உலகின் மிக உயரமான இரும்பு மனிதர் படேலின் சிலை உருவானது எப்படி?

சுதந்திரதேவி சிலையைவிட இருமடங்கு உயரமான 182 மீட்டர் உயரத்தில் உருவான சர்தார் வல்லபாய் படேலின் இந்த ’ஒற்றுமையின் சிலை’ 34 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

0

182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த சிலை குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணை அருகே உள்ள சாது பேட் என்கிற குட்டித்தீவில் நிறுவப்பட்டுள்ளது.

’ஒற்றுமைக்கான சிலை’ என பெயரிடப்பட்டுள்ள இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில் இந்தச் சிலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது,

சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 12 சதுர மீட்டர் அளவிற்கு செயற்கை ஏரியும் உருவாக்கப்பட்டுள்ளது என என்டிடிவி தெரிவிக்கிறது.

வழக்கறிஞரான சர்தார் வல்லபாய் படேல், ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். சுதந்திரத்திற்கு பிறகு, 562 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணையக் காரணமாக இருந்தவர் அவர். அத்துடன் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற குடிமைப்பணிகள் உருவாகும் முயற்சிகளுக்கும் வித்திட்டவர். 

பட உதவி: டைம்ஸ் நவ்
பட உதவி: டைம்ஸ் நவ்

மிகப்பிரம்மாண்டமான ’ஒற்றுமைக்கான சிலை’ திறக்கப்பட்டுள்ள நிலையில் உலகின் மிக உயரமான இந்த சிலையின் சிறப்பம்சங்கள் சிலவற்றை இங்கே காண்போம்:

• 2,989 கோடி ரூபாய் செலவில் லார்சன் & டூப்ரோ உருவாக்கிய இந்தச் சிலை நியூயார்கில் உள்ள சுதந்திர தேவி சிலையைக் (93 மீட்டர்) காட்டிலும் இரு மடங்கு உயரமானதாகும்.

• இந்தியாவில் சுமார் 200 சிற்பங்களை உருவாக்கியுள்ள பத்ம பூஷன் விருது பெற்ற 93 வயது ராம் வி.சுதர் என்கிற சிற்பியின் வடிவமைப்பில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

• இதற்கான கட்டுமானப்பணிகள் 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி துவங்கப்பட்டு பணி நிறைவடைய 34 மாதங்கள் ஆனதாக ’தி இந்து’ குறிப்பிடுகிறது.

• 70 ஆயிரம் டன் சிமெண்ட், 18,500 டன் ரீஇன்ஃபோர்ஸ்மெண்ட் கம்பி, 6 ஆயிரம் டன் ஸ்ட்ரக்சுரல் ஸ்டீல், வெளிப்புற பயன்பாட்டிற்கு 1,700 மெட்ரிக் டன் வெண்கலம் ஆகியவற்றைக் கொண்டு இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

• இந்தச் சிலையில் ஐந்து பகுதிகள் உள்ளன. வடிவமைப்பின்படி சிலையின் முழங்கால் வரை முதல் பகுதியாகும். இதில் தரை, இடைமட்டம், மேற்கூரை ஆகியவை உள்ளது. சிலையின் தொடைப் பகுதி வரை 149 மீட்டர் உயரம் வரை இரண்டாவது பகுதியாகும். மூன்றாவது பகுதி 153 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது பார்வையாளர்களுக்கான பகுதியாகும். நான்காவது பகுதி பராமரிப்பிற்கான பகுதியாகும். சிலையின் தலை மற்றும் தோள் வரையிலும் இருப்பது ஐந்தாவது பகுதியாகும்.

• ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்கள் அமரும் வகையில் பார்வையாளர்கள் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கே பெருமை சேர்க்கும் இந்தக் கட்டுமானம் எளிதான பணியாக இருக்கவில்லை. இந்தியாவின் இரும்பு மனிதரை கௌரவிக்கும் வகையில் சிலையை வடிவமைக்க எல் & டி பொறியாளர்கள் 2,000 புகைப்படங்களை ஆராய்ந்தனர். இறுதி வடிவமைப்பிற்காக பல்வேறு வரலாற்றாசிரியர்களையும் கலந்தாலோசித்தனர். பின்னர் பொறியாளர்களைக் கொண்டு 2டி புகைப்படம் 3டி மாதிரியாக மாற்றப்பட்டது.

கட்டுரை : THINK CHANGE INDIA