பிரதமர் மோடியை ஊக்கப்படுத்திய தீப் நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி!

0

டெஹ்ராதூனை சேர்ந்த 17-வயது பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தனது 30-வது பகுதியான ‘மன் கி பாத்’ இல் அந்த பெண் அவருக்கு அனுப்பிய செய்தியைப் பற்றி நாடே கேட்கும் வண்ணம் லைவில் பேசினார்.

டெஹ்ராதூனில் உள்ள தீப் நகர் என்ற பகுதியை சேர்ந்த காய்த்ரி பெக்வால், ஒரே தினத்தில் நாடு போற்றும் பிரபலம் ஆனார். காயத்ரி, தூய்மையான இந்தியாவை அடைவதற்கான வழிகள் பற்றிய ஒரு செய்தியை பிரதமர் மோடிக்கு அனுப்பி இருந்தார். அதை ரேடியோ நிகழ்ச்சியில் வாசித்தது காயத்ரியை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது. மோடியின் அன்றைய தின ரேடியோ பேச்சு, காயத்ரியின் செய்தியை ஒட்டியே அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவி காய்த்ரி, சாயா தேவி மற்றும் குலாப் சிங்கின் மகளாவார். பிரதமருக்கு அவர் அனுப்பிய செய்தியில்,

’மக்களுக்கு நாம் தூய்மை என்பதன் முக்கியத்துவத்தை புரியவைக்க வேண்டும். நான் தினமும் பள்ளிக்கு நடந்து போகும் ரிஸ்பானா ப்ரிட்ஜின் கீழ் ஓடும் நதியில், குப்பையும், தேவையற்ற பொருட்களும் மிதந்து செல்வதை பார்த்துவருகிறேன். மக்கள் தண்ணீரில் குப்பையை தூக்கி எரிவதும், அதனால் மாசு ஏற்படுவதும் நடக்கிறது. தூய்மை பற்றிய இத்தனை விழிப்புணர்வும், பள்ளி என்எஸ்எஸ் மூலம் சுத்தப்படுத்தும் முகாம்கள் நடத்தியும் இந்த பிரச்சனை தொடர்கின்றது. நீங்கள் இதற்காக ஒரு குழுவை இங்கே அனுப்பி, பிரச்சனைக்கு தீர்வு கண்டு, இதை மீடியா மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன், என்று அனுப்பி இருந்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின் படி,

”நான் மோடி அவர்களுக்கு ஜனவரி மாதத்தில் ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன், ஆனால் அது போய் சேர்ந்ததா என தெரியவில்லை. அண்மையில், மார்ச் 24-ம் தேதி, நான் என் ஆடியோ பதிவை டோல் ப்ரீ நம்பரில் அனுப்பி இருந்தேன். மோடி அவர்கள் அதைப் பற்றி குறிப்பிட்டதும், இந்த விஷயத்தை தன் 30-வது பகுதியில் முக்கியமாக எடுத்துக்கொண்டு பேசியது என்னை ஆகாயத்துக்கே கொண்டு சென்றது,” என்றார். 

காயத்ரிக்கு ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது. பெண்கள், கல்வி மற்றும் சுத்தம்-சுகாதாரத் துறைகளில் பணிபுரியவேண்டும் என்று திட்டம் வைத்துள்ளார். 

மேலும் பேசுகையில்,

“டீ விற்றவர் பிரதமர் ஆக முடிந்ததென்றால், வாழ்க்கையில் எதுவும் சாத்தியம். தடைகளை உடைத்து நாட்டை தலைமை தாங்கி, கையில் துடப்பத்தை எடுத்து தூய்மை பற்றி அவரால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றால், நாம் ஒவ்வொருவரால் அதை செய்யமுடியாதா என்ன? எல்லாரும் ஒன்றிணைந்து இதில் கைக்கோர்த்தால் நம் நாட்டை சுத்தமாக்குவது சுலபமான காரியம்,” என்றார்.

காய்திரியின் பெற்றோர்களும் இதனால் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். 

“நாங்கள் காயத்ரியை நினைத்து பெருமைப் படுகிறோம். எல்லாருக்கும் அவளை போன்ற ஒரு மகள் இருக்கவேண்டும். பெண்களுக்கு சுதந்திரம் அளிப்பதும், அவர்கள் தங்கள் குரலை எழுப்புவதும் முக்கியமாகும். அவளின் முயற்சிகள் மூலம் இந்திய மக்களை ஊக்கப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும்,” என்றனர். 

பிரதமர் மோடி, தனது 30-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், காயத்ரியின் பெயரைச் சொல்லி, “இந்த பெண்ணின் கோவம் மற்றும் தூய்மை பற்றிய அக்கறை, ஒரு நல்ல தொடக்கத்தை காட்டுகிறது,” என்றார். இதே போல் இந்திய மக்கள் அனைவரும் அசுத்தத்தைக் கண்டு கோபமுர வேண்டும். அந்த மாணவி இந்த பிரச்சனையை கையில் எடுத்து, எல்லாரும் இதைப் பற்றி சிந்திக்கவேண்டும் என்று நினைப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஸ்வச் பாரத் அப்யான் திட்டம் என்பது, தூய்மையான நாட்டை அமைக்க ஏற்படுத்திக்கொள்ளும் ஒழுங்குமுறையை நோக்கியது. இளம் சந்ததியினர், இதை புரிந்து கொண்டு முக்கிய பங்கு ஆற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் மோடி. 

கட்டுரை: Think Change India