ஒற்றை செயலியில் 2 லட்சம் இந்திய-பாக் மனங்களை இணைத்த இளைஞர்!

0

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் மற்றும் இதர அரசியல் விவகாரங்களுடன் இந்தியாவும் பாகிஸ்தானும், புவியில் நல்ல நண்பர்களாக இல்லை. விளையாட்டுக் களத்திலும் இரு தரப்புமே ஆக்ரோஷமான எதிரெதிர் துருவங்கள்தான். இவையெல்லாம் பொதுமக்கள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் நம்பிக்கையின்மைக்கும் வெறுப்புணர்வுக்கும் கூட வித்திடப்படுகிறது. எனினும், இப்போது விவாதிக்கத்தக்க கேள்வி இதுதான்: 'மக்களாகிய நம்மிடம் உண்மையிலேயே வேறுபாடு உண்டா? எந்த வழியிலாவது நமக்குள் தொடர்புகொள்ளும் சாத்தியம் உண்டா?'

கடந்த 2012-ல் டிபிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் டெஸ்டிங் புரொசீஜர் ஸ்பெசிஃபிகேஷன் தொடர்பாக பணிபுரிந்துகொண்டிருந்தபோது, தன் நண்பர் மைக்கேல் எலியட்டிடம் இருந்து அமிரித் சர்மாவுக்கு ஒரு தகவல் வந்தது. இஸ்ரேலைச் சேர்ந்த கிராபிக்ஸ் டிசைனர் ரோன்னி எட்ரி-யின் டெட் டாக் இடம்பெற்ற இணைப்பு அது. ஓர் எளிய போஸ்டர் வைரலாக பரவி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஓர் இயக்கத்தையே உருவாக்க வழிவகுத்த கதை சொல்லும் பதிவு அது. குறிப்பாக, பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியான தகவல்கள் பரிமாறப்பட்டு, நல்லுறவு மேம்படுவதற்கு காரணமாக இருந்த நிகழ்வு விவரிக்கப்பட்டிருந்தது.

அந்த வீடியோவைப் பார்த்த அமிரித் மெய்சிலர்த்துப் போனார். அன்றைய தினம் தந்த அனுபவத்தை எப்போது நினைவுகூர்ந்தாலும் உத்வேகம் தொற்றிக்கொள்ளும். எட்ரி போட்ட கோடு, ஃபேஸ்புக்கில் 'இஸ்ரேல் லவ்ஸ் ஈரான்' என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஃபேஸ்புக் பக்கங்கள் அணிவகுக்க பாதை வகுத்தது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு பெயர்களில் இந்த இணக்கப் பாதையைப் பின்பற்றினர். அப்போது, ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே 'இந்தியா லவ்ஸ் பாகிஸ்தான்' மற்றும் 'பாகிஸ்தான் லவ்ஸ் இந்தியா' முதலான பெயர்களில் குழுக்கள் இயங்குவதைக் கண்டார். ஆனால், பல நாட்களுக்குப் பிறகும் எட்ரியின் டாக் மற்றும் அவரது யோசனைகள் எல்லாமே அவர் தலைக்குள் ரீங்காரமீட்டுக் கொண்டிருந்தன. அதன் விளைவாக, தன் இலக்கு நோக்கி முதல் அடியை எடுத்து முன்வைக்கும் விதமாக இந்தியாபாகிஸ்தான்.காம் (IndiaLovesPakistan.com) என்ற டொமைனை பதிவு செய்தார்.

அண்டை நாட்டினராக இருந்தபோதிலும், இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் ஒருவரையொருவர் அதிகளவில் தெரிந்துகொள்ள முடியாதவர்களாகவே பெரும்பாலும் இருப்பதை அமிரித் உணர்ந்தார். அனைத்து தேசத்தவர்களும் வலம் வரும் சூழல் மிக்க நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் வளர்ந்தவர் அம்ரித். இவருக்கு மழலையர் பள்ளிப் பருவம் முதல் பல்கலைக்கழக நாட்கள் வரையிலும் ஏராளமான பாகிஸ்தானிய நண்பர்கள் நெருக்கமானவர்கள். இந்தப் பின்னணியில், இந்தியா - பாகிஸ்தான் மக்களிடையே மனிதநேய அடிப்படையில் உறவுகள் மலர்ந்து தழைத்திட வேண்டும் என்று விரும்பினார். வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, தொழில்நுட்பத்தையும் சமூக வலைதளங்களையும் தனது முயற்சிக்குப் பயன்படுத்திக்கொள்வது என்று முடிவு செய்தார். "பாஸ்போர்ட்டில் உள்ள நிறத்தைக் கருத்தில்கொள்ளாமல், தரத்தையும் குணநலன்களின் தன்மையையும் வைத்தே மக்கள் மதிப்பிடும் நாள் நிச்சயம் வரும் என்பதே என் கனவு" என்கிறார் அம்ரித்.

இந்த சிந்தனையுடன், ஒரு பகுதிநேர டெவலப்பரையும், ஒரு கிராஃபிக் டிசைனரையும் வைத்துக்கொண்டு 'இந்தியா-பாகிஸ்தான்' (India or Pakistan) என்ற தலைப்பில் ஓர் இலவச ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கினார். அதை பிப்ரவரி, 2015 வேலன்டைன்ஸ் தினத்தில் வெளியிட்டார். இந்த செயலியின் ஐடியா மிகவும் எளிதானது. வெவ்வேறு இடங்கள் அல்லது தோற்றங்களுடன் கூடிய ஒரு புகைப்படம் தோன்றும். அந்தப் புகைப்படம் குறிப்பது இந்தியாவையா அல்லது பாகிஸ்தானையா என்பதை மக்கள் சரியாக அடையாளப்படுத்த வேண்டும். இரு நாடுகளைச் சேர்ந்த மக்கள், தெருக்கள், நினைவிடங்கள், உணவு என பல வகையான படங்களும் ஒரே மாதிரியாக தோற்றமளிக்கும். அதைச் சரியாக அடையாளம் காண்பதுதான் சுவைமிகு சவால்.

இந்த செயலி வெளியான பிறகு, இரு நாடுகளின் எல்லைகளையும் கடந்து உலக அளவில் மகத்தான வரவேற்புக் கருத்துகள் பகிரப்பட்டன. ஒர் எளிய சிந்திக்கவைக்கும் செயலியை உருவாக்கியதற்கு பாராட்டுகள் குவிந்தன. தனது செயலி தரும் அனுபவம் குறித்து விவரித்த அம்ரிதி, "என் நண்பர்களிடம் என்னுடைய செல்போனைக் கொடுத்து இந்த செயலியைப் பயன்படுத்தச் சொல்லிவிட்டு, அவர்களது பாவனைகளை கவனிப்பேன். அவர்கள் மிகச் சரியான பதிலைக் கண்டுபிடிக்கும்போது சந்தோஷமடைவார்கள். ஆனால், அவர்களே முழு நம்பிக்கையுடன் பதிலைத் தந்துவிட்டு, அது தவறு என்று அறியும்போது இன்னும் குதூகலம் கூடிவிடும். அது விலைமதிப்பற்றது. ஒரு கேம் ஆடிய பிறகு கடையில் கிட்டும் ஸ்கோர் அல்ல... நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல் நம்மிடம் வேறுபாடு எதுவும் இல்லையே என்று உணரும் அற்புதத் தருணம்தான் அந்த நெகிழ்ச்சிக்குக் காரணம்" என்றார்.

கடந்த ஆகஸ்ட், 2015-ன் கணக்குப்படி, இந்த ஆப் 2,00,000-க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது. பெரும்பாலான பாசிட்டிவ் ரிவ்யூக்களும், 500-க்கும் மேற்பட்ட 5 ஸ்டார்களுடன் ஒட்டுமொத்த சராசரியாக 5-க்கு 4.3 ஸ்டார்கள் கிட்டியிருக்கிறது. இந்த வளர்ச்சி என்பது சீரான பாதையில் உள்ளது. மக்களின் வாய்வழியாகவும், ஊடகங்கள் மூலம் இந்த செயலி பரவலாக கவனம் ஈர்த்து வருகிறது. ஆப் ஸ்டோர் ஆப்டிமைசேஷனிலும் அம்ரித் முயற்சி செய்து வருகிறார். இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமும் பரப்பி வருகிறார்.

பின்னணி கதை

ஒரு சமூக நோக்கத்தில் இந்த முயற்சியை அம்ரித் தொடங்கினாரே தவிர, லாபம் ஈட்டுவதற்காக அல்ல என்பது தெளிவு. ஆனால், இந்த செயலிக்கு கிடைத்துள்ள வரவேற்பால் அவர் மனம் மகிழ்ச்சியில் திளைப்பதற்கு வேறொரு காரணமும் உண்டு. கடந்த 2002-ல் தனது 16 வயதில் நேபாளத்தில் வசித்துக்கொண்டு கேம்பிரிட்ஜ் - ஓ லெவல் தேர்வுகளுக்குப் படித்துக்கொண்டிருந்தார். தன்னுடைய நான்கு தாத்தா - பாட்டிகள் வாழ்ந்தது இப்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் மண்ணில் என்பதை அப்போதுதான் அறிந்தார்.

கடந்த 1947, சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்களை வெற்றிகரமாக வெளியேற்றிய பிறகு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின் சுதந்திர நாடு ஆனது இந்தியா. அப்போதுதான் பாகிஸ்தான் எனும் தேசமும் பிறந்தது. 1947 ஆகஸ்ட் 14-க்கு சில காலம் முன்புதான், பாகிஸ்தான் பகுதியில் இருந்த தனது தாத்தா - பாட்டிகள் தங்களுக்குத் தேவையான அடிப்படை உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தற்போதைய இந்தியாவுக்குச் சென்றுவிடுவது என்று தீர்மானத்து செயலில் இறங்கினர்.

பல தலைமுறைகளை செழிக்கவைத்திருந்த இந்துஸ் நதியையொட்டிய வளமான அந்த மண்ணில் இனி இந்து குடும்பங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதினர். அதனால்தான் ஆயிரக்கணக்கான அகதிகளுடன் அம்ரிதின் தாத்தா - பாட்டிகளும் நடந்தும் வாகனங்களில் பயணித்தும் ஒரு வழியாக புதுடெல்லி வந்து சேர்ந்தனர்.

சமீபத்தில், 2015-ல் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது டெல்லியில் இருந்தார் அம்ரித். அடுத்த நாளே டிக்கெட் எடுத்து காத்மாண்டு பறந்தார். பிறந்தது முதல் இளைஞனாக வளர்ந்தது வரை தனக்கு நெருக்கமான மண்ணான நேபாளத்துக்கு இயன்ற உதவிகளை நேரடியாகச் செய்திட வேண்டும் என்பதே அவரது அப்போதைய நோக்கம். அங்கே பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளூர்வாசிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததை நேரில் பார்த்து நெகிழ்ந்தார். அப்படி ஒருவர்தான் வெற்றிகரமான மருத்துவரும், தொழில்முனைவரும், விருது பெற்ற மனிதநேயப் பணியாளருமான டாக்டர் ஃபாஹிம் ரஹீம். அவர் ஜே.ஆர்.எம் அறக்கட்டளை (JRMfoundation.org) அமைப்பின் நிறுவனரும் கூட. நேபாளத்தில் தன்னார்வலர்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் நிவாரண உதவிகளை அவர் மேற்கொண்டார்.

#இந்தியாபாகிஸ்தான்டே (#IndiaPakistanDay) என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள விரும்பிய அம்ரித், டாக்டர் ரஹீமையும், ஜே.ஆர்.எம். அறக்கட்டளையையும் நாடினார். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் பரப்பப்பட்ட பிரச்சார மையப்பொருள்: "ஒருவருக்கொருவர் துக்கத்தைப் மட்டும் பரிமாறிக்கொள்வதற்காக அல்லாமல், சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்" என்பது தான் அது.

#இந்தியாபாகிஸ்தான்டே, பிரச்சாரத்துக்கு மக்களிடம் இருந்தும், பல்வேறு அமைப்புகளிடம் இருந்தும் அம்ரித்துக்கு மிகப் பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது. ஜே.ஆர்.எம். அறக்கட்டளைத் தவிர, பியாண்ட் வயலன்ஸ்சின் பிரச்சார அங்கமான சர்ஹாத்பார், ஈஎல்ஏஜே அறக்கட்டளை, நெவர் ஃபர்கெட் பாகிஸ்தான், அமான் கி ஆஷா, அருண் காந்தி, தி காந்தி சென்டர் ஃபார் பீஸ், அகாஸ் - இ - தோஸ்தி மற்றும் ரோன்னி எட்ரியின் பீஸ் ஃபேக்டரி என ஆதரவுக் கரம் எதிர்பாராத அளவுக்கு நீண்டது.

எதிர்காலத் திட்டங்கள்

இந்தியா - பாகிஸ்தான் இடையே மனிதநேய அடிப்படையில் மக்களிடையே இணக்கமான உறவை வலுப்படுத்தும் வகையில், படைப்பாற்றலுடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தொடர விரும்புகிறார் அம்ரித். "இந்த செயலியை ஆண்ட்ராய்டு ஆப் ஓபன் சோர்ஸ் ஆக உருவாக்குவது குறித்து மென்பொருள் மேம்பாட்டாளர்களுடன் பேசி வருகிறேன். மற்ற நாடுகளிலும் இந்த செயலியின் பலன் கிட்ட வேண்டும். இந்தச் செயலியை இன்னும் மேம்படுத்தி, சுவாரசியங்களைக் கூட்டுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளேன்" என்று குதூகலமாக கூறினார் அம்ரித்.

நீங்களும் ட்விட்டரில் இந்தப் பிரச்சாரம் பரவுவதற்கு ஆதரிக்கலாம்; இந்த ஆப் டவுன்லோடு செய்து இப்போதே பயனடையலாம். இவர்களைப் பின்தொடர இந்த ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களையும் நாடலாம்!

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்