ரயில் விபத்தில் இருந்து நண்பனை காப்பாற்றிய 12 வயது கேரள மாணவன்!

0

12 வயது செபாஸ்டியன் வின்சண்ட், ஏழாம் வகுப்பு படிக்கிறார். ஆலப்புழாவில் உள்ள லியோ உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் அவர், 2016-ம் ஆண்டு ஜுலை 19-ம் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு சைக்கிளில் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார்.

பட உதவி: தி நியூஸ் மினிட்
பட உதவி: தி நியூஸ் மினிட்

அப்போது அவர்கள் ஒரு ரயில்வே ட்ராக்கை கடக்கும்போது, வேகமாக ரயில் அவர்களை நோக்கி வந்தது. மிக அருகில் ரயில் வந்தபோதே அவர்கள் அதை உணர்ந்தனர். பயத்தில் ட்ராக்கை விட்டு எல்லாரும் ஓடினார்கள். அந்த அவசரத்தில், செபாஸ்டியனின் நண்பன் அபிஜித் ட்ராக்கில் விழுந்துவிட்டான். சைக்கிளுடன் மாட்டிக்கொண்டு ட்ராக்கில் விழுந்ததால் அவனால் எழுந்து ஓடமுடியவில்லை. இதுபற்றி செபாஸ்டியன் டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில்,

”நாங்க ரயில்வே ட்ராக்க கடந்து வந்தபோது, அபிஜித்தின் ஷூ ரெயில்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டது. அப்போது அவன் கீழே விழுந்துட்டான், அவன் மேலே சைக்கிளும் அவன் பையும் விழுந்துடுச்சு. நான் உடனே அவன் சைக்கிளை இழுத்துபோட்டேன். ஸ்கூல் பேகையும் எடுத்து அவனை வேகமா ரயில் வரத்துக்கு முன் ட்ராக்கை விட்டு வெளியே இழுக்க பாத்தேன், ஆனால் முடியவில்லை அதனால் அவனை உதைத்து ட்ராக்கை விட்டு தள்ளினேன். நல்லவேளை ரயில் அவன் மீது இடிக்காமல் வேகமாக கடந்து போனது. இதில் என் கைகளில் முறிவு ஏற்பட்டது,” என்றார்.

செபாஸ்டியனின் குடும்பத்தாருக்கு அவரின் இந்த செயலும், காப்பாற்றும் குணமும் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அவரின் அப்பா ஆலப்புழாவின் பீச்சில் உயிர்காப்பாளனாக பணியில் இருப்பதால் அந்த இரக்கக்குணம் செபாஸ்டியனுக்கும் வந்திருக்கலாம் என்று நினைக்கின்றனர். நண்பரை விட்டுவிட்டு தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ளாமல் கொஞ்சமும் தன் உயிரைப் பற்றி யோசிக்காமல் துணை நின்றதை பலரும் பாராட்டியுள்ளனர். 

12 வயது செபாஸ்டியனின் கைகள் இதில் முறிவானதால் வீட்டில் திட்டு கிடைக்கும் என்று பயந்து அஞ்சினார். அது பற்றி தி நியூஸ் மினிட் பேட்டியில் பேசிய அவரின் அப்பா,

”செபாஸ்டியன் எங்களுக்கு பயந்து நடந்ததை சொல்லவில்லை. அபிஜித்தின் அம்மா வந்து எங்களிடம் உண்மையை சொன்னதுமே விஷயம் புரிந்தது. என் மகன் செய்துள்ள வீரதீர செயல் அப்போதே எங்களுக்கு விளங்கியது,” என்றார்.

வீரச்செயல் புரிந்த செபாஸ்டியனுக்கு இந்த ஆண்டிற்கான வீரதீர செயல் விருது பிரதமர் மோடியால் அண்மையில் வழங்கப்பட்டது. 

கட்டுரை: Think Change India