எல்லைக்குத் தயாராகும் ராணுவ அதிகாரிகள்... 

0

670 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது, சென்னை ராணுவ அதிகாரிகள் பயற்சி மையம். சென்னையில் பரங்கிமலை, பீகார் மாநிலத்தில் கயா மற்றும் டேராடூன் ஆகிய மூன்று இடங்களில் தான் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை பரங்கி மலையில் அதிகாரிகள் பயிற்சி மையம் 1963 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதிகாரிகள் பயிற்சி பள்ளியாக தொடங்கப்பட்டது. பின்னர் 1988 ஆம் ஆண்டு அதிகாரிகள் பயிற்சி மையமாக தரம் உயர்த்தப்பட்டது.

பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஒரே நேரத்தில் 750 பேருக்கு பயிற்சியளிக்க முடியும். காலை 5 மணிக்கு தொடங்கும் ட்ரில் பயிற்சியை தொடர்ந்து குதிரைப் பந்தயம், ஆயுதப்பயிற்சி என பல்வேறு கட்டங்களாக பயிற்சியளிக்கப்படுகிறது. போரில் பயன்படுத்திய யுக்திகளும் இவர்களுக்கு பாடங்களாக கற்பிக்கப்படுகின்றன.

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் சேர, இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாத பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இவர்கள் அதிகாரிகளாக பணியமர்த்தப்படுவார்கள்.

சென்னையில் பரங்கிமலையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நம் இந்திய ராணுவத்தால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீர், அசாம், மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளின் சீதோஷ்ண நிலை குறித்து வீரர்கள் அறியும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக நூலகத்தில், ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில் 35 ஆயிரம் நூல்கள் இடம்பெற்றுள்ளன.

கயிறு ஏறுதல், முள் கம்பியின் கீழ் குனிந்து செல்லுதல், படகு பயிற்சி என பல்வேறு கட்ட பயிற்சிகள் இங்குள்ள ராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இராணுவத்தின் நடைமுறைகள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அணிந்து கொள்ளக்கூடிய உடைகள் ஆகியவற்றி பற்றி விளக்கப்படுகிறது.

இந்திய ராணுவத்தில் மிகப் பழமையான படைப்பிரிவு மெட்ராஸ் ரெஜிமெண்ட். இந்தியாவில் பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒரே மையம் சென்னை அதிகாரிகள் பயிற்சி மையம்தான்.

ஒவ்வொரு அதிகாரிக்கும் இங்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஐந்து முதல் 8 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு அதிகாரிகளும் இங்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஐந்து முதல் 8 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி மையத்தில் இருந்து பெறக்கூடிய தானிய, காய்கறி உள்ளிட்ட கழிவுகளை கொண்டு நாளொன்றுக்கு சுமார்  40கிலோ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு உணவகத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தற்போது பயிற்சி பெறும் 264 பேர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி, ராணுவ அதிகாரிகளாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ளனர். ஒவ்வொரு நாள் பயிற்சியும் ஒரு போர்க்களத்தில் சாகசப் பயணம் சென்று வந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் ராணுவ அதிகாரிகள் எல்லைக்கு செல்ல தயாராகிறார்கள்.