சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களுக்கு பிரதமர் அறிவித்துள்ள முக்கிய திட்டங்கள்!

0

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான வரலாற்று சிறப்புமிக்க ஆதரவு மற்றும் உதவித் திட்டங்களை அறிவித்து துவங்கி வைத்தார். அதில் முக்கிய சிலவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 12 முக்கிய திட்டங்கள்:

* 59 நிமிடங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) கடன் வசதி பெற உதவும் தளம்

* மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) இடம் இருந்து கட்டாயமாக்கப்பட்ட 25 சதவீத கொள்முதல்

* நிறுவனங்கள் சட்டத்தில் (Companies Act) சிறிய குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை பிரிவில் மாற்றங்கள் செய்ய எளிய நடைமுறை ஏற்படுத்தும் சட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த 12 முக்கிய முடிவுகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வரலாற்றில் ஒரு புதிய அதியாயம் தொடங்கப்படும். MSME-க்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகமாக இந்தியாவில் உள்ளதால் அத்துறைக்கு வலு சேர்க்க இந்த புதிய அறிவிப்புகள் உதவும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்த பொருளாதார மாற்றங்களால் ‘சுலபமாக தொழில் புரியமுடியும்’ பட்டியலில் 142 இடத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா 77-வது இடத்துக்கு வந்துள்ளது என்றார் பிரதமர் மோடி. 

MSME துறையில் உள்ள 5 முக்கிய அம்சங்களான கடன், சந்தையை அடையும் வழிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் புரிவதற்கான சூழல் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு ஆகியவை இந்த புதிய 12 அறிவிப்புகள் மூலம் உறுதி செய்யப்படும் என்றும் கூறினார். 

கடன் பெற வழிகள்

தனது முதல் அறிவிப்பாக பிரதமர், 59 நிமிட கடன் தளம் ஒன்றை திறந்து வைத்தார். 

சுலபமாக இந்த தளம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ரூபாய் 1 கோடி வரை 59 நிமிடங்களில் கடன் பெற வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தளத்தின் லின்க் ஜிஎஸ்டி தளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.


ஜிஎஸ்டி-க்கு பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார் பிரதமர். 

500 கோடி ரூபாய் மேல் விற்றுமுதல் கொண்டுள்ள எல்லா நிறுவனங்களும் Trade Receivables e-Discounting System (TReDS) கீழ் கட்டாயமாகக் கொண்டு வரப்படும் என்ற மூன்றாவது அறிவிப்பை தந்தார். 

சந்தையை அடைய வழிகள்

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) இடம் இருந்து கட்டாயமாக்கப்பட்ட 25 சதவீத கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பின் மூலம் அவர்களின் சந்தை வாய்ப்பு பெருகும். 

மொத்த 25% கொள்முதலில் 3% பெண் தொழில்முனைவோர்களின் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் என்று அறிவித்தார் மோடி. 

தொழில்நுட்ப வளர்ச்சி

தொழில்நுட்பம் இன்று எல்லா துறையிலும் வளர்ந்துள்ளதால் தொழில் துறைக்கும் அது அவசியம் ஆகிறது. இதை மனதில் கொண்டு நாடு முழுதும் 20 ஹப்கள் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப டூல்கள் வழங்கும் இடமாக இவை தொழில்துறைகளுக்கு உதவி செய்யும். 

தொழில் புரிய எளிய சூழல்

ஃபார்மா நிறுவனங்கள் சுலபமாக தொழில் புரிய ஃபார்மா துறை MSMEக்கள் குழுமம் அமைக்கப்படும் என்றார் பிரதமர். இந்த குழுமம் நிறுவுவதற்கான 70 சதவீத செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். 

இறுதியாக, Companies Act-ல் உள்ள சிறிய சட்ட மீறல்கள் குறித்தான சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதன் படி, 

தொழில்முனைவோர்கள் எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தை அணுகத்தேவையில்லை என்றும் அவர்களே சில எளிய நடைமுறைகள் மூலம் சரிசெய்து கொள்ளமுடியும். 

MSME ஊழியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு 

MSME ஊழியர்களுக்கு ‘ஜன் தன்’ கணக்கு மூலம் அவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் அவர்களுக்கு உரிய பிஃஎப் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  

 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த அனைத்து முயற்சிகளும் அடுத்த 100 நாட்களில் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று உறுதி அளித்தார் பிரதமர் மோடி. 

தகவல் உதவி: பிஐபி | தமிழில்: இந்துஜா