வாக்காளர்கள் கவனத்துக்கு... டாப் 10 வீடியோ குறும்பதிவுகள்!  

0

தமிழகத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாவதற்காக தேர்தல் ஆணையம் மட்டும் அல்ல, தனிநபர்களும் ஊடகங்களும் கூட விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்களிப்பதன் அவசியத்தை மட்டுமின்றி, பணம் வாங்காமல் ஓட்டுப் போடுவதன் மேன்மையையும் சொல்லும் டாப் 10 வீடியோ வடிவிலான குறும்படைப்புகள் இதோ...

மவுனத்தில் சாட்டையடி!

ஒரு வரி வசனம் கூட இல்லை. ஆனால், நம் விரலில் மை இல்லாமல் இருப்பது அவமானத்துக்குரியது என்பதையும், ஓட்டுப் போடுவது பெருமிதத்துக்குரியது என்பதையும் சினிமாவுக்கு உரிய மொழி நடையில் மிக அற்புதமாக சொல்லியிருக்கும் இந்த இரண்டரை நிமிட குறும்படம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தன்மானத் தமிழன்!

அல்வா சின்னத்துக்கு வாக்களிக்க பணம் நீட்டப்படுகிறது. அதற்கு சாமானியனின் ரியாக்‌ஷன் தெறிப்பு ரகம். பகடியுடன் சமூக அக்கறையை கச்சிதமாகக் கலந்து தன்மானத் தமிழனுக்கு ஒருவரை அடையாளம் காட்டும் 2 நிமிட கூர்மையான குறும்படம் இது.

பெருமித ப்ளாக் மார்க்

நீங்க ப்ளாக் மார்க் வாங்கியிருக்கீங்களா? - இந்தக் கேள்வியை ஒருமுறை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பதில் எதுவாக இருந்தாலும், பெருமிதம் தரும் ப்ளாக் மார்க்கை சுட்டிக்காட்டுகிறது இந்த ஒரு நிமிட வீடியோ பதிவு!

பளார்... பளார்...

வாக்கு என்பது உரிமை - இதை உணர்த்துவதற்கு பளார்... பளார்... அறைவது போல் நெத்தியடி பாணியில் சொல்லியிருக்கு இந்த ஒரு நிமிடக் குறும்படம் பார்க்கப்பதற்கு மட்டுமல்ல... பகிர்வதற்கும்!

அரை நிமிடக் கவிதை

வாக்களிக்கும் விரல்கள்தான் வல்லமை மிக்கவை எனச் சொல்வதற்கு லாஜிக் மீது கவனம் செலுத்தாமல் கவிதைத் தனமாக நறுக்கென மெசேஜ் சொல்கிறது இந்த அரை நிமிட வீடியோ கவிதை.

மே 16 - டெலிவரி டேட் ஃபார் தமிழ்நாடு

நாம் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும், அந்தக் கடமையின் பின்னுள்ள மகத்துவத்தையும் மிகச் சிறப்பாக சுவாரசியம் குறையாமல் சொல்லியிருக்கிறது, இந்த 'மே 16 - டெலிவரி டேட் ஃபார் தமிழ்நாடு' குறும்படம். இயல்பான நடிப்பும், அதிகம் துருத்தாத வசனமும், தெளிவான காட்சியமைப்பும் இந்த 6 நிமிட குறும்படத்தின் பலம்.

அனிமேஷனில் தெறிப்பு

'100 சதவீத வாக்குப்பதிவு முக்கியம் ஏன்?' என்ற கேள்விக்கு, நம் அன்றாட வாழ்வின் உதாரணங்களை முன்வைத்தே எளிமையாகவும் தெளிவாகவும் சொல்கிறது இந்த அனிமேஷன் படைப்பு. அழகான அனிமேஷனும் உறுதியான வரிகளும் இந்த ஒன்றரை நிமிட வீடியோவின் மிகச் சிறப்பு.

நாட் ஃபார் சேல்

'ஓட்டுக்குப் பணம் வாங்குவீர்களா?' என்று பலதரப்பட்ட மக்களிடம் கேட்கிறார் ஜெயச்சந்திரன் ஹேஷ்மி. 'பணம் வாங்க தயங்கமாட்டேன்' என்று படித்தவர்களும் கருத்து கூற, 'தன்மானத்தை விட்டுத்தர மாட்டேன்' என்று படிக்காதவர்களும் சொல்வதுதான் நிதர்சனமான உண்மை. அது, இந்த 3 நிமிட வீடியோவில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.

நாம் ஏன் ஓட்டுப் போடணும்?

நாம் ஏன் ஓட்டுப் போடணும் என்ற இளம் தலைமுறையினரின் அடிப்படைக் கேள்விக்கு அடுக்கடுக்காக பதில்களை அழுத்தமாகச் சொல்கிறது இந்த 2 நிமிட வீடியோ பதிவு. ஃபேஸ்புக் லைக் வாங்குவதற்காக ஓட்டுப் போட்டாலும் அது வரவேற்கத்தக்கதே என்று சொல்வது ஹைலைட்.

என்னாத்துக்கு ஓட்டு?

என்னாத்துக்கு ஓட்டு? என்று தொடங்கும் இந்த கானா பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியிருக்கிறார். நடிகர் பிரபுதேவா பாடியிருக்கிறார். நம் மனதில் கலகம் செய்யும் ஒன்றரை நிமிட கானா இது.