ஏழைச் சிறுவர்களுக்கு புத்தக நன்கொடை!

0

நூல் வாசிக்கும் ஆர்வம் இருந்தாலும் அனைவராலும் பணம் கொடுத்துப் புத்தகங்கள் வாங்க முடிவதில்லை. அத்தகையவர்களுக்கு நூல்களை வழங்குகிறது பிராதம் புக்ஸ்

முன்கதைச் சுருக்கம் - அதற்கு நாம் 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னோக்கிச் செல்ல வேண்டும். பிராதம் எனும் அரசு சாரா தொண்டமைப்பு இந்திய உள்ளூர் பிராந்திய மொழியில் புத்தகம் தேவைப்படும் சிறுவர்களுக்கு நாடெங்கும் நூலகங்களை அமைத்துள்ளது. இப்போதும் கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே காணக்கூடிய அரிதான தலைப்பிலான புத்தகங்களை வெளியீட்டுச் சந்தைக்குக் கொண்டு வருகிறது. புறக்கணிக்கப்பட்ட பிராந்திய மொழிகளில் கட்டுப்படியான விலைக்கு வழங்குகிறது. அதற்காகவே உருவாக்கப்பட்ட பிராதம் புக்ஸ் குழந்தை நூல்களை லாப நோக்கின்றி வெளியிட்டு வருகிறது.

பிராதம் புக்ஸின் தலைமை நிர்வாகி சுஜான் சிங்
பிராதம் புக்ஸின் தலைமை நிர்வாகி சுஜான் சிங்

இவர் கூறுகிறார் –

இந்தியாவில் குழந்தைகளின் அறிவு வளத்தைப் பெருக்கக் கூடிய அரிதான துணைநூற்களைப் பெறுதல் மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. தேவைப்படுகிற மொழிகளில் போதிய அளவில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பெரும் பண வசதியில்லாதவர்கள் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பதில்லை. பெரும்பாலான வெளியீட்டாளர்கள் பெருநகர்ப்புற உயர்தட்டு, நடுத்தட்டு வருமானப் பிரிவினரை மனதிற் கொண்டுதான் புத்தகங்களை வெளியிடுகிறார்கள். தேவையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக புத்தகங்கள் தேவைப்படுகிற குறைவான வருமானம் ஈட்டுவோருக்கு குறைந்த லாபத்தில் புத்தகங்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது பிராதம் புக்ஸ்.

இங்கே இப்பொழுது

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பதினெட்டு பிராந்திய மொழிகளில் 140 நூற்களை வெளியிட்டுள்ளார்கள் அவர்கள். முதல் எட்டு ஆண்டுகளாக தங்களது புத்தகங்களின் விலையை உயர்த்தவே இல்லை. இப்போதும் கூட அவர்கள் வெளியீடு புத்தகங்களின் சராரசி விலை 35 ரூபாய் தான். முன்பு அதற்குப் பதிலாக 25 ரூபாயாக இருந்தது. தாங்கள் வெளியிட்ட குழந்தைக் கதைகள் மற்றும் படங்களுக்கு திறந்த உரிமம் வழங்குபவர்களாக 2008 ஆம் ஆண்டு குழந்தை நூல் வெளியீட்டாளர்களில் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்தார்கள். அதாவது பிராதம் வெளியிட்ட நூல்களின் உள்ளடக்கம், மற்றும் படங்களை முழுமையாகவும் அல்லது ஒரு பகுதியாகவும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி மீளுற்பத்தி செய்வதற்கு உரிமை வழங்கினார்கள்.

வாசிப்புப் பழகத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். One day one story (நாளும் ஒருகதை) என்ற இயக்கம் பல்வேறு இந்திய மொழிகளிலும் பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களைக் கொண்டு நாடுமுழுதும் நடத்தப்படுகிறது. உலக கதை சொல்லும் தினத்தன்று வளரும் கதை ஆசிரியர்களுக்காகக் கதைப்போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. இது வளரும் கதையாசிரியர்களின் கதைகளை பிற மொழிகளில் பிற வெளியீட்டாளர்கள் பயன்படுத்துவதற்கு ஒருவாய்ப்பாகவும் அமைந்தது.

கதை சொல்லல் முறையில் கதையைக் கேட்பவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதைக் காணமுடிகிறது. அதற்குரிய தீர்விற்கு ஏற்றவாறு வேலைத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. சிறுவர்களின் அறிவு வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பல்வேறு அமைப்புகளால் நூல்களை வழங்கச் சாத்தியமற்ற நிலையில் இருப்பதால் அவ்வப்போது பிராதம் புக்ஸிடம் இலவச நூல்களைக் கோருவது உண்டு. அப்படிப்பட்டவர்களின் தேவைக்கு ஏற்ப நூல்களை இலவசமாக வழங்க முடியாத போது லாபநோக்கற்ற வெளியீட்டாளராகச் செயல்படுகிறது பிராதம் புக்ஸ். அதேபோல் பிராதம் புக்ஸிற்கு பல அமைப்புகள் உதவிக் கரம் நீட்டவும் முன்வருகின்றன. ஒரு தொகையை பிராதம் புக்ஸில் முதலீடு செய்வதன் மூலம் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறனர்.

புத்தக நன்கொடை வழங்குக –

ஒவ்வொரு குழந்தையின் கையிலும் புத்தகத்தைக் கொண்டு சேர்ப்பதைத் தங்களது இலக்காகக் கொண்டுள்ளனர். ஒன்று வாசிப்பு ஊடகங்களை அதிக அளவில் உருவாக்குதல், இரண்டு அதன் தொடர்ச்சியாக புத்தகங்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கு அவற்றைக் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். இந்தியாவில் குழந்தைகளின் எண்ணிக்கை முப்பது கோடி. பிராதம் அச்சிடும் புத்தகங்கள் ஆண்டிற்கு சுமார் பத்து லட்சம். இந்த இடைவெளியைச் சுட்டிக் காட்டும் சுஜன் கூறுகிறார் ‘’நாங்கள் அற்புதமான புத்தகங்களை வெளியிடுவது மட்டுமே போதுமானதல்ல என்பதை விரைவிலேயே புரிந்து கொண்டோம். நாங்கள் நிர்ணயித்துள்ள இலக்கிற்குரிய எதார்த்த நிலைக்கு ஏற்ப புத்தாக்கப் பண்புடன் கூடுதலாகச் செயல்பட வேண்டியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோம்’’.

புத்தக நன்கொடை என்ற சிந்தனை அவர்களது நோக்கம் நிறைவேறும் வகையில் விரிந்த தாக்கத்தையும் தீர்வையும் வழங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். பொதுவில் வழங்கப்படும் நிதிதான் நூல்கள் தேவைப்படுவோரின் தேவையை நிறைவேற்றும். நிதி திரட்டும் இயக்கம் வெற்றிகரமாக நிறைவேறியதும் புத்தகத்தின் பெருமானத்திற்குரிய 100% திரட்டப்பட்ட பணம் புத்தகம் வழங்கும் அமைப்புகளுக்கு அனுப்பப்படும்.

இந்தச் செயல்பாடுகள் மிக நியாயமாகவும், மிக எளிமையாகவும் நடைபெறும். பயன்பாட்டாளர் இணையத் தளத்தில் உட்சென்று தனது தேவையைப் பதிவு செய்ய வேண்டும். பிராதம் குழுவினர் பின்புலச் சோதனையை நடத்துவார்கள். அதற்கடுத்து இணையதள இயக்கத்தை நிறைவேற்றி முடிப்பார்கள். நிதி திரட்டுவோர் அனைத்து அம்சங்களிலும் தூய்மையாகச் செயல்படுவார்கள். இந்த நிதி திரட்டலின் மூலமாக குழந்தைகள் தினத்தன்று 50000 புத்தகங்களை குழந்தைகளுக்கு அளிக்க முடியும் என்று கருதுகிறார்கள்.

சில எடுத்துக்காட்டுகள்

இந்த அற்புதமான இயக்கத்தின் சரியான எடுத்துக்காட்டு அவலோகிடேஷ்ரா ட்ரஸ்டின் வாசிப்பு அரங்கிற்காக நடத்தப்பட்ட ஒன்று. லே மற்றும் லடாக்கில் உள்ள அவலோகிடேஷ்ரா ட்ரஸ்ட் அங்குள்ள தொலைதூர கிராமங்களில் குழந்தைகள் காப்பு மற்றும் கற்றலுக்காக கற்றல் நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. அவர்களது அமைப்பு செயல்படும் லே இல் இருந்து வெகுதொலைவிற்கு அப்பால் 40 இடங்களில் வாசிப்பு அரங்கங்களையும், பள்ளிகளில் புத்தக அறைகளையும், கற்றல் மையங்களையும் உருவாக்கியுள்ளனர். இவையனைத்திற்கும் தேவையான வாசிப்பு மற்றும் கற்றல் சாதனங்களையும் அவற்றிற்கு வழங்கியுள்ளனர். பெரும்பாலானவை இந்தி, உருது, ஆங்கிலம், லடாக்கி, திபெத்திய மொழிகளிலான குழந்தைகள் புத்தகங்கள்.

மற்றொரு இயக்கம்; சேவை நோக்கத்துடன் இயங்கும் இளைஞர்களுடன் இணைந்து செயல்படும் மம்ஸ் கனைக்ட் என்பவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டது. 25 இல் இருந்து 40 வயது வரையிலான மாணவர்களைக் கொண்ட இணைப்புப் பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இப்பள்ளி பெங்களூரு பூர்ணா பிரஜ்னா லே அவுட்டில் உள்ளது. சேவை மனப்பான்மையுடன் இயங்கும் இளைஞர்கள் அங்குள்ள (4 வயதில் இருந்து 14 வயது வரையிலான) மாணவர்களின் கற்றலுக்கு உதவி புரிகின்றனர். இப்பகுதியில் குடியமர்ந்துள்ள கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த அம்மாணவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளியில் சேர்ப்பிக்கப்பட உள்ளனர். இந்த இயக்கத்திற்கு ஒரு வாரத்திற்குள் நிதி வழங்கப்பட்டு விட்டது. சேவை இளைஞர் அமைப்பைச் சேர்ந்த ஸ்வாதி கூறுகிறார் – ‘’நாங்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டோம். எங்கள் பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்’’

தாங்கள் பயிலும் வகுப்பிற்கு ஏற்ற வாசிப்புத் திறன் இந்திய மாணவர்களில் 50% பேருக்குக் கிடையாது என்கின்றன பல்வேறு வகையான ஆய்வு முடிவுகள். எழுத்தறவுப் பயிற்சி வழங்கப்பட்ட பிறகு பிள்ளைகள் பாடப் புத்தகங்கள் வாசிப்பு வெற்றிகரமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதேசமயம் வாழ்க்கையின் பிற வாசிப்புகளும் சிறப்பாக உள்ளன.  

ஆங்கிலத்தில்: Snigdha Sinha | தமிழில்: போப்பு