ச வேலையும். சம்பளத்தைவிட அந்த வேலையிலும் கிடைத்த அனுபவங்களில் நிறையக் கத்துக்கிட்டேன், என்கிறார் மோகனா.

மோகனாவின் திறமையால் குறைந்த காலத்திலேயே இந்தியாவில் உள்ள ஒரு யூ.கே நிறுவனத்தில் அக்கவுன்ட் மேனேஜராகும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஒரே வருடத்தில் பிராண்டு மேனேஜராக உயர்ந்தார். தொலைதூரக் கல்வி மூலம் படித்த மோகனா இன்னும் மேற்படிப்பு படித்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம் என அவரது நலம் விரும்பிகள் கருதினர். இதனால் மேற்படிப்பு படிக்க முடிவு செய்தார் அவர்.

தொலைதூரக்கல்வி முறையில் இளநிலைக் கல்வி முடித்ததால், அவருக்கு எம்.பி.ஏ. நேரடி வகுப்பில் சேர எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. இதனால் சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அவர் விண்ணப்பித்தார். மேற்படிப்பிற்காக மோகனா சிங்கப்பூர் செல்வதில் அவரது குடும்பத்தினருக்கு அவ்வளவாக விருப்பமில்லை. திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால், சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு மோகனாவும் சம்மதிக்கவே, நிச்சயதார்த்தம் முடிந்தது. அவர் சிங்கப்பூர் பறந்தார்.

அங்கு எம்.பி.ஏ.விற்கான புராஜெக்டில், குழந்தைகளுக்குத் தொழில் கற்றுக்கொடுப்பது பற்றிய ஓர் ஆய்வை அவர் மேற்கொண்டார். அவரது ஆய்விற்கு சிங்கப்பூர் மினிஸ்ட்டரி ஆப் எஜுகேஷனில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

“எம்.பி.ஏ. முடித்து இந்தியா திரும்பலாம் என்றிருந்தபோது, திடீரென ஒருநாள், சிங்கப்பூர் மினிஸ்ட்டரி ஆஃப் எஜுகேஷனில் இருந்து போன் வந்தது. என்ன பிரச்னையோ என பயந்துகொண்டே பாஸ்போர்ட், சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு நேரில் சென்றேன். ஆனால், நான் பயந்ததற்கு நேர்மாறாக எனது புராஜெக்ட்டைப் பாராட்டி பேசி, எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். மேலும், 

“அந்த புராஜெக்டை சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்த எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்கள். அதன் தொடர்ச்சியாக நான் உருவாக்கிய திட்டத்தை சிங்கப்பூரில் பாடமாகக் கொண்டுவர, அந்த அரசே உதவியது. அப்படித்தான் இந்த கிட்ஸ்ப்ரூனருக்கான விதை என்னுள் விழுந்தது,” எனக் கூறுகிறார் மோகனா.

சிங்கப்பூரைத் தொடர்ந்து, மலேசியாவிலும் அதிக பள்ளிகளில் மோகனாவின் புராஜெக்ட் பாடத்திட்டமாக கொண்டு வரப்பட்டது. மேற்கொண்டு பல நாடுகளுக்குப் பயணித்து தனது திட்டத்தை மேலும் அவர் மெருகேற்றினார். தமிழகத்தில் சிவகாசிக்குச் சென்று ஒரு வருட காலம் தங்கியிருந்து ஆய்வு செய்தார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ஏற்கனவே நிச்சயம் முடிந்திருந்த மோகனாவுக்கு இடையில் திருமணமும் நடைபெற்றது.

பின்னர் சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் இருந்து இந்தியா வர முடிவு செய்தார். தனது அனுபவங்கள் மூலம் இந்தியக் குழந்தைகளுக்கான தொழில் வழிமுறைத் திட்டத்தை உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாக சென்னையில், ‘கிட்ஸ்ப்ரூனர்’ என்ற  நிறுவனத்தையும் தொடங்கினார்.

ஆரம்பத்தில் கிட்ஸ்ப்ரூனரின் நோக்கத்தை பெற்றோர் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது. தனது திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல அதிகம் உழைத்தார் மோகனா.

“பெரும்பாலான குழந்தைகளுக்கு டாக்டர், இஞ்சினியர், டீச்சர் என்பதைத் தாண்டி எதிர்காலத் திட்டங்கள்  இல்லை. இதனால் நடனம், பாடல், எழுத்து என தங்களது திறமைகளைத் தொலைத்து கல்வியின் பின்னாலேயே ஓடுகின்றனர். ஆனால் எல்லாக் குழந்தைகளுமே டாக்டராகவோ, டீச்சராகவோ ஆகிவிடுவதில்லை. தாங்கள் விரும்பியதையும் அடைய முடியாமல், திறமைகளையும் தொலைத்து கிடைத்த வேலையில் சேரும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்பது தான் எங்களது கிட்ஸ்ப்ரூனரின் நோக்கம்.” 

இதை பெற்றோர்களிடம் தெளிவாகக் கொண்டு சென்றோம். அதன் பலனாக தற்போது நிறையபேர் எங்களைத் தேடிவந்து, அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை எங்களிடம் ஒப்படைக்கின்றனர். நாங்களும் அவர்களது நம்பிக்கையை ஏமாற்றி விடாமல், அக்குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு சரியான வழியில் வழிகாட்டியாக இருந்து, அவர்களை சிறந்த தொழில் முனைவர்கள் ஆக்குகிறோம்,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் மோகனா.

ஏழு வயது முதல் பதினேழு வயது வரையுள்ள குழந்தைங்களுக்கு, வாரம் ஒரு பிசினஸ் சென்டரில் பயிற்சி வகுப்புகள் என்ற முறையில் பயிற்சி தருகிறது கிட்ஸ்ப்ரூனர். அங்கு குழந்தைகளின் ப்ளஸ், மைனஸ் பற்றி ஆராயப்பட்டு, அவர்கள் எந்தத்துறையில் சென்றால் வெற்றி பெற முடியும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. குழந்தைகள் விரும்பும் பிரிவிலேயே அவர்களை ஈடுபடச் செய்கிறார்கள்.

இதற்காக தங்களுடன் தொடர்பில் இருக்கும் சில முதலீட்டாளர்களிடம் அவர்களை கிட்ஸ்ப்ரூனர் அறிமுகப்படுத்தி வைக்கிறது. அவர்கள் மூலம் முதலீட்டுத் தொகை பெறப்பட்டு, அந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட தொழில்முனைவோர், தொழிலதிபர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளையும் குழந்தைகளுக்கு உருவாக்கித் தருகின்றனர். 

இதன் மூலம் பெறும் அனுபவங்களில் இருந்து குழந்தைகளே தங்களது தொழிலை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு திறமைசாலிகள் ஆகின்றனர். அவர்களது நிறுவனத்திற்குப் பெயர் வைப்பதில் இருந்து லாபக் கணக்கு பார்ப்பது வரை எல்லாமே அக்குழந்தைகளே செய்கிறார்கள்.

அதற்கான பயிற்சிகளைச் செய்முறையாகவே அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதுவரை சுமார் 400 குழந்தைகள் கிட்ஸ்ப்ரூனர் மூலம் இளம் தொழில்முனைவர்கள் ஆகி இருக்கின்றனர். இவர்கள் மாதம் பத்தாயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை டர்ன் ஓவர் பார்க்கின்றனராம்.

சிறுவயதிலேயே தொழில் முனைவர்கள் ஆனால் படிப்பு என்னாவது என பெற்றோர் பயப்படத் தேவையில்லை என்கிறார் மோகனா. காரணம், படிப்போடு சேர்ந்துத் தான் தொழிலையும் இக்குழந்தைகள் கவனித்துக் கொள்கின்றனர். தங்களது தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தில் பலர் சமூக சேவைகளுக்காகச் செலவிடுகின்றனராம்.

வித்தியாசமாக சிந்தித்து, அதனை சரியாக செயல்படுத்தி தற்போது தனது ஸ்டார்ட் அப் மூலம் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருவாய் சம்பாதித்து வருகிறார் மோகனா.  குழந்தைகளைத் தொழில் முனைவர்களாக்கும் என்ற மோகனாவின் இந்த திட்டம் விரைவில் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.