ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதில் வணிகர்கள், தொழில்முனைவர்கள் அச்சம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்- மத்திய அமைச்சர் உறுதி!

1

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக தொழில்முனைவர்கள், வணிகர்கள் மற்றும் மக்களிடையே உள்ள அச்சத்தை போக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் நிறுவன விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் கூறினார்.

இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால்
இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால்

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல் படுத்துவது தொடர்பாக சென்னையில் இந்திய செலவு கணக்காயர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்றுப்பேசிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் மேலும் கூறுகையில் இந்த வரி முறை, ஒரு தேசம், ஒரு வரி என்ற தொலை நோக்கு பார்வையுடன் மத்திய அரசு அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார். இந்த ஜி.எஸ்.டி. வரி இந்திய பொருளாதார சீர்திருத்த முயற்சியில் மிகப்பெரிய நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.டி. வரி முதல் முறையாக பிரான்ஸ் நாட்டில் அமல்படுத்தப்பட்டதாகவும், தற்போது இந்த வரி 165 நாடுகளில் அமலில் இருப்பதாக அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி. வரி அமலாக்கம் தொடர்பாக ஜவுளித்துறை, வாகனத்துறை மற்றும் சில சிறு வணிகர்களிடையே உள்ள அச்சங்கள் குறித்து விரைவில் கூட இருக்கும் ஜி.எஸ்.டி. சபை கூட்டத்தில் விவாதித்து இத்துறையினர் தெரிவித்துள்ள ஐயப்பாடுகள் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். எனினும் இது தொடர்பான இறுதி முடிவு நிதி அமைச்சர் தலைமையிலான ஜி.எஸ்.டி. சபையின் முடிவுக்கு உட்பட்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறையினர் தெரிவித்த கருத்துகளை அடுத்து ஜி.எஸ்.டி. சபை கூடி 60 வகையான பொருட்கள் மீதான வரியில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இந்த வரியை அமல்படுத்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர் அடுத்த சில நாட்களில் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு மாநிலங்கள் இந்த வரியை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றி குறிப்பிட்ட அமைச்சர் இந்த வரிமுறையை அவர்கள் அமல்படுத்தவில்லையென்றால் அம்மாநிலங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

ஊரக பகுதிகளை சேர்ந்த மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு விவசாய விளைபொருட்கள் மற்றும் பழங்கள் இவ்வரிவிதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கிராமப்புறங்களில் இணைய கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதன் காரணமாக ஊரக தொழில்முனைவோர் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் பாதிப்பைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், கண்ணாடி ஒளியிழை கேபிள்கள் நாடெங்கும் பெரிய அளவில் பதிக்கப்பட்டு வருவதாகவும் இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனினும் ஜி.எஸ்.டி. வசதி (ஜி.எஸ்.டி. சுவிதா ) மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.