2017-ல் ஆதிக்கம் செலுத்திய தொழில்நுட்ப நிகழ்வுகள்...

0

மற்ற துறைகள் போலவே தொழில்நுட்பத் துறையிலும் இந்த ஆண்டு ஏற்ற இறக்கங்கள் கொண்ட ஆண்டாகவே இருக்கிறது. சர்ச்சைகளும், புதுமைகளும் அரங்கேறின. 

2017-ல் தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள் குறித்து ஒரு பார்வை:

பொய்ச்செய்திகள்

2017-ம் ஆண்டில் அதிக அளவில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளை பட்டியலிட்டால் ’ஃபேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச்செய்திகள் பிரச்சனை முன்னணியில் வந்து நிற்பதை உணர முடியும். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பொய்ச்செய்திகள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்த பிரச்சனையின் தீவிரம் பற்றி தொடர்ந்து கவலையோடு விவாதிக்கப்பட்டது. இத்தகைய பொய்ச்செய்திகளுக்கான வாகனமாக ஃபேஸ்புக் மற்றும் கூகுள் பெருமளவு பயன்படுவதாக கூறப்பட்டதை அடுத்து இரு நிறுவனங்களும் பொய்ச்செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத்துவங்கின. 

இதனிடையே பொய்ச்செய்தி பிரச்சனையை இணையவாசிகள் கூட்டு முயற்சியாலேயே கட்டுப்படுத்த முடியும் எனும் நம்பிக்கையில் விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் விக்கி டிரிபியூன் திட்டத்தையும் அறிவித்தார். பொய்ச்செய்தியை உருவாக்குபவர்கள் ஐரோப்பாவின் மசிடோனியா போன்ற நாடுகளில் குடிசைத்தொழில் போல இதை செய்து வருவதும் தெரிய வந்து அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்தின் நம்பகத்தன்மைக்கான சோதனையாக பொய்ச்செய்திகள் உருவெடுத்துள்ளது என்பதே கவலைக்குரிய விஷயம்.

பெண்கள் மீதான தாக்குதல்

இணையத்திற்கு மட்டும் அல்ல, இணைய புதுமைகளுக்கான இருப்பிடமாக கருதப்படும் சிலிக்கான் வேலிக்கும் இது சோதனை ஆண்டாகவே அமைந்தது. சிலிக்கான வேலியின் நட்சத்திர ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான உபெர் நிறுவன முன்னாள் ஊழியர் சூசன் பிளவர் என்பவர், நிறுவனத்தில் பாலியல் தொல்லை எத்தனை சகஜமாக இருக்கிறது என்பதையும், இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் ஒரு வலைப்பதிவு மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, நிறுவன சி.இ.ஒ கலானிக் பதவி விலகும் நிலையை உண்டாக்கியது. வேறு சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்பாகவும் இதே போன்று கூறப்பட்டது. இந்திய நிறுவனங்கள் சிலவற்றிலும் இது எதிரொலித்தது.

சைபர் தாக்குதல்

இந்த ஆண்டு சைபர் தாக்குதல்களுக்கும் குறைவில்லை. நடுக்க வைத்த ரான்ஸ்மவேர் வைரஸ் முதல் ஈக்விபேக்ஸ் நிறுவன தகவல் திருட்டு வரை பல சம்பவங்கள் இணையத்தில் தரவுகளின் பாதுகாப்புத் தன்மையை கேள்விக்குள்ளாக்கின. கம்ப்யூட்டர் கோப்புகளை பூட்டு போட்டு அவற்றை விடுவிக்க பினைத்தொகை கோரும் வகையில் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட வான்னகிரை ரான்ஸம்வேர் வைரஸ் இந்தியாவிலும் பல கம்ப்யூட்டர்களை பாதித்தது. இணைய பாதுகாப்பில் நிறுவனங்களும் தனிநபர்களும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இவை உணர்த்தின.

பிட்காயின் மோகம்

ரான்ஸம்வேர் தாக்குதலின் போதே பிட்காயின் கவனத்தை ஈர்த்தது. ஹேக்கர்கள் பினைத்தொகையை பிட்காயின் வடிவில் கோரியது இந்த எண்ம நாணயம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது. பின்னர் பிட்காயின் பியூச்சர் அறிமுகம் உள்ளிட்ட நிகழ்வுகளால் இதன் மதிப்பு எக்கச்சக்கமாக எகிறி, பிட்காயின் பற்றி அறியாதவர்களை கூட திரும்பி பார்க்க வைத்தது. அண்மைக்காலமாக இதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மேலும் பரபரப்பை ஏற்படுத்து வருகிறது.

இணைய சமநிலை

இணையத்தின் சுதந்திரத்தை காப்பாற்ற அவசியம் என வலியுறுத்தப்படும் நெட் நியூட்ராட்லிட்டி எனப்படும் இணைய சமநிலை இந்த ஆண்டு மீண்டும் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவில், இணையவாசிகள் மற்றும் வல்லுனர்களின் எதிர்ப்பை மீறி, இணைய சமநிலையை உறுதி செய்யும் விதிமுறைகளை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எப்.சி.சி அமைப்பில் 3-2 என இணைய சமநிலைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் இந்தியாவில் டிராய் அமைப்பு இணைய சமநிலைக்கு ஆதாரவாக பரிந்துரைகளை வெளியிட்டது ஆறுதலாக அமைந்தது. இப்போதையை நிலையில் இணைய சமநிலை தொடர்பான நிலைப்பாட்டில் இந்தியா முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

தானியங்கி கார்கள்

மனித டிரைவர்கள் தேவைப்படாமல் தானாக இயங்கும் கார்கள் தொடர்பான முயற்சி கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக இருந்தாலும் இந்த ஆண்டு இந்த முயற்சிகள் சாலைக்கு வரத்துவங்கின. கூகுள், ஆப்பிள் தவிர டெஸ்லா, உபெர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் களத்தில் குதித்துள்ளன.

கலக்கல் காமிராக்கள்

இந்த ஆண்டு கேட்ஜெட் உலகில் ஸ்மார்ட்போன்களை விட காமிராக்கள் கவனத்தை ஈர்த்தன. ஆப்பிள் நிறுவனம் ஐ-போனின் பத்தாவது ஆண்டில் அறிமுகம் செய்த ஐபோன் எக்ஸ் மாதிரி அதன் முக உணர்வு தொழில்நுட்பத்திற்கான கவனத்தை ஈர்த்தது. கூகுள் தன் பங்கிறகு பிக்ஸல் ரக் புதிய போனை நேரடியாக களமிறக்கியது. அதோடு செயற்கை நுண்ணறிவு உதவியோடு தானாக படமெடுக்கும் காமிராவையும் அறிமுகம் செய்தது. ஆண்ட்ராய்டு நிறுவனர் ஆண்டி ரூபின் அறிமுகம் செய்த எசன்ஷியல் போன் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. எக்கோ, கூகுள் ஹோம் போன்ற இல்லங்களுக்கான ஸ்மார்ட் சாதனங்களும் பெரிதாக பேசப்பட்டன.

எங்கும் பாட்கள்

மெஷின் லேர்னிங் என சொல்லப்படும் எந்திர கற்றலை மையமாகக் கொண்ட பாட்கள் எனப்படும் மென்பொருள் சார்ந்த உருவாக்கங்கள் இந்த ஆண்டு அதிகம் கவனத்தை ஈர்த்தன. ஆப்பிளின் சிறி, அமேசானின் எக்கோ உள்ளிட்ட டிஜிட்டல் உதவியாளர்கள் தவிர பல விதமான பாட்கள் உருவாக்கப்பட்டன. ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் சேவை சார்ந்த மென்பொருகளும் கவனத்தை ஈர்த்தன. வங்கிச்சேவை, வாடிக்கையாளர் சேவை உள்பட பல துறைகளில் இனி பாட்களின் ஆதிக்கம் தான் என ஆருடம் சொல்லப்படுகின்றன.

வேலைக்கு ஆபத்து

பாட்கள் மட்டும் அல்ல, ரோபோக்களும் இந்த ஆண்டு பெரிதாக கவனத்தை ஈர்த்தன. செயற்கை நுண்ணறிவு ஆற்றலோடு உருவாக்கப்பட்ட சோபியா எனும் ரோபோவுக்கு சவுதி அரேபியா குடியுரிமை அந்தஸ்து வழங்கியது. சோனி நிறுவனம் தனது ஐபோ நாய்க்குட்டி ரோபோவை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்தது. இதனிடையே எதிர்காலத்தில் ரோபோக்களின் ஆதிக்கத்தால் மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு பெருமளவு பாதிக்கப்படும் எனும் வகையிலான ஆய்வுகளும் செய்திகளும் அச்சத்தை ஏற்படுத்தின. குறிப்பாக ஐ.டி துறையில் இதன் தாக்கம் ஆதிகம் இருக்கும் என எச்சரிகப்படுகிறது. எந்திர கற்றல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தாக்கம் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களும் தங்கள் உத்திகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது வேலை வாய்ப்பு சந்தையையும் பாதித்துள்ளது.

மூடுவிழாக்கள்

வாட்ஸ் அப் யுகத்தில் பலரும் ஐ.எம் என சொல்லப்படும் இன்ஸ்டண்ட்ன் மெசேஜிங் வசதியை மறந்துவிட்டனர். ஆனால் இணையத்தின் ஆரம்ப காலத்தில் அரட்டைக்கும், உரையாடலுக்கும் இந்த வசதியே வழி செய்தது. இதன் அடையாளமான ஆமெரிக்கா ஆன்லைன் நிறுவனத்தின் ஏ.ஐ.எம் சேவை மூடப்படுவதாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதே போல ஆறு நொடி வீடியோக்களை உருவாக்க வழி செய்த வைன் சேவையும் மூடப்பட்டது. இன்னும் பல முடுவீழாக்களுக்கு மத்தியில், ஒரு காலத்தில் செல்போன் உலகில் கோலோச்சிய நோக்கியாவின் 3310 இந்த ஆண்டு மறு அறிமுகமானது.

வலை இன்னும் விரியும்...