ஆதரவற்ற சடலங்களுக்கு உறவுகளாய் இறுதி மரியாதை செய்யும் சென்னை அமைப்பு!

0

வாழும்போது நாம் சம்பாதிப்பதை விட இறக்கும் பொழுது நம்முடன் இருக்க நான்கு பேரை சம்பாதிப்பதே அவசியம் என்று நம் பெரியவர்கள் பலர் சொல்லிக் கேட்டதுண்டு. இதற்கேற்ப இறுதி சடங்கு செய்ய உறவுகள் இல்லாமல் ஆதரவற்று இருக்கும் சடலங்களுக்கு உறவுகளாய் இருந்து இறுதி மரியாதை செய்ய ’உறவுகள் டிரஸ்ட்’ என்னும் தொண்டு அமைப்பை துவங்கியுள்ளார் காலித் அகமத்.

இந்த உறவுகள் தொண்டு அமைப்பின் மூலம் காலித் மற்றும் அவரது நண்பர்கள் தெருக்களில், மருத்துவமனைகளில், உறவுகள் இன்றி இறந்து போகும் சடலங்களை பெற்று இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்கின்றனர். கல்லூரி படிக்கும்பொழுதில் இருந்தே பல சமூக சேவையில் ஈடுப்பட்டிருந்த காலித், சாலை ஓரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். அப்பொழுது அவர்களுடன் உரையாடிய பின்னரே இந்த அமைப்பை துவங்கும் நோக்கம் வந்ததாக தெரிவிக்கிறார் காலித்.

“சாலையில் வசிக்கும் மக்களிடம் பேசிய போது அவர்கள் கூறியது ஒன்றுதான், இறக்கும் பொழுது அவர்களை நான்கு பேர் மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே...”

இதுவே அவர்களின் கடைசி ஆசையாகவும் இருக்கிறது என்கிறார் காலித் உருக்கமாக. 

அதன் பின் கல்லூரி படிக்கும்பொழுது சாலை ஓரத்தில் முதியவர் ஒருவர் தண்ணீர் கேட்டு தவித்து கொண்டிருந்த நிலையில் அவரை கண்ட பலர் அவர் சுத்தமற்று இருந்த நிலையை கண்டு ஒதுங்கி சென்றுள்ளனர். அதைக்கண்ட காலித் மற்றும் அவரது நண்பர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர் ஆனால் அவர் சில நிமிடங்களில் இறந்துவிட்டார்.

“அதன் பின் காவல் துறைக்கு தெரிவித்தோம், சடலத்தை சவகிடங்குக்கு காவல்துறை அனுப்பி வைத்து 15 நாட்கள் சடலத்தை மீட்க உறவினர்களை எதிர்பார்த்து காத்திருந்னர். அதன்பின் நாங்கள் பெற்று அடக்கம் செய்தோம்,”

என உறவுகள் தொண்டு அமைப்பின் துவக்கத்தை தெரிவிக்கிறார் காலித். பொதுவாக ஆளில்லாத சடலம் கிடைத்தால் காவல்துறை FIR பதிவு செய்து 15 நாட்கள் வைத்தப்பின்னர் சடலத்தை புதைப்பதே வழக்கம். அதனால் இவர்களது அமைப்பு காவல்துறையுடன் நெருங்கி பணிபுரிந்து இறுதி மரியாதை செய்கின்றனர். காவல் துறையினரும் இதற்கு பெரும் உதவியாக இருக்கின்றனர் என்கிறார் காலித்.

காலித் அகமத்
காலித் அகமத்

கடந்த வருடமே இந்த அமைப்பை தனது நண்பர்களுடன் தொடங்கியுள்ளார் காலித். ஆனால் இன்று 200க்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் இவரது அமைப்பில் இணைந்து தொண்டாற்றி வருகின்றனர். ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வதோடு இன்னும் பல தொண்டுகளையும் இவ்வைமைப்பு செய்து வருகிறது. 

அதாவது வெளியூரிலிருந்து சிகிச்சைக்காக சென்னை வந்து இங்கு உயிரிழந்து மீண்டும் ஊருக்கு செல்ல வசதி இல்லாதவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து திரும்பி அனுப்பி வைக்கின்றனர். அடுத்து அடக்கம் செய்ய வசதி இல்லாமல் இறந்து போகும் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளின் உடல்களை நல்லடக்கம் செய்யவும் உதவுகின்றனர். மேலும் சாலையோரத்தில் மிகவும் உடல் நலம் குன்றிய மக்களை அரசு மருத்தவமனையில் சேர்க்கவும் இவ்வமைப்பு உதவி வருகிறது.

“சென்னை எக்மோரில் பசியால் வயிற்றில் துணி கட்டியநிலையில் ஒரு பெரியவர் இறந்திருந்தார். பசியால் உயிர் பிரிந்த அவரது உடலை உறவுகள் அமைப்பின் மூலம் அடக்கம் செய்தோம். பசியால் எவரது உயிரும் பிரியக்கூடாது...”

என நினைவுக் கூருகிறார் காலித். இவர்களது சேவையை உடனடியாக வழங்க தங்களது அமைப்பிற்கென சொந்தமாக ஆம்புலன்சையும் வைத்துள்ளனர். காவல்துறையினர் கொடுக்கும் தகவலை வைத்து அவர்களது உதவியோடு சடலங்களை புதைக்கின்றனர். 

ஆதரவின்றி தனியாக எவரும் இவ்வுலகத்தை விட்டு பிரியக்கூடாது என முடிக்கிறார் காலித் அகமத். 

Related Stories

Stories by Mahmoodha Nowshin