ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்கும் தொழில்முனைவோர்!

0

பல காலமாகவே பாரம்பரிய தொழில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆர்கானிக் விவசாயம் விவசாய சமூகத்தினரிடையே மட்டுமல்லாமல் நகரவாசிகளிடையேயும் முக்கியத்துவம் அடைந்து வருகிறது. பல தனிநபர்கள் இந்தத் துறையில் செயல்படத் துவங்குவதைப் பார்க்கமுடிகிறது.

ஆர்கானிக் விவசாயம் என்றால் என்ன?

அமெரிக்க விவசாயத் துறை ஆய்வுக் (USDA) குழுவின்படி,

உரங்கள், பூச்சிக்கொல்லிகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள் போன்ற செயற்கை உள்ளீடுகளைத் தவிர்த்து பயிர் சுழற்சி, பயிர் எச்சங்கள், கால்நடை எரு, பண்ணைக்கு வெளியே இருக்கும் ஆர்கானிக் கழிவுகள், கனிம பாறைகள் (mineral grade rock additives), ஊட்டச்சத்து மறுசுழற்சி மற்றும் தாவர பாதுகாப்பு சார்ந்த உயிரியல் முறை போன்றவற்றை அதிகபட்ச அளவு சார்ந்திருக்கும் முறையே ஆர்கானிக் விவசாயம் ஆகும்.

இந்த கருத்து நமக்குப் புதிதாக இருந்தாலும் இப்போது அதன் தேவை அதிகரித்ததால் ஆர்கானிக் விவசாயம் அதிகரித்து வருவதைப் பார்க்கமுடிகிறது. நுகர்வோர் ஆரோக்கியத்திலும் உட்கொள்ளும் உணவிலும் அதிக கவனம் செலுத்தத் துவங்கியிருப்பதால் ரசாயன பதப்பொருட்கள் பயன்படுத்தி விளையும் உணவுப்பொருட்களை தவிர்ப்பதற்காக அதிகம் பேர் ஆர்கானிக் உணவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். ’க்ரோயிங் க்ரீன்ஸ்’ என்கிற ஹைட்ரோஃபோனிக் விவசாய முறையை இணை நிறுவனரான நிதின் சாகியுடன் நடத்தி வரும் ஹம்சா வி குறிப்பிடுகையில்,

அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். அதே சமயம் நாளுக்கு நாள் தேவையும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அதிக தனிநபர்கள் அல்லது அரசு அமைப்புகள் சமநிலையைக் கொண்டு வர விவசாயத்தைக் கையில் எடுக்கவேண்டும்.

ஆர்கானிக் பாதையை தேர்ந்தெடுத்தல்

விரைவாக விளைச்சலைப் பெறவும் விளைச்சலை அதிகரிக்கச் செய்யவும் கிராமப்புறங்களில் இருக்கும் ஏராளமான விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதற்கு அறியாமையும் ஒரு காரணம். இந்த நிலை படிப்படியாக மாறி அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஆர்கானிக் பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்.

மேலும் நகர்புற இந்தியர்களும் இந்தத் துறையில் நுழைய முற்படுகின்றனர். ஆரோக்கியமான உணவிற்காக ஃப்ரெஷ்ஷான கலப்படமற்ற விளைச்சலுக்காக இவர்கள் நேரடியாக உற்பத்தி செய்கின்றனர் அல்லது இவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஆதரிக்கின்றனர். மக்கள் ஆர்கானிக் உணவை எடுத்துக்கொள்ள விரும்புவதும் பல்வேறு நகரங்களில் ஆர்கானிக் மின் வணிக கடைகள் அதிகரிப்பதும் மக்கள் சரியான திசையை நோக்கி நகர்வதை உணர்த்துகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு பெங்களூருவைச் சேர்ந்த லஷ்மிநாராயண் ஸ்ரீநிவாசய்யா தனது பணியிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு விவசாயத்தில் கவனம் செலுத்தத் தீர்மானித்தார். 2007-ம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்டபோதுதான் பணியின் நிலைத்தன்மை குறித்து சிந்திக்கத் துவங்கினார். இதுதான் விவசாயத்தைத் துவங்க உந்துதலளித்தது.

தகவல்தொழில்நுட்பத் துறை ஊக்கமளிக்காத பிரிவாக இருந்து வருகிறது. அதிக சவால் நிறைந்ததாக இருப்பதில்லை. இதற்கு விவசாயத்தை தொழில்முறையாக தேர்ந்தெடுப்பது சுவாரஸ்யமான மாற்றாக இருக்கும். நீங்கள் அதிக வருவாய் ஈட்ட முடியாது என்றாலும் சுவாரஸ்யமாக இருப்பது உறுதி. இதுதான் முரண்பாடு என்றார்.

லஷ்மிநாராயண் 2008-ம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபட்டார். தனது மொட்டைமாடியில் காய்கறிகள் வளர்க்கத் துவங்கினார். படிப்படியாக மலைப்பகுதிகளில் செடிகள் வளர்க்கத் துவங்கினார். பின்னர் சில நண்பர்களுடன் இணைந்து காய்கறி வளர்க்கத் துவங்கினார். 

தற்போது லஷ்மிநாராயண் அவரது குழுவுடன் இணைந்து Bettada Budadha Thota (BBT) சமூக விவசாயம் என்கிற கான்செப்டில் பணிபுரிந்து வருகிறார். 2012-ம் ஆண்டு இறுதியில் ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் அடங்கிய குழுவால் இந்த முயற்சி துவங்கப்பட்டது. இந்தக் குழுவில் இருந்த பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள். ஒரே ஒரு நபர் மட்டும் விவசாயப் பின்னணியைச் சேர்ந்தவர். இந்த பண்ணை பெங்களூருவில் இருந்து 70-80 கிலோமீட்டர் தள்ளி அமைந்துள்ளது. அவர் கூறுகையில்,

நாங்கள் துவங்கியபோது 11 பேர் ஒன்றிணைந்திருந்தோம். இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். நாம் உண்ண விரும்பும் அனைத்தையும் நாமே உருவாக்கவேண்டும் என்பதே திட்டம். இந்த முயற்சியை வணிக ரீதியாக பார்க்கவில்லை. இதுவரை உணவு தானியங்கள், தோட்டக்கலை பயிர்கள், பழங்களுகான பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு வருகிறோம். நாங்கள் வளர்க்கும் அனைத்துமே எங்களது சொந்த பயன்பாட்டிற்கு மட்டும்தான். ஆனால் எங்களது விவசாயம் குறித்து அறிந்த நண்பர்கள் பலர் அவர்களுக்குத் தேவையான காய்கறிகள் அல்லது பயிர்களை வாங்கிச் செல்கின்றனர்.

மும்பையைச் சேர்ந்த காயத்ரி பாட்டியா விவசாயம் ஒரு வாழ்க்கை முறை என நம்புகிறார். அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்பு ஏஜென்சியில் (EPA) சுற்றுச்சூழல் ஆய்வாளர் பணியைத் துறந்து விவசாயத்தை மேற்கொண்டார்.

குறைவான ஆங்கில வார்த்தைகள் மட்டுமே அறிந்த என்னுடைய சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து DDT, யூரியா, ரவுண்ட்-அப் போன்ற வார்த்தைகளைக் கேட்கும்போது நான் பணியில் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறேன் என்பதை உணர்த்துகிறது என்றார் மும்பை அருகே வாடாவில் ஆர்கானிக் Virunthavan நடத்தி வரும் பாட்டியா.

பாட்டியா தனது நிலத்தில் உள்நாட்டு அறிவுடன் நவீன உலகின் அறிவையும் ஒன்றிணைக்க முயற்சி செய்கிறார். பல்லுயிர் இனங்கள், பரம்பரை விதைத் தேர்வு, மண் உணவாக வீட்டில் தயாரிக்கப்படும் புளிக்கவைக்கப்படும் உரம், தெளிப்பதற்காக புளித்த தேனீர், சுற்றுச்சூழலுக்கு உகந்த விதை மற்றும் பயிர் சுழற்சி ஆகியவற்றை ஊக்குவிக்கிறார்.

எஸ் மதுசூதன் உருவாக்கிய Back2Basics உயர்தர ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யும் ஆர்கானிக் பண்ணையாகும். இந்தப் பண்ணை பெங்களூருவைச் சுற்றி சுமார் இரு நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அப்பா மற்றும் மகள் இணைந்து நடத்தும் Back2Basics பிரபலமான பல கிளைகளைக் கொண்ட மளிகைக்கடைகள், சில்லறை வர்த்தகர்கள், ஆர்கானிக் ஸ்டோர்கள், பெங்களூருவில் உள்ள கேட்டட் கம்யூனிட்டீஸ் போன்றவற்றிற்கு விநியோகிக்கிறது.

தங்களது விளைச்சல்களை உலகின் மற்ற பகுதிகளில் உள்ள பல கிளைகளைக் கொண்ட ஆர்கானிக் கடைகள் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர். மது சந்தன் நான்கு நபர்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து 2015-ம் ஆண்டு துவங்கிய மற்றொரு நிறுவனம் ’ஆர்கானிக் மண்டியா’. மதுவிடம் இருந்தே இதற்கான திட்டம் உருவானது. அவர் பல்வேறு விவசாய முறைகள் குறித்து விவசாயிகளுக்கு கற்பிக்க விரும்பினார். ஒரு சமூகத்தை உருவாக்கியதும் அவர்கள் விவசாயியின் விளைச்சலை வாங்கி விற்பனை செய்யத் துவங்கினர். இவ்வாறு உருவானதுதான் ’ஆர்கானிக் மண்டியா’. இந்தக் குழுவும் பண்ணையில் மற்ற விவசாயிகளும் பயிரிடும் விளைச்சல்கள் அனைத்தும் இந்த ப்ராண்டின் கீழ் பேக் செய்யப்படுகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

TechSci-ன் சமீபத்திய ஆய்வின்படி உலகளாவிய ஆர்கானிக் உணவு சந்தை அடுத்த மூன்றாண்டுகளில் 16 சதவீத வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் 2020-ம் ஆண்டில் இந்திய ஆர்கானிக் உணவு சந்தை 25 சதவீத வளர்ச்சியடையும் என்றும் மதிப்படப்படுகிறது.

ஆர்கானிக் விவசாயம் பிரபலமாகி வருகிறது என்பதை ஹம்சா ஒப்புக்கொண்டார்.

“பலர் ஆர்கானிக் உணவுகளை உற்பத்தி செய்வதிலும் உண்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். உதாரணத்திற்கு சிக்கிம் முழுவதும் ஆர்கானிக் விவசாயத்திற்கு மாறியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலும் விவசாயிகள் முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாற ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என்றார்.

சில நகர்புற தனிநபர்களும் விவசாயத்தில் ஈடுபட்டாலும் மேலும் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு ஹம்சா குறிப்பிடுகையில்,

ஆர்கானிக் விவசாய சமூகம் சாகுபடி முறைகள், பூச்சி மேலாண்மை, ஆர்கானிக் முறையை பின்பற்றுவதால் கிடைக்கும் நீண்ட கால பலன்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு பட்டறைகள் நடத்தவேண்டும். மற்ற விவசாயிகள், தனிநபர்கள், கார்ப்பரேட் குழுக்கள் ஆகியோர் தங்களது நிலங்களை பார்வையிட்டு சிறப்பான நடைமுறைகளை தெரிந்துகொள்ள ஆர்கானிக் விவசாயிகள் ஊக்குவிக்கவேண்டும்.

”BBT குழு பலரிடையே ஆர்கானிக் விவசாயம் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. எங்களிடம் பல கேள்விகள், சந்தேகம் போன்றவை கேட்கப்படுகிறது. ஆனால் விவசாயத்தை பின்பற்ற கவலையும் பயமும் உள்ளது. எங்களது செயல்பாடுகள் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். வருங்காலத்தில் இந்த பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு காணப்படலாம்,” என்றார் லஷ்மிநாராயண்.

ஆர்கானிக் விவசாயம் பின்பற்றப்படுதல்

ஆர்கானிக் விவசாயத்திற்கு அதிக அறிவு, வெளிப்படைத்தன்மை, விவசாயி நுகர்வோர் உறவுமுறை ஆகியவை அவசியம். ஏனெனில் உங்கள் உணவை யார் உற்பத்தி செய்கிறார்கள், எங்கிருந்து வருகிறது, எவ்வாறு உற்பத்தி செய்கிறார்கள் ஆகியவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்கிறார் A Green Venture என்கிற சுற்றுச்சூழல் நிறுவனத்தின் நிறுவனரான காவ்யா சந்திரா. 

இந்நிறுவனம் ஒருவரை இயற்கையான ரசாயனங்களற்ற உணவுடன் இணைப்பதறகான அனுபவங்களையும் கற்றலையும் தொகுத்து அவர்களது வாழ்க்கைமுறையையும் பழக்கங்களையும் பல்வேறு பட்டறைகள் மற்றும் தளங்கள் வாயிலாக மேம்படுத்துகிறது.

சமீபத்தில் இந்திய அரசாங்கம் சான்றிதழ் அமைப்புகள், ஆர்கானிக் உற்பத்திக்கான தரநிலைகள், ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றிகாக National Programme for Organic Production (NPOP) அறிமுகப்படுத்தியது. இருப்பினும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டிய அவசியம் உள்ளது. பேக்கிங், ஸ்டோர்களில் விநியோகித்தல் என உணவு பொருட்கள் விளைச்சல் தொடர்பான ஒட்டுமொத்த செயல்முறையும் அசல் ஆர்கானிக்காக இருக்கவேண்டும்.

காவ்யா மேலும் கூறுகையில்,

சிறு குழுக்கள், கூட்டுறவுகள், ஆர்கானிக் விவசாயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கும் அமைப்பு ஆகியவற்றை ஆதரித்தால் தெளிவான புரிதல் கிடைக்கும். அத்துடன் நுகர்வோர் சரியாக தேர்ந்தெடுக்கவும் உதவும்.

ஆங்கில கட்டுரையாளர் : மயூரி ஜே ரவி | தமிழில் : ஸ்ரீவித்யா