முன் அனுபவம் ஏதுமின்றி மனிதவளத்துறையில் முன்னிலை வகிக்கும் நித்யா டேவிட்

0

முற்றிலும் தொழில்நுட்பமயமான இந்த உலகில் சரியான வாழ்க்கைப்பாதையை தேர்ந்தெடுத்து ஒரு பணியில் அமர்வது என்பது அத்தனை சுலபமான விஷயம் அல்ல. இது நித்யா டேவிட்டுக்கு நன்றாகத் தெரியும். மனிதவளத்துறையில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர் இவர். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக 'அப்ஸ்ட்ரீம்' எனும் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மனிதவளத்துறையில் பின்னணி எதுவுமின்றி அவர் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களை பணியிலமர்த்தும் வேலையை திறம்பட செய்வதற்கு எவ்வளவு தடங்கல்களை சந்தித்தார் என்பதை யுவர் ஸ்டோரியுடன் பகிர்ந்துகொண்டார். அந்த பகிர்வுகள் இதோ உங்களுக்காக.


முயற்சி

நித்யா விளம்பரத்துறையில்தான் தன்னுடைய வேலையை தொடங்கினார். 2000-ம் ஆண்டு ஜெ.வால்டர் தாமஸ் எனும் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை நிர்வாகியாக சேர்ந்தார். இரண்டாண்டுகள் அங்கே பணிபுரிந்ததில் விளம்பரத்துறை குறித்த பல விஷயங்களை கற்றறிந்தார். லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் கணக்குகளை கையாண்டு வந்தார். ஒரு சமயம் அந்நிறுவனத்தின் புதிய சேவைமையம் பெங்களுருவில் திறக்கப்பட்டது. நித்யா அங்கே சென்றார். மற்ற பணியாளர்கள் உதவியுடன் இடத்தை சுத்தம் செய்வதும் அலங்கரிப்பதுமாக விடியற்காலை மூன்று மணிவரை மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டார். வேலையை திறம்பட முடிப்பதில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை கண்டு லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் வியந்தார். அவருடைய நிறுவனத்தில் வேலைக்கு சேரும்படி நித்யாவிற்கு ஒரு வாய்ப்பளித்தார்.

நித்யா துபாயில் லேண்ட்மார்க் குரூப்பில் (லைப்ஸ்டைல் ப்ராண்ட் ஓனர்) மார்கெட்டிங் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். குழந்தைகளுக்கான பிரத்யேக கடைப்பிரிவில் திட்டமிடுதல், ஸ்ட்ரேடெஜி டெவலப்மெண்ட் மற்றும் ப்ராண்ட் பில்டிங் பொறுப்புகளை UAE-யில் எட்டு பகுதிகளில் ஏற்றார். இரண்டரை வருடம் துபாயில் பணியாற்றியபின் நித்யா திருமணம் முடிந்து இந்தியா திரும்பினார். ஓகில்வி அண்ட் மாதர் நிறுவனத்தில் சேர்ந்தார்.

கோதம் காமிக்ஸ்

ஒரு நிகழ்ச்சியில் தற்செயலாக பாலிவுட் இயக்குனர் சேகர் கபூரை சந்திக்கும் வாய்ப்பு நித்யாவிற்கு கிடைத்தது. நித்யாவின் கணவர் காமிக்ஸ் பிரியர். அவர் நித்யாவிடம் காமிக்ஸ் குறித்தும் அதன் கதாபாத்திரங்கள் குறித்தும் நிறைய பகிர்ந்திருக்கிறார்.

சேகர் கபூருடன் காமிக்ஸ் குறித்து உரையாடியபோது இந்த தகவல்கள் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவர் காமிக்ஸ் பற்றிய பல தகவல்களை அறிந்திருப்பது கண்டு வியந்த சேகர் கபூர் கோதம் காமிக்ஸில் ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்தார். நேர்காணலில் தேர்ச்சிபெற்று மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்தார். மீடியா சேல்ஸ், மக்கள் தொடர்பு போன்ற ப்ரொமோஷனல் வேலைகளில் பங்கேற்றார். கன்டென்ட் உருவாக்குவது க்ராஸ் ப்ரேண்ட் ப்ரொமோஷன் போன்றவற்றிலும் ஈடுபட்டார்.

எதிர்நீச்சல்

2007-ம் ஆண்டு கோதம் காமிக்ஸில் ஆலோசகராக இருந்தார். கோதம் காமிக்ஸ் அல்லாத மற்ற நிறுவனங்களிலும் கூடுதலாக பணிபுரிவதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நித்யா அவரது முன்னாள் உயர் அதிகாரி ஒருவரை சந்தித்தார். அவர் வேலை தேடிக்கொண்டிருந்தார். ஒரு நிறுவனத்தில் அவரது தகுதிக்கேற்ற வேலை இருப்பது தெரிந்து நித்யா அவரை அந்நிறுவனத்திற்கு பரிந்துரைத்தார். அவர் அங்கே பணியிலமர்த்தப்பட்டதும் அந்த நிறுவனத்தின் மனிதவளத்துரை அதிகாரி நித்யாவிடம் கேட்ட கேள்வி இதுதான்.

“இன்னும் நிறைய ஊழியர்களை பரிந்துரைக்கமுடியுமா?”

மனிதவளத்துறையில் முறையான பின்னணி இல்லையென்றாலும் அவருக்கு அதில் திறமை இருப்பதை உணர்ந்தார். முழுவீச்சில் இந்தத் துறையில் இறங்க முடிவு செய்தார். குடும்பத்தில் யாரும் இதுவரை சொந்தமாக தொழில் தொடங்கியதில்லை. அனைவருக்கும் பயம். இதில் பல ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்றார் அவரது தந்தை.


ஆனால் நித்யா பயப்படவில்லை. அனைவரையும் சமாதானப்படுத்த முற்பட்டார். அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். மூன்று மாதங்கள் இந்த தொழிலை முயற்சி செய்து பார்த்து இல்லையெனில் வேறு வேலைக்கு செல்வது என்று முடிவெடுத்தனர். 'அப்ஸ்ட்ரீம்' எனும் நிறுவனத்தை தொடங்கிய அன்றே அவர் மிகவும் எதிர்பார்த்த லட்சிய நிறுவனமான மதுரா கார்மெண்ட்ஸிலிருந்து வேலைக்கு ஆணை வந்தது. ஆனால் இன்று ஒன்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அவரது முடிவிற்காக வருந்தவில்லை என்கிறார் நித்யா.

இன்று தனிஷ்க், சிவாம், விப்ரோ கன்சியூமர் கேர், கார்பன் மொபைல்ஸ், லெனோவொ, லேன்ட்மார்க் என்று நீள்கிறது அவரது வாடிக்கையாளர்கள் பட்டியல். அதுமட்டுமல்லாது JWT, Ogilvy, Lowe, Mudra, Mccann, FCB Ulka போன்ற விளம்பர நிறுவனங்களுடனும் பணியாற்றுகிறார்.

நித்யா வெற்றியாளராக திகழ்ந்தாலும் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. சொந்தமாக நிறுவனத்தை தொடங்கிய இரண்டு வருடங்களில் வர்த்தகத்தில் மந்தநிலை காணப்பட்டதால் நிறுவனங்கள் ஆட்களை பணியிலமர்த்துவது நின்றுபோனது. பலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவாறு நடந்து கொள்ளவில்லை.

மனிதவளத்துறை ஒரு கடினமான துறையாகும். சிலர் உங்களை ஏமாற்றுவார்கள். அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டு முறையாக தெரிவிக்காமலேயே வேலையை விட்டு நின்றுவிடுவார்கள். சில உயர் பதவிக்கு பரிந்துரைப்பவர்கள் கூட முதலில் சம்மதித்துவிட்டு பின் பணியில் சேரமாட்டார்கள்.

என்கிறார் நித்யா.

நித்யா மனிதவளத்துறையில் முறையான கல்வி கற்கவில்லை. இருப்பினும் பல வருட அனுபவம் பெற்றிருக்கிறார். இதனால் பணியிலமர்துபவர்களின் தேவைகளை நன்றாக புரிந்துவைத்திருக்கிறார். அதற்கேற்ப வேலை தேடுபவர்களை சரியான முறையில் பயிற்சியளித்து அனுப்பிவைக்கிறார். அவரது வாழ்க்கைப்பாதையில் அவர் கண்டறிந்த மிக முக்கிய பாடம் உண்மை.

மக்கள் உண்மையை விரும்புவதில்லை. அவர்கள் தங்களது வாழ்க்கைப்பாதையில் பல குளறுபடிகள் செய்திருந்தாலும் அனைத்தையும் நான் சரிசெய்யவேண்டுமென விரும்புவார்கள். உண்மையை நேருக்குநேர் சொல்லி மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் இருக்க முயற்சிப்பேன். ஆனால் சில சமயம் உண்மையை எடுத்துரைக்கவேண்டி வரும்.

திடமான நம்பிக்கை மிகவும் அவசியம் என்கிறார் நித்யா. “நான் பணிபுரிந்த அத்தனை பிராண்டின் மேலும் எனக்கு நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது. தொழிலை பொருத்தவரை நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும்”.

நித்யா தனியாக சிறிய அளவிலான வாடிக்கையாளர்களை கையாண்டாளும் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குகிறார். 2016-ல் ஒரு குழுவை அமைத்து பெரிய நிறுவனங்களுடன் பணிபுரியவேண்டும் என்பதுதான் நித்யாவின் லட்சியம். இதுதவிர, அவரது சகோதரியுடன் இணைந்து “ஸ்டைல்சிஸ்டர்ஸ்” எனும் பெயரில் அவரது பொழுதுபோக்கிற்காக உருவாக்கியதுதான் ஸ்டைல்ப்ளாக். இந்த ப்ளாக் அவரது வேலையையும் பொழுதுபோக்கையும் சமன்படுத்த உதவுகிறது.

ஆக்கம் : ஹர்ஷித் மல்யா | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


பெண் தொழில்முனைவர்கள் தொடர்பு கட்டுரைகள்:

திரைப்படத் துறையில் பணிபுரிந்த பூனம் மரியா, கேக் பேக்கராக மாறிய கதை!

சிறு நகரங்களில் தங்குமிட வசதி செய்யும் ‘விஸ்டா ரூம்ஸ்’ நிறுவப்பட்ட கதை!