ஓர் இளைஞரின் உன்னத முயற்சி: 700 குடிசைவாழ் குழந்தைகளின் கல்விக்கு வித்திட்ட திருப்பம்

1

சிக்கிம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் இருக்கிறது புரியோகோப் கிராமம். மலைகளால் சூழப்பட்ட அந்தப் பகுதியில் "சிக்கிம் ஹிமாலயாஸ் அகாடெமி" என்ற ஒரு சிறிய ஆங்கிலப் பள்ளி உள்ளது. தொழில்நுட்பம் தீண்டாத, பொருளாதார ரீதியில் மோசமான நிலையில் உள்ள மலைப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் பலருக்கும் கல்வியைப் புகட்டுவதே அந்தப் பள்ளிதான்.

இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் மோசமான மருத்துவ வசதிகளைக் கொண்டிருந்தாலும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர். தொழில்நுட்பத்தால் உயர்ந்து விளங்கும் நகரங்களுக்கு அப்படியே எதிரானச் வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருக்கிறது இந்த கிராமம். எனினும், நவீன வாழ்வு முறையில் மிகவும் பின்தங்கியிருக்கும் புரியோகோப் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகள் எதுவுமே உருவாக்கப்படவில்லை. இந்த ஆண்டு சிக்கிமிற்கு பயணம் மேற்கொண்ட ஜேம்ஸ் சுரேஷ் அம்பட், அந்தக் கிராமத்தில் நிச்சயம் ஒரு பள்ளி நிறுவப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார்.

இந்தியாவில் ஒரு குக்கிராமத்தில் ஆறு மகன்களில் மூத்தவராக பிறந்து வளர்ந்தவர் அம்பட். இவர் தனது தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாக சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அம்பட் வெறும் கால்களில் நீண்ட தூரம் நடந்து பள்ளிக்குச் சென்றதையும், எளிய வாழ்க்கையின் அங்கமாக இருந்ததையும் எப்போதும் மறக்கவில்லை. இதுபற்றி அவர் நினைவுகூரும்போது, "வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி நிறைந்திருப்பது, ஏதுமின்றி வாழ்வது ஒன்றில்தான்" என்கிறார்.

கிராமப்புற வாழ்க்கையில் இருந்து விலகி கல்லூரி காலத்தில்தான் பலதரப்பட்ட கலாச்சாரங்கள், குழப்பங்கள், வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என அனைத்தையும் கண்டுகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

"நான் பார்க்கும் திசைகளில் எல்லாம், பணத்தைப் பற்றியும், அதை மென்மேலும் சேர்ப்பது பற்றியுமே மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ள முடிவு செய்தேன்."

வேலை, பணம், குடும்பம்... இந்த குறுகிய வட்டத்துக்குள் அம்பட்டின் வாழ்க்கை சுருங்க ஆயத்தமானது. அந்த நேரத்தில்தான் ஒரு விபத்து, அம்பட்டின் இருத்தலின் அச்சத்தை ஆழமாக்கியது. இதுபோன்ற இருத்தலின் அச்சம்தான் நம்மில் பலரையும் செயல்கள் பல செய்வதற்குத் தூண்டுகோலாய் அமையும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

"நான் மரணத்தைத் தழுவினால் என்ன ஆகும்? என் வாழ்க்கையில் நான் செய்ததுதான் என்ன?" அம்பட் தனக்குத் தானே கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு விடைகள் தேடி பல இடங்களில் அலைந்தார். அந்தத் தேடல் மற்றும் அனுபவங்களின் வாயிலாக, பிறருக்கு உதவுவது ஒன்றுதான் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொடுக்கும் என்பதை உணர்ந்தார்.

"அந்தப் பயணம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியபோதும், அதை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை." ஒருவரது வாழ்க்கையை நல்லபடியாக மாற்றுவதே தன் வாழ்க்கையில் நிறைவு தரும் அம்சம் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்கினார் அம்பட்.

"இந்த மண்ணுலகை விட்டுப் பிரியும்போது, என் கையில் எதையுமே எடுத்துக்கொண்டு செல்ல முடியாது என்பதைத் தெரிந்தும், நான் சேர்த்து வைத்தவை அனைத்தையும் வீணாக்க எப்படி மனசு வரும்?" இந்த தத்துவ எண்ணத்துடன், 2004-ல் பெங்களூரு - உல்சூரில் "பில்டிங் ப்ளாக்ஸ்" (Building Blocks) எனும் அறக்கட்டளையைத் தொடங்கினார் அம்பட். ஒரே ஒரு ஆசிரியர், நான்கைந்து மாணவர்களுடன் போதுமான கட்டமைப்பு வசதியின்றி உருவானது பில்டிங் ப்ளாக்ஸ். அனைத்துக் குழந்தைகளுமே உள்ளூர் குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்கள். அவர்களின் உணவுக்கும் படிப்புச் செலவுக்கும் மக்களால் வழங்கப்பட்ட சிறு நன்கொடை உதவியது.

இன்று... 7 பள்ளிகள், 79 ஆசிரியர்களுடன் 700 ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளித்து நிமிர்ந்து நிற்கிறது பில்டிங் ப்ளாக்ஸ். குடிசைப் பகுதிகளில் இருந்து வருகின்ற குழந்தைகளுக்கு உயர்தர கல்வி வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் குடிசைவாழ் குழந்தைகளுக்கு தரமான கல்வியைப் புகட்ட முயற்சிக்கும் கல்வியாளர்கள் மூலம் பயிலரங்குகள் நடத்துவது உள்ளிட்டவற்றால் பில்டிங் ப்ளாக்ஸ் பலன்பெற்று வருகிறது.

'தற்போது 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறோம். பின்னர், அவரக்ளை நன்கொடையாளர்களின் உதவியுடன் நல்ல ஆங்கில வழிப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்வோம்.'

'இந்த ஏழைக் குழந்தைகள் அனைவரும் கல்லூரிக் கல்வியை எட்டுவதற்கு உரிய பள்ளிக் கல்வியை இலவசமாக சிறந்த முறையில் பெறுவதற்கு, தரமான பெரிய அளவிலான பள்ளியை நிறுவுவதுதான் எங்கள் கனவு.'

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது அவசியம் எனும் அம்பட், அவர்களின் எதிர்காலத்தை செம்மைப்படுத்துவதில் உள்ள பாதகங்களைக் களைந்திட வேண்டும் என்கிறார்.

'எங்களிடம் கல்வி கற்கும் குழந்தைகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சாதாரண கன்னட வழி அரசுப் பள்ளிகள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையே காரணம். தரமான படிப்பைச் சொல்லித் தந்து அனுப்பும் எங்களுக்கு இது மிகப் பெரிய பின்னடைவு. ஆங்கிலத்தில் அபார ஆற்றலை வளர்த்துக்கொண்ட குழந்தைகள் தொடர்ச்சியாக ஆங்கில வழிக் கல்வியைப் பயில முடியாதது வருந்தத்தக்கது.'

எனினும், கல்வி உரிமைச் சட்டம் மூலம் நல்ல பள்ளிகளில் தங்கள் சின்னஞ்சிறு மாணவர்களைச் சேர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார் அம்பட். நாட்டில் உள்ள பல்வேறு குடிசைவாழ்ப் பகுதிகளுக்கும், குக்கிராமங்களுக்கும் பயணித்து, அங்குள்ள ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிப்பது ஒன்றுதான் பில்டிங் ப்ளாக்ஸ் இப்போதைக்குக் கொண்டிருக்கும் உறுதிப்பாடு!