திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிக்கவேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு! 

0

இனி, சினிமா தியேட்டர்களில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன்பு, நமது தேசிய கீதம் ஒலிப்பரப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்பு வெளியிட்டுள்ளது. தேசிய கீதம் ஒலித்துக்கொண்டிருக்கும் போது, திரையில் இந்திய தேசிய கொடியின் படத்தை திரையிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தேசிய கீதம் ஒலிக்கும் போது திரையரங்கில் உள்ளோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற பென்ச் அடங்கிய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதாவ் ராய் இந்த தீர்ப்பை வழங்கினர். மேலும் அவர்கள் இதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளனர்.

“தேசிய கீதம் ஒலிக்கும் போது, அங்குள்ள எல்லாரும் மரியாதை செலுத்தவேண்டும். இது எல்லார் மனதிலும் நாட்டுப்பற்றையும், தேசியவாத எண்ணத்தையும் அறிவுறுத்தும்,”

என்று நீதியரசர்கள் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டது. ஷ்யாம் நாராயண் செளஸ்கி என்ற போபாலைச் சேர்ந்த தன்னார் தொண்டு மையம் நடத்தும் ஓய்வு பெற்ற பொறியாளர் தொடர்ந்த வழக்கு இது. அவரது வழக்கறிஞர் அபினவ் ஸ்ரீவஸ்தவ், அவர் சார்பாக இந்த வழக்கில் வாதாடினார். Prevention of Insults to National Honour Act, 1971 எனும் சட்டத்தை திரையரங்குகள் மதிப்பதில்லை என்று நீதிமன்றத்தில் கூறினார். அதோடு, ஒரு சில நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் ஒலித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் மைக்கில் இடையூறு செய்து பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதை விசாரித்த நீதிபதிகள், தேசிய கீதத்தை ஒரு பொழுதும் விளம்பரத்துக்காகவோ, தவறாக பயன்படுத்தவோ அனுமதிக்கமுடியாது என்றனர். 

“தேசிய கீதம் நம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு சின்னமாகும். அதை மக்கள் உணரவேண்டிய தருணம் வந்துவிட்டது. மக்கள் தாங்கள் ஒரு தேசத்தில் வாழ்வதை உணரவேண்டும், எல்லாரும் தனிமனிதர்கள் என்ற எண்ணம் அகலவேண்டும். மக்கள் இது நம் நாடு நம் தாய்நாடு என்று உணர்ந்து வாழவேண்டும்,” 

என்று நீதிபதிகள் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் திரையரங்குகளில் மக்கள் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நிற்காததால் பல விவாதங்கள் வெடித்தது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் ஏற்பட்டதால், தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிக்கவேண்டுமா இல்லையா என்ற கேள்விகள் அப்போது எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India