வை-ஃபை, சிசிடிவி, ஏசி பள்ளிகளுடன் மெட்ரோவுக்கு சவால் விடும் கிராமம்!

0

புன்சாரி... குஜராத்தில் உள்ள குக்கிராமம். ஆனால், மெட்ரோ நகரங்களுக்கே சவால் விடும் வல்லமை கொண்டது. இந்தக் கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள், குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள், ஏ.சி. வசதி பள்ளிகள் மற்றும் பயோமெட்ரிக் எந்திரங்கள் என அனைத்தும் இருக்கின்றன. எல்லா வீடுகளிலுமே கழிப்பறை வசதி உள்ளது. இரண்டு தொடக்கப் பள்ளிகள், ஓர் ஆரம்ப சுகாதார மையம், முழுமையான தெருவிளக்குகள் மற்றும் ஓர் வடிகால் அமைப்பும் செயல்படுகின்றன.

இந்த மாற்றங்களுக்குப் பின்னால் ஹிமான்ஷு படேல் எனும் ஓர் இளம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஒற்றை மனிதராக வீற்றிருக்கிறார். கடந்த 2006-ல் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றபோது இவருக்கு வயது 23. தன் உடல் பொருள் ஆவியை முழுமையாக அர்ப்பணித்து ஓர் அற்புத கிராமத்தை உருவாக்கியிருக்கிறார் ஹிமான்ஷு.

"நான் பதவியேற்றபோது என் கிராமத்தில் எதுவும் இல்லை. அப்போது, நரேந்திர மோடி மாநில முதல்வராக இருந்த நேரம். நகரங்களைப் போலவே கிராமங்களிலும் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனை அவரிடம் இருந்தது" என்று அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த களமிறங்கி, அதில் மகத்தான வெற்றியையும் பெற்ற ஹிமான்ஷு பிபிசி-க்கு அளித்த பேட்டியில் விரிவாகப் பேசியிருக்கிறார்.

வடக்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த ஹிமான்ஷு அரசு நிதியை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி 10 ஆண்டுகளில் கிராமத்தை அசத்தலாக மேம்படுத்தினார். கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் கவனம் செலுத்தினார்.

அரசு ஒதுக்கும் நிதியில் இருந்துதான் இவை அனைத்தையும் செய்தாரே தவிர, கூடுதல் நிதி எதையும் பெறவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. "மாநில மற்றும் மத்திய பட்ஜெட்டில் போதுமான ஒதுக்கீடுகள் கிடைக்கின்ற நிலையில், அதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படவே இல்லை. நமக்கான ஒதுக்கீட்டை முறைப்படி கச்சிதமாக பயன்படுத்தினாலே யாராலும் நிச்சயமாக அதிசயங்களை நிகழ்த்திட முடியும்" என்று என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில் தன் எளிய வியூகத்தையும் சொன்னார் ஹிமான்ஷு.

ஆக்கம்: திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்