’ஷெல் இட்லி’- வெள்ளை நிற வட்ட இட்லிக்கு புதிய பரிமாணத்தை தந்துள்ள நண்பர்கள்!

4

காலை எழுந்தவுடன் அறக்கப்பறக்க அலுவலகம், பள்ளி செல்லும் முன், நம் வீடுகளில் டிபனுக்கு காலை டிபனாக கிடைப்பது சுடச்சுட இட்லி அதற்கு தொட்டுக்கொள்ள வகைவகையான சட்னிகள். மல்லிகைப்பூ போல இட்லியும், கலர் கலரான சட்னியும் இருந்தாலும் ஒரே மாதிரியான வெள்ளை நிற வட்டமான இட்லியை ஆண்டாண்டு காலமாக உண்பதால் சலிப்பு தட்டிப்போவது என்னமோ உண்மை. இருப்பினும் ஆரோக்கியமான சிற்றுண்டி என்பதாலும் சுலபமாக செய்துவிடமுடியும் என்பதாலும் இட்லி இன்றளவும் நம் வீடுகளில் ஆக்கரமித்துள்ளது. ஆனால் போர் அடித்துப்போன இந்த டிபனுக்கு புதிய உருவம் கொடுத்தால் எப்படி இருக்கும்? வேண்டா வெறுப்போடு இட்லியை வாயினுள் அடைத்துக்கொள்வோருக்கும், அலுத்துக்கொண்டு உண்ணும் சிறுசுகளுக்கும் மகிழ்ச்சி செய்தி காத்திருக்கிறது...

சென்னையை சேர்ந்த ‘வானவில் இன்வெண்டோரியம்’ Wannawill Inventorium எனும் நிறுவனம், புதுமையான கண்டுபிடிப்புகளை வடிவமைத்து, காப்புரிமம் பெற்று, அதை சந்தைப்படுத்த தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய புதிய கண்டுபிடிப்பு ’ஷெல் இட்லி’ (Shell Idli). இது என்ன ஷெல் இட்லி? அதைப் பற்றி அறிய வானவில் இன்வெண்டோரியத்தின் நிறுவனர்களில் ஒருவரான அனந்த நாராயணன் தொடர்பு கொண்டோம். அவர் பகிர்ந்து கொண்டவை இதோ...

வட்ட இட்லி ஷெல் வடிவிற்கு உருமாறிய கதை

10ஆம் நூற்றாண்டில் உருவான இட்லி இன்றும் கிட்டத்தட்ட அதே விடிவில் வீடுகளில் பரிமாறப்படுவதை கவனித்த ‘வானவில் இன்வெண்டோரியம்’ என்ற புத்தாக்க கண்டுபிடிப்புகளை உருவாக்க தொடக்கப்பட்ட நிறுவனம், அதில் புதுமையை புகுத்தி சந்தைப்படுத்த ஆய்வுகள் நடத்தியதாக அனந்த நாராயன் கூறினார். 

“தினமும் காலையில் உண்ணும் இட்லி பார்வைக்கு சாதரண, போராக தோன்றும் ஒரு டிபன் வகை. அதன் செய்முறையில் பெரிய அளவு மாற்றம் செய்யமுடியாத என்பதால் அதன் வடிவத்தில் ஒரு புத்துயிரை கொடுக்க நினைத்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த ஐடியா ‘ஷெல்’ அதாவது கிளிஞ்சலின் வடிவத்தில் இட்லியை உருவாக்க அதற்கான தட்டுகளை வடிவமைத்தோம்,” என்றார் அனந்த நாராயண். 

தன் நீண்ட நாள் நண்பர் ஜோசப் பாபினுடன் இட்லி தட்டை ஷெல் வடிவில் வடிமைக்க தேவையான பணிகளை கடந்த ஆண்டு தொடங்கினர். தங்களின் இட்லி டிசைன் வெளியில் தெரியாமல் இருக்க, தட்டுகளின் பாகங்களை தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தயாரித்ததாக கூறினார். இறுதியில் அதை ஒன்றிணைத்து மூன்று வித ஷெல் தட்டு வகைகளில் வெளியிட முடிவும் செய்துள்ளனர். வெறும் இட்லி தட்டை வடிவமைத்தால் போதாது என்று எண்ணிய நண்பர்கள் அதற்கு வண்ணமயத்தை சேர்க்க ‘உணவு வடிவமைப்பாளர்’ சன்ஜீத்தாவின் உதவியுடன் விதவித வகை இட்லிகளை ஷெல் இட்லி தட்டில் தயாரித்து ஒரு காணொளியை தயாரித்தும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பிரபலமாகி, இட்லி மீதே ஒரு தனி ஆர்வம் உருவாகும் அளவிற்கு வரவேற்பு அள்ளியுள்ளது என்கிறார் அனந்த நாராயணன்.

“வீடியோ தயாரிக்க முடிவெடுத்து, அதில் பீட்ரூட் இட்லி, டூட்டி ப்ரூட்டி இட்லி, கேரட் இட்லி, ஜாம் இட்லி என்று கண்களுக்கு விருந்தாக ஷெல் இட்லியை படமெடுத்து பொதுவெளியில் வெளியிட்டோம். அதைக்கண்டு பலரும் எங்களை தொடர்பு கொண்டு இட்லி தட்டுகளை ஆர்டர் செய்துவருகின்றனர்,” என்றார் உற்சாகத்துடன். 

தாங்கள் வடிவமைப்பாளர்களாக மட்டும் இருந்து பிரபல நிறுவனங்களுக்கு விற்பனை உரிமத்தை தருவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தனர். இருப்பினும் மக்களிடம் வரும் வரவேற்பை கண்டு தாங்களே நேரடியாகவும் விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறினார் அனந்த நாராயணன்.

நிறுவனர்களின் பின்னணி 

அனந்த நாராயணன் மற்றும் ஜோசப் பாபின், இருவரும் வெவ்வேறு துறையில் பல ஆண்டுகளாக பணி அனுபவம் உள்ள நண்பர்கள். விளம்பர நிறுவனம் மற்றும் மேலும் 2 நிறுவனங்கள் நடத்திவரும் அனந்த நாராயணனின் நான்காவது தொடக்க நிறுவனம், ‘வானவில் இன்வெண்டோரியம்’. அதேபோல் மாடல் ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜோசப் பாபினுடன் இணைந்து கடந்த ஆண்டு தொடங்கியதே இந்த நிறுவனம். இந்தியாவில் பெரும்பாலும் கண்டுபிடிப்புகளே அரிது என்று கூறும் அனந்த், குறிப்பாக நுகர்வோர் துறையில் பெரிய அளவில் எந்தவித புதுமைகளும் வெளிவருவதில்லை என்றார். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் இளைஞர்கள் பெரிய சந்தை மதிப்புள்ள உணவு, ஆடை, ஒப்பனை துறைகளில் புதிய டிசைனகளை கொண்டு வரவேண்டும் என்றும் அறிவுரைக்கிறார். 

“நீங்கள் புதுமையாக எதாவது வடிவமைத்தால், நுகர்வோர் அந்த தயாரிப்புக்காக காத்திருப்பார்கள். நுகர்வோர் துறையில், வாடிக்கையாளர்கள் உணரும் விதத்தில் பொருட்களை வடிவமைக்கவேண்டும். அதற்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும். இது எங்களின் ஷெல் இட்லி வடிவமைப்பின் அனுபவத்தில் கூறுகிறேன்,” என்றார். 
அனந்த நாராயணன் மற்றும் ஜோசப் பாபின்
அனந்த நாராயணன் மற்றும் ஜோசப் பாபின்

சுய முதலீட்டில் இயங்கும் வானவில் இன்வெண்டோரியம், புத்தாக்கங்களை ஊக்கவிக்கவே தொடங்கப்பட்டதாகவும் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை என்கின்றனர். மேலும் புதுமையான வடிவமைப்புகளுக்கு காப்புரிமம் பெறுவது மிகமிக அவசியம் என்று கூறும் அனந்த நாராயணன், இந்தியாவில் சுலபமாக டிசைன்கள் திருடப்பட்டுவிடும் அதனால் ஒரு வடிவமைப்பை ரகசியமாக வைத்து, அதை காப்புரிமை பெற்றப்பின்னர் சந்தையில் வெளியிடுவது சிறந்தது என்றும் எச்சரித்தார். 

ஷெல் இட்லி தட்டை தொடர்ந்து, வெவ்வேறு துறைகளில் பல புதிய கண்டுபிடிப்புகளை விரைவில் வழங்க உள்ளது இந்நிறுவனம். தங்களை போன்ற நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் இல்லை என்று கூறும் அனந்த நாராயணன், பலரும் தங்களை போல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதே சமயம் ஒருவர் ஏதேனும் கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டால் அதை பிறரிடம் விளக்கி, கருத்து கேட்க தேவையில்லை என்கிறார். 

“வித்தியாசமாக சிந்தித்து, உங்களின் மனதை பின் தொடருங்கள். புதுமையை உருவாக்குவது உங்கள் கையில் உள்ளது. மக்களுக்கு அது பிடித்தால் வெற்றி, இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் புதுமையாக ஏதோ செய்த திருப்தி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்,” என்று கூறி முடித்தார்.