மக்கள் குறைதீர்க்க ‘நம்ம சென்னை’ ஆப் ; சென்னை மாநகராட்சி அறிமுகம்

0

சென்னை மக்கள் குறைதீர்க்கும் வகையில், 'நம்ம சென்னை' என்ற மொபைல் ஆப் ஒன்றை சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் சென்னை நகர் தொடர்பான சுற்றுப்புற பிரச்சனைகளை இந்த செயலி மூலம் அதிகாரிகளுக்கு பதிவிட்டு தெரியப்படுத்த முடியும். 

சென்னைவாசிகள் இதுவரை தங்களின் புகார்களை 1913 என்ற பொது எண் மூலமோ, சென்னை மாநகராட்சிக்கு மனு அளிப்பதன் மூலமோ தங்கள் நகரப் பிரச்சனைகளை தெரியப்படுத்தி வந்தனர். இனி இந்த ‘நம்ம சென்னை’ ஆப் மூலம் ஆண்டிராய்ட் போன்கள் மூலம் இருந்த இடத்தில் இருந்தே புகார்களை பதிவிட முடியும் என்று இதை வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

“ஆப் மூலம் பெறப்படும் புகார்கள், அந்தந்த குறிப்பிட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அதற்கான அறிவிப்பும் பயனாளிக்கு தெரியப்படுத்தப்படும். புகார்களின் நிலை மற்றும் அதன் மீதான நடவடிக்கை குறித்த அப்டேட்களும் ஆப்-ன் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளமுடியும், இதனால் புகார்கள் சரிபார்க்கப்படும் கால அவகாசம் வெகுவாக குறையும்,” என்றார்.  

அதோடு சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடட் Chennai Smart City Limited, என்ற வலைதளத்தையும் அமைச்சர் வெளியிட்டார். www.cscl.co.in என்ற தளத்தின் வாயிலாக சென்னை ஸ்மார்ட் சிட்டி தொடர்பான எல்லா விவரங்களும் இருக்கும் என்றார். 

இது குறித்து சென்னை பெருமாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டது:

பொதுமக்களின் குறைகளை எவ்வித காலதாமதமின்றி உடனடியாக நிவர்த்தி செய்ய, அதிகாரிகளுக்கு கைபேசி மூலமாக எளிய முறையில் குறைதீர்க்கும் செயலி இது. ’நம்ம சென்னை’ செயலி மூலமாக பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு, அதன்மீது மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு கைபேசி செயலி மூலமாகவே உடனுக்குடன் தெரிவிக்கும் வண்ணம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் குறைகள் எவ்வித காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்றப்படும்.

உதாரணமாக, தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், நாய் தொல்லை, சாலைப்பணிகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்ற பொதுமக்களின் புகார்கள் கைபேசி செயலி மூலமாக பதியப்பட்டு, புகார்கள் அனைத்தும் எல்லைக்குட்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்களின் குறைகள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள இந்த கைபேசி செயலி வழிவகை செய்கிறது.

இன்றைய அதிநவீன, அதிவேக மின்னணு உலகத்தில், தகவல் பறிமாற்றங்களுக்கு மிக முக்கியமாக விளங்குவது வலைத்தளங்கள் தான். சென்னை ஸ்மார்ட் சிட்டிவலைத்தளம், நமது சென்னையினை ஒரு ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்த எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்குமான ஒரு ஒருங்கிணைந்த மேடையாக விளங்கும்.

சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் முடிவுற்ற, மேற்கொள்ளப்படும் மற்றும் வரப்போகும் அனைத்து திட்டங்களைக் குறித்த தகவல்களும் இந்த இணையதளத்தின் மூலம் ஒருவர் அறிந்து கொள்ளலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க இத்தளம் உதவும். 

மக்களின் நன்மைக்காக டிஜிட்டல் வகுப்பறைகள் முதல் நகர்ப்புற பூங்கா திட்டங்கள் வரை அனைத்து விதமான திட்டங்களின் வரைவும் இத்தளத்தில் கிடைக்கப் பெறும் மற்றும் அத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அறியும் வண்ணம் அறிக்கைகளும் அவ்வப்பொழுது பதிவேற்றம் செய்யப்படும்.

சென்னை ஸ்மார்ட் சிட்டி இணையதளம் இருவழி தகவல் பறிமாற்றத்தை வழிவகுக்கும், ஆகையால் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து மக்களும் மாநகராட்சியை எளிதில் அணுகலாம். மக்கள் மற்றும் அரசுக்கு இடையே கூட்டுறவை மேம்படுத்துவதற்கு இது உதவும். 

’நம்ம சென்னை’ ஆப் தரவிறக்கம் செய்ய:  Namma Chennai APP

சென்னை ஸ்மார்ட் சிட்டி வலைதளம்: Chennai Smart City Limited