சிறிய நகரில் துவங்கி 125 வருடங்களாக 3 லட்சம் பேருக்கு சேவையளிக்கும் மும்பை ’டப்பாவாலாஸ்’

மும்பை டப்பாவாலாக்களில் மூன்று பேர் அதன் செயல்முறை, மரபு ஆகியவற்றை யுவர் ஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டனர்... 

1

35 வயதான சுலோசனா பரபரப்பான மும்பைப் பகுதியில் கரைபடிந்த சுவருடனும் மர அலமாரியுடன் காட்சியளிக்கும் அவரது சமையலறையில் சமைத்துக்கொண்டிருக்கிறார். நேரம் சரியாக காலை பத்து மணியானதும் வெள்ளை நிற உடுப்புடன் வீட்டிற்கு வரும் நபர் ஒருவருக்காக காத்திருக்கிறார். இந்த வெள்ளை உடை நபர்களை அங்கிருப்பவர்கள் ’டப்பாவாலா’ (Dabbawala) என்றழைப்பார்கள். சுலோசனா முகத்தில் புன்னகையுடன் தனது கணவருக்காக தயாரித்த மதிய உணவை அவரிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்குத் திரும்புகிறார்.

சுலோசனாவைப் போன்ற 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு உணவு டப்பாவைக் கொண்டு சேர்க்க மும்பையின் டப்பாவாலாவை சார்ந்துள்ளனர். லஞ்ச் பாக்ஸ் கொண்டு சேர்த்து அவற்றை திரும்ப கொண்டு வந்து அளிக்கும் இந்த முறை 125 ஆண்டுகள் பழமையானதாகும். மும்பையில் மட்டுமே செயல்படும் டப்பாவாலா வீட்டையையும் பணியிடத்தையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது.

டப்பாவாலாக்கள் ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பிரின்ஸ் சார்லஸ், ரிச்சர்ட் ப்ரான்சன், ஃபெடரல் எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் என போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு பெயர்போன இந்த நிறுவனம் தற்போது ஹார்வேர்ட் பல்கலைக்கழக ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜக்ரிதி யாத்ராவின் பத்தாம் பதிப்பின் ஒரு பகுதியாக டப்பாவாலாக்களுடன் உரையாடுகையில் அவர்கள் உணவை கொண்டு சேர்க்கும் இந்த முறையானது எவ்வாறு தரம்சாலாவின் மலைப்பகுதியில் துவங்கப்பட்டு மும்பையை வந்தடைந்து பிரபலமானது என்பதைத் தெரிந்துகொண்டோம்.

துவக்கம் குறித்த ஆய்வு

இந்த டப்பாவாலாக்களின் வரலாறு கிட்டதட்ட 1893-ம் வருடத்தில் துவங்குகிறது. அந்த சமயத்தில் 30 வயதான மகாதியோ ஹவாஜி பச்சே இந்த முயற்சியை ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் துவங்கினார். விவசாயியான இவர் மும்பைக்கு மாற்றலானார். சிறிய அளவில் பகுதி நேரமாக துவங்கப்பட்ட இந்த வணிகம் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு மிகப்பெரிய உணவு விநியோக முறையாக மாறி சுமார் 35 ஊழியர்களுடன் செயல்படத் துவங்கியது.

டப்பாவாலாக்களின் சமூகம் குறித்து 42 வயதான பிரகாஷ் பச்சாய் குறிப்பிடுகையில்,

”1956-ம் ஆண்டு ‘நூதன் மும்பை டிஃபன் பாக்ஸ் சப்ளையர்ஸ் ட்ரஸ்ட்’ என்கிற பேனரின் கீழ் ஒரு அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவின் பந்தாபூரைச் சேர்ந்த டப்பாவாளாக்கள் வர்கரி சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள். வித்தலா கடவுளின் பக்தர்கள்.”

எவ்வாறு செயல்படுகிறது?

டப்பாவாலாக்கள் துவங்கும் இடத்தையும் சென்றடையும் இடத்தையும் நிறங்களின் குறியீட்டை வைத்து அடையாளம் காண்பார்கள். டப்பாவாலா டிஃபன் பாக்ஸ்களை சேகரித்து அவற்றை வகைப்படுத்தும் இடத்திற்குக் கொண்டு செல்வார். இங்கு இவரும் மற்ற டப்பாவாளாக்களும் லஞ்ச் பாக்ஸ்களை பிரிவுகளாக வகைப்படுத்துவார்கள். தனித்தனியாக பிரிவுகளாக்கப்பட்ட பாக்ஸ்கள் சென்றடையவேண்டிய இடத்தை குறிக்கும் அடையாளங்களுடன் ரயிலின் பெட்டிகளில் ஏற்றப்படும். இந்த அடையாளத்தில் எந்த ரயில் நிலையத்தில் இறக்கப்படவேண்டும் என்பதும் டெலிவர் செய்யப்படவேண்டிய முகவரியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பாக்ஸ்கள் உள்ளூர் டப்பாவாலாக்களிடம் ஒப்படைக்கப்படும். இவர் டப்பாவை டெலிவரி செய்வார். மதிய உணவிற்குப் பிறகோ அல்லது மறுநாளோ காலியான பாக்ஸ் சேகரிக்கப்பட்டு அந்தந்த வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்படும் என்றார் பிரகாஷ்.

டப்பாவாலாக்கள் எஸ் எம் எஸ் வாயிலான டெலிவரி கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்கின்றனர். பெரும்பாலும் மும்பையின் விரார், சர்ச்கேட், கல்யாண்/பன்வெல், சிஎஸ்டி ஆகிய முக்கிய நகரங்களில் சேவையளிக்கின்றனர். 

நகர்புற போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் பயணிகள் ரயிலான மும்பை உள்ளூர் ரயில்கள் டப்பாவாலாக்களின் விநியோக முறை சிறப்பாக செயல்பட பெரிதும் உதவுகிறது. 2007-ம் ஆண்டு வெளியான ’தி நியூயார்க் டைம்ஸ்’ அறிக்கையின்படி டப்பாவாலாக்களின் துறை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஐந்து முதல் பத்து சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது.

டப்பாவாலாவின் உணவு விநியோக முறை வியப்பூட்டும் வகையில் அதிக துல்லியமாக உள்ளது. ஒரு வருடத்தில் 52 வாரங்களில் ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரத்தில் 2,60,000 பரிவர்த்தனைகள் நடக்கிறது. இதில் 8 மில்லியனுக்கு ஒன்று என்கிற அளவில்தான் இவர்களது பிழை விகிதம் உள்ளது. தங்களது துல்லியமான செயல்பாடுகளுக்காக சிக்ஸ் சிக்மா சான்றிதழ் பெற்றுள்ளனர் என்றார் மற்றொரு ஊழியரான கிரன் கவாடே. அடுக்குகளான டப்பாக்களை ஏற்றுவதற்கு முக்கிய ரயில் நிலையங்களில் 40 விநாடிகளும் இடையிலுள்ள மற்ற ரயில் நிலையங்களில் 20 விநாடிகளும் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கிறது ஹார்வேர்ட் பிசினஸ் ரெவ்யூ.

நம்பகத்தன்மையை தக்கவைத்தல்

வெள்ளை நிற சீருடை, தொப்பி, சைக்கிள் என டப்பாவாலாவின் பாரம்பரியமான தனித்துவம் அவ்வாறே தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. சிக்கலான நெட்வொர்க்குடன் எண்ணற்ற நபர்களிடம் கைமாற்றப்பட்டாலும் சரியான நேரத்தில் துல்லியமாக விநியோகிக்க இவர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு டப்பாவாலாவும் சம பங்குதாரர்கள். வருவாய் சமமாம அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளப்படும். இவர்களில் 50 சதவீதம் பேர் அடிப்படை கல்வி முடித்தவர்கள். ஒவ்வொரு மாதம் 10,000 முதல் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். டப்பாக்கள் பெரும்பாலும் சைக்கிளிலோ அல்லது உள்ளூர் ரயில்களிலோ கொண்டு செல்லப்படுவதால் ஒட்டுமொத்த உணவு விநியோக முறைக்கும் எரிபொருள் தேவைப்படுவதில்லை.

ஜக்ரிதி யாத்ராவில் சந்தித்த ஐந்து வருடமாக டப்பாவாலாவாக பணியாற்றும் 35 வயதான ஒருவர் கூறுகையில்,

”மும்பை கூட்ட நெரிசல் மிகுந்த பகுதி. இதில் தனியாக தெரிவது மிகவும் கடினம். வெள்ளை சீருடை எங்களைத் தனித்துக் காட்ட உதவுகிறது. டப்பாக்கள் இடம் மாறினாலும் எளிதாக தொடர்பு கொள்ள இந்த வெள்ளை சீருடை உதவுகிறது.”

டப்பா முறையில் பணியிலமர்தல், போக்குவரத்து, வாடிக்கையாளர்களைக் கைப்பற்றுதல், அவர்களை தக்கவைத்துக்கொள்ளுதல், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் போன்றவற்றைப் பொருத்தவரை சுயமாக ஒழுங்குபடுத்திக்கொள்ளும் ஒரு முறையாகும் என்று ‘தி ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’ குறிப்பிடுகிறது.

கோடிங் முறை

அனுப்பும் தரப்பு மற்றும் பெற்றுக்கொள்ளும் தரப்பில் இருக்கும் உள்ளூர் டப்பாவாலாக்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிச்சயமானவர்கள். எனவே நம்பிக்கை இல்லாமை குறித்த பேச்சிற்கே இடமில்லை. மேலும் அவர்கள் சேவையளிக்கும் உள்ளூர் பகுதி அவர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. இதனால் எந்த இடத்திற்கும் எளிதாக விநியோகம் செய்ய முடிகிறது. சைக்கிள், வண்டிகள், உள்ளூர் ரயில் சேவை போன்றவற்றை சார்ந்து செயல்படுகின்றனர். சராசரியாக ஒவ்வொரு லஞ்ச் பாக்ஸும் நான்கு முறை கைமாற்றப்பட்டு இறுதியாக வாடிக்கையாளரைச் சென்றடைவதற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை செல்கிறது.

”ஒவ்வொரு பாக்ஸும் வேறுபடுத்தப்பட்டு மூடியில் குறிப்பிடப்பட்டிருக்கு அடையாளத்தின் அடிப்படையில் எடுத்து செல்லவேண்டிய பாதை வகைப்படுத்தப்படும். இதில் அனுப்புவோர் முகவரி மற்றும் சென்றடைவோரின் முகவரி என இருதரப்பு முகவரியும் இந்த அடையாளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்,” என்றார் 51 வயதான பாலா சாப்.

வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நேரம் முதல் மாலை திருப்பியளிக்கப்படுவது வரை நடைபெறும் செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக விவரித்தார்.

• முதல் டப்பாவாலா லஞ்ச் பாக்ஸை வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டு ஒரு தனிப்பட்ட குறியீட்டை எழுதுவார்.

• ஒவ்வொரு டப்பாவாலாவும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து டப்பாக்களை வகைப்படுத்தி பிரித்து தனியாக வண்டியில் வைப்பார்கள்.

• இரண்டாவது டப்பாவாலா சென்றடையவேண்டிய பகுதியை தெரிவிக்கும் விதத்தில் ஒரு தனிப்பட்ட அடையாளத்தைக் குறித்து ரயிலில் ஏற்றுவார். இந்த அடையாளத்தில் பாக்ஸ் இறக்கப்படவேண்டிய உள்ளூர் ரயில் நிலையம் மற்றும் இறுதியாக டெலிவர் செய்யப்படவேண்டிய முகவரி ஆகியவை இருக்கும்.

• மூன்றாவது டப்பாவாலா உள்ளூர் ரயிலில் டப்பாக்களுடன் சென்று ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் டப்பாக்கள் அடங்கிய வண்டியை ஒப்படைப்பார்.

• நான்காவது டப்பாவாலா ரயிலிலிருந்து டப்பாக்களைப் பெற்றுக்கொண்டு இறுதியாக சென்றடையவேண்டிய முகவரியை கண்டறிந்து டெலிவர் செய்வார்.

காலியான டப்பாக்களை திருப்பி அனுப்பவும் இதே செயல்முறை பின்பற்றப்படும்.

சொமேடோ, ஸ்விக்கி போன்ற உணவுத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் நிறுவனங்கள் சந்தையில் சிறப்பாக செயல்படும் நிலையில் மும்பையின் டப்பாவாலாக்கள் கடந்த 125 வருடங்களாக தொடர்ந்து நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி மோகன்