கேரள வெள்ளத்தில் சிக்கித்தவித்த 26 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை கேப்டன்! 

0

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பொருட்கள் சேதமடைந்தது. பலர் உயிரிழந்துள்ளனர். இந்திய பாதுகாப்பு படை மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில் அதிகம் போற்றப்படாத பல கதாநாயகர்களின் முயற்சிகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட மீட்பு நடவடிக்கை ஒன்றில் கடற்படை பைலட் கேப்டன் பி ராஜ்குமார் 26 நபர்களை மீட்பதற்காக B42 ஹெலிகாப்டரை இயக்கி மேற்கூரையில் தரையிரக்கியுள்ளார். இக்குழு நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் 80 வயது பாட்டியையும் பத்திரமாக மீட்டுள்ளது. 

கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட மீட்டு நடவடிக்கை குறித்து கடற்படை அதிகாரி அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடுகையில்,

நான்கு பேரை உயர தூக்கி மீட்டபிறகு மேலும் 22 பேரை தூக்குவது கடினமாக இருந்தது. அங்கு சிக்கித்தவித்த அனைவரையும் ஏற்றிக்கொண்டு மீட்பதற்காக ஹெலிகாப்டரை தாழ்வாக ஒரே இடத்தில் பறக்கவைக்க குழு தீர்மானித்தது.

சாலகுடியில் பி ராஜ்குமார் இயக்கிய ஹெலிகாப்டர் இரண்டு ஜெமினி படகுகள், நீரில் மூழ்கி மீட்புப்பணியில் ஈடுபடும் எட்டு பேர், உணவு, நிவாரணப்பொருட்கள் ஆகியவற்றை தரையிரக்க திட்டமிட்டார். ஹெலிகாப்டரைக் கண்டதும் சில வயதானவர்கள் இரண்டு மாடி கட்டிடத்தின் மேற்கூரைக்கு வந்து ஹெலிகாப்டரை நோக்கி கையசைத்தனர் என ’தி நியூஸ் மினிட்’ தெரிவிக்கிறது.

ஆபத்தில் தவித்தவர்களை மீட்க ஹெலிகாப்டர் கீழே இறக்கப்பட்டபோது 25-க்கும் அதிகமானோர் ஹெலிகாப்டரை நோக்கி விரைந்தனர். அதில் 80வயது பாட்டி ஒருவரும் இருந்தார். அவர் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டார். குறுகலான மேற்கூரையில் மரங்களுக்கிடையே ஹெலிகாப்டரை கவனமாக தாழ்வாக பறக்கவிட்டார் ராஜ்குமார். அங்கிருந்த அனைவரும் மீட்கப்பட்டு கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

2017-ம் ஆண்டு கேரளாவில் ஒக்கி புயல் தாக்கியபோது மேற்கொண்ட மீட்புப் பணிக்காக, குறிப்பாக இக்கட்டில் இருந்த மீனவர்களின் உயிரை காப்பாற்றியதற்காக இந்த ஆண்டு சுதந்திர தினா விழாவின்போது ராஜ்குமாருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்த புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி 218 பேரின் உயிரைப் பறித்தது என பிஐபி தெரிவிக்கிறது. 2017-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி கடற்படை ஹெலிகாப்டர் சீ கிங் 528 கேப்டனாக இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது குழுவினர் திருவனந்தபுரத்திலிருந்து நாள் முழுவதும் தேடுதல் மற்றும் மீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA