பொறியாளராய் இருந்து ஃபேஷன் வடிவமைப்பாளராய் மாறிய ’பூக்காரி’

1

ஃபேஷன் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். மக்களின் சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை பொருத்து அதற்கான அர்த்தம் மாறும். மாயை போல் காட்சியளிக்கும் ஃபேஷன் துறையில் இணைந்து சாதிப்பது என்பது அவ்வளவு எளிமையான செயல் கிடையாது. மருத்துவர், பொறியாளர் போல் ஃபேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்ற இலக்கு இருந்தால் அதற்கு ’பூக்காரி’ நிறுவனர் ஸ்ரீ வைஷ்ணவி ஓர் எடுத்துகாட்டு.

நிறுவனர் ஸ்ரீ வைஷ்ணவி
நிறுவனர் ஸ்ரீ வைஷ்ணவி

கோவை மண்ணைச் சேர்ந்த வைஷ்ணவி, தன் பொறியியல் படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்துக்கொண்டு, தன் கணவரின் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு இரண்டு வருடம் பணிபுரிந்த பின் தன் குடும்ப ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டார் வைஷ்ணவி. அங்கு சந்தைப்படுத்தல்,  வியாபாரம், நிர்வாகம் போன்ற பல பிரிவுகளில் இணைந்து கடந்த பத்துவருடமாக அனுபவத்தை பெற்றுள்ளார்.

பூக்காரியின் தோற்றம்

“எனக்கு ஃபேஷன் வடிவமைப்பு மீது ஆர்வம் அதிகம். சென்னை மும்பை போன்ற பெருநகரங்கள் போல் கோவை மக்களுக்கு ஃபேஷன் எளிதாக கிடைக்கும் வகையில் இல்லை. இதுவே பூக்காரி அமைக்க முதல் தூண்டுதல்,”

என தன் தொழில் தொடக்கத்தை விளக்குகிறார் வைஷ்ணவி. பூக்காரி 2014 அக்டோபரில் தொடங்கப்பட்டது. முழுநேர கடையாய் இது அமையும் முன் வைஷ்ணவி ஃபேஷன் ஆக்சசரிசுகளை வடிவமைத்து ஆன்லைனில் விற்றார். ஒரு சில மாதம் கழிந்த பின் மக்கள் நவநாகரிக ஆடைகளையும் விரும்புகின்றனர் என அறிந்து ஆடைகள் வடிவமைக்க முன் வந்தார். அதனால் ஜனவரி 2015-ல் திருமண நிகழ்வுகளுக்கு ஆடை மற்றும் நகைகளை வடிவமைத்து விற்றார். அது வெற்றி பெற தன் ஆடை வடிவமைப்பில் தன் பயணத்தை தொடர்ந்தார்.

“தற்போது டிரண்டில் இருக்கும் ஃபேஷனை பின்பற்ற கோவை பெண்கள் எண்ணுகிறார்கள். ஆனால் கோவையில் சமிபத்திய ஃபேஷன் டிரண்டுகளை அவர்களால் அணுக முடியவில்லை. இந்த இடைவெளியை நிரப்புவதே பூக்காரி.”

வெற்றி பயணம்

எல்லா வணிகத்தை போலவும் ஆரம்பத்தில் ஒரு சில சிக்கல்களை மேற்கொண்டாலும் வாடிக்கையாளர் சேவை மீது அதிக அக்கறை கொண்டுள்ளார். அதுவே பல சிக்கல்களை சமாளித்து முன்னேற உதவியது என்கிறார் வைஷ்ணவி.

தன் குடும்பத்தின் உதவியால் முதலீடு செய்து பூக்காரியை தொடங்கியுள்ளார் வைஷ்ணவி. 3 வருட கடின உழைப்பிற்கு பிரகு லாபம் பார்க்கத் தொடங்கியுள்ளது இவரின் பொடிக்.

“இதற்கு அடுத்தக்கட்டமாக 2018-ல் தென் இந்தியாவில் உள்ள மற்ற சிறு நகரங்களுக்கு பூக்காரியை எடுத்து செல்ல இருக்கிறேன்,” என்றார்.

ஆன்லைனில் இருந்து ஆஃப்லைன் வரை

ஆன்லைனில் இருந்து முழுநேர கடையாக அமைக்கும் முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அது தனக்கு ஒரு பெரிய போராட்டம் தான் என்கிறார். ஆனால் கடை அமைத்ததே தன் வாழ்வின் சிறந்த முடிவு என்கிறார்.

“பல குழப்பத்திற்கு இடையில் பல வழிகாட்டிகளின் ஆலோசனை படி செப்டம்பர் 2016 கடையை நிறுவினேன். ஆனால் என் வாழ்வில் நிதி ரீதியாக நான் எடுத்த சிறந்த முடிவு இதுவே,” என்கிறார்.

தற்போது வைஷ்ணவி மற்றும் அவரது நண்பர் மட்டுமே இணைந்து நிறுவனத்தை பார்த்துகொள்கின்றனர். சிறிய அளவில் வைத்து கொள்ளவே விரும்புவதாக வைஷ்ணவி தெரிவித்தார். மேலும் கோவையில் ஃபேஷன் தொழில்நுட்பம் சொல்லித்தரும் கல்லூரிகளுடன் இணையும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார்.

பூக்காரி வெளியீட்டு விழா
பூக்காரி வெளியீட்டு விழா

கோவையில் தங்கள் வடிவமைப்புகளை வெளியிட ஷிவன் & நரேஷ், மசாபா, ராரா போன்ற பெரும் ஃபேஷன் முன்னோடிகள் பூக்காரியுடன் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி வடிவமைப்பாளர்களின் பல நிகழ்வுகளை கோவையில் நடத்தியுள்ளார் வைஷ்ணவி.