டாட்டா சன்ஸ் தலைவராக நியமனம் ஆகியுள்ள தமிழர் சந்திரசேகரன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!  

0

டாட்டா சன்ஸ் தனது தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி கடந்த ஆண்டு தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து தொடர்ந்து பலவகையான செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 53 வயதான சந்திரசேகரன், இந்தியாவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் இன் சிஇஒ மற்றும் எம்டி ஆக இருந்து வந்தார். தற்போது 108 பில்லியன் டாலர் மதிப்புள்ள நாட்டின் மிகப்பெரிய குழுமமான டாட்டா சன்சின் தலைவராகியுள்ளார்.  

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி, டாட்டா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டதில் இருந்து அதன் இடைக்கால தலைவராக ரத்தன் டாட்டா பதவி வகித்து வந்தார். தற்போது அந்த இடத்திற்கு சந்திரசேகரை நியமிக்க டாட்டா சன்ஸ் போர்ட் கூடி முடுவெத்துள்ளது. ஐந்து பேர் அடங்கிய குழு இவர் இந்த உயர் பதவிக்கு தகுதியானவர் என்று கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரத்தன் டாட்டா, டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், பெயின் கேப்பிடலின் அமித் சந்திரா, முன்னாள் தூதர்கள் ரோனென் சென் மற்றும் லார்ட் குமார் பட்டாச்சார்யா இந்த தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தனர் என்பது கூடுதல் தகவல். 

சந்திரசேகரன் பின்னணி மற்றும் அனுபவம்

1963 ஆம் ஆண்டு நாமக்கலில் பிறந்தவர் சந்திரசேகரன். தமிழ் வழிக்கல்வியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் அப்ளைட் சயின்சில் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி ஆர்.இ.சி’யில் கம்ப்யூட்டர் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். பெற்றோர்களுக்கு மூன்றாவது பிள்ளையான சந்திரசேகரனின் மூத்த அண்ணன் என்.ஸ்ரீனிவாசன், முருகப்பா குழுமத்தின் நிதி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1987 இல் டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் ப்ரோக்ரமராக இணைந்த சந்திரசேகரன், 2009 இல் டிசிஎஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஒ பொறுப்பிற்கு வந்தார். இன்று டாட்டா சன்சின் இத்தகைய பெரிய பதவியை அடைந்திருப்பது அவரது கடுமையான உழைப்பு மற்றும் தலைமைப்பண்புகளை காட்டுகிறது. 

டாட்டா குழுமத்தின், TCS இன் ‘க்ரவுன் ஜ்வெல்’ மென்பொருள் அங்கத்தின் தலைவராக இருந்த சந்திரசேகரன், அக்டோபர் 25, 2016 இல் டாட்டா சன்ஸ் போர்டின் இயக்குனராக தேர்வானார். பின்னர் டாட்டா சன்சின் தலைவர் பதவிக்கு இவரே தகுதியானவராக பரிந்துரைக்கப்பட்டதால் நேற்று இந்த அறிவிப்பு வந்துள்ளது. 

டாட்டா குழுமம் சைரஸ் மிஸ்ட்ரிக்கு எதிராக தேசிய நிறுவன சட்டத்தின் கீழ் சட்ட வழக்கை சந்தித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சந்திரசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செயல்பாடுகள் மற்றும் இந்த சவால்களை சந்திக்கப் போகும் முறைகளை இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்கள் உற்றுநோக்குவார்கள். 

புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட சந்திரசேகரன், நீண்ட தூர ஓட்டமான மராத்தான் ஓடுவதிலும் வல்லவர். இவர் பல மராத்தான் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகரமாக அதை முடித்தும் உள்ளார். உலகெங்கும் நடக்கும் மராத்தான் போட்டிகளிலும் ஆர்வத்துடன் இவர் கலந்துகொள்வது வழக்கம்.

”மராத்தான் ஓடுவது என் எண்ணங்களை வடிவமைத்தில் உதவியுள்ளது, குறிப்பாக ஒரு தலைவராக. என்னை ஒரு நீண்ட கால சிந்தனையாளன் என்றும் கூறிக்கொள்ளலாம். ஒரு பிசினசை நடத்துவதும் மராத்தானில் ஓடுவதற்கு சமமாகும். பயணிக்கவேண்டிய தூரத்தை அளவிட்டு, அதற்காக தயார்படுத்திக்கொண்டு, வரவிருக்கும் தடைகளை சமாளித்து போட்டி சமயத்தில் வேகத்தை கூட்ட தெரிந்திருக்கவேண்டும்,” 

என்று ஒரு பேட்டியில் சந்திரசேகரன் கூறியுள்ளார். சந்திரசேகரன், டிசிஎஸ் சிஇஒ’ ஆக இருந்தபோது அதன் வருவாயை 6 பில்லியன் டாலர்களில் இருந்து 16 பில்லியன் டாலருக்கு உயர்த்தி, இலாபத்தை 1 பில்லியன் டாலரில்லிருந்து 4 பில்லியன் டாலர் அளவிற்கு கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.Stories by YS TEAM TAMIL