வீடு-வேலை சமன்பாட்டை பெண்களுக்கு எளிதாக்கிய 'ஷீரோஸ்.இன்'

1

வேலைக்குச் செல்லும் நடுத்தர வயது பெண்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது அவர்கள் தங்களது வேலையையும் - வீட்டையும் சமமாக சமாளிப்பதே. ஏனெனில் நடுத்தர வயதில்தான் அவர்களுக்கு குடும்ப பொறுப்பும் அதிகரிக்கிறது.

அத்தகைய சூழல் ஏற்படும்போது சில பெண்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க விரும்புகின்றனர். ஒரு சிலர் பகுதி நேர வேலையை விரும்புகின்றனர். இன்னும் சிலர் ஒரு சில ஆண்டுகள் முழுமையாக வேலையை துறந்துவிட்டு பின்னர் மீண்டும் ஏதாவது வேலையில் சேர்கின்றனர். சில பெண்கள் அலுவலக வேலைக்கு நிரந்தர முழுக்குபோட்டுவிட்டு வீட்டில் ஐக்கியம் ஆகிவிடுகின்றனர். இவ்வாறு வேலையைத் துறப்பதால் அவர்களுக்கு மட்டும் இழப்பு ஏற்படுவதில்லை. அவர் எந்த துறையில் வேலை செய்துவந்தாரோ அத்துறையில் இருந்து ஒரு நல்ல அலுவலரும் இழக்கப்படுகிறார் என்பதே உண்மை.

இந்த இடைவெளியை சமன்படுத்தவும், பெண்கள் சுயமுன்னேற்றத்துக்கு உதவவும் கடந்த ஜனவரி 2014-ல் ஆரம்பிக்கப்பட்டதே ஷீரோஸ்.இன் (Sheroes.in). சாய்ரீ சஹால் இந்த அமைப்பின் துணை நிறுவனர் ஆவார்.

ஷீரோஸ்.இன், வீட்டில் இருந்தபடி பெண்கள் வேலை செய்து சம்பாதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வீடு-வேலை சமன்பாட்டினை விரும்பும் பெண்களுக்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சாய்ரீ சஹால் ஃபிளெக்ஸிமாம்ஸ் (Fleximoms) என்ற அமைப்பின் துணை நிறுவனராகவும் இருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் பெண்கள் எப்போதெல்லாம் வேலை பார்க்க விரும்புகிறார்களோ அப்போது மட்டும் அவர்கள் பணிக்குச் செல்லும் வகையிலான வேலைகளை அவர்களுக்கு அடையாளம் காட்டுகின்றனர்.

"நடுத்தர வயது பெண்கள் பணியை துறப்பது அதிகமாகி வந்ததை உணர்ந்த நான் அதை தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன் அடிப்படையில் ஷீரோஸ்.இன் உருவாக்கப்பட்டது. எனது எண்ணங்களுக்கு சாத்திய வடிவம் அளித்தது ஷீரோஸ்.இன்" என்கிறார் சாயிரீ.

ஷீரோஸ், மூன்றுவிதமான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. முதலில் ஷீரோஸ் திட்டவிளக்க பிரச்சாரம், அடுத்ததாக ஷீரோஸ் தகவல் திரட்டும் பணி மூன்றாவதாக ஷீரோஸ் ஒரு சமூகத்தை உருவாக்கியது. 1100 இடங்களில் ஷீரோஸ் மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஷீரோஸ் உறுப்பினர்களும், கார்ப்பரேட் நிறுவனர்களும் பயனடைந்தனர்.

ஷீரோஸின் வெற்றி குறித்து சாயிரீ கூறும்போது, "எங்களது உதவி மூலம் சுமார் 10,000 பெண்கள் வேலை - வாழ்க்கை சமன்பாட்டை அடைந்துள்ளனர். எங்கள் அமைப்பின் மூலம் வீட்டில் இருந்தே பணிபுரியும் ஃப்ரீலான்சர்கள், தொழில்முனைவர், பயிற்சி மாணாக்கர், கார்ப்பரேட் தொழிலாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களும் பயன்பெற்றுள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு தளத்தை தவிர வேறு சில சேவைகளையும் ஷீரோஸ் பெண்களுக்காக பிரத்யேகமாக அளித்து வருகிறது. பயிற்சி வகுப்புகள், ஊக்குவிப்பு வகுப்புகள், நிதி மேலாண்மை போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஷீரோஸில் இதுவரை 3 லட்சம் பெண்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வப்போது நேரடி சந்திப்புகளும், நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர்" என்றார்.

"பெண்களின் ஆதரவு, ஷீரோஸ்.இன்னுக்கு பெருகி வருகிறது. இதன் மூலம் பயன் பெறும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஷீரோஸ்.இன் மூலம் பயன்பெற்றவர்கள் வாய்மொழியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ இந்நிறுவனத்தை உலகறியச் செய்துள்ளனர்.

இந்தியாவில் 17% பெண்கள் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கு நேரடி பங்களிக்கும் வகையில் பணி புரிகின்றனர். அதிலும் 5% பெண்கள் மட்டுமே தலைமைப் பொறுப்பில் உள்ளனர். இதனடிப்படையில் சர்வதேச அளவில் பாலின தரவரிசையில் இந்தியா 113-வது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில்தான் அதிகளவிலான பெண்கள் கல்லூரி பட்டப்படிப்பை படிக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் வேலைக்குச் செல்கிறார்களா என்றால்? இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படியே வேலைக்குச் சென்றாலும் நடுத்தர வயதை எட்டும் முன்னர் 48% பேர் வேலையில் இருந்து விலகி விடுகின்றனர். பொருளாதார சுதந்திரத்தை பெண்கள் இழப்பதும், அதேபோல் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு குறைவதும், இரண்டுமே வருந்தத்தக்கதே.


இந்நிலையில், இன்றளவில் சுமார் 1000 நிறுவனங்கள் ஷீரோஸுடன் தங்களை இணைத்துக் கொண்டு நல்ல தரமான பணியாட்களைப் பெற்றுக் கொண்டு பயனடைந்துள்ளது. சில நிறுவனங்கள் ஷீரோஸுடன் மிக நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளது. ஷீரோஸ்.இன். உடன் கிளியர்டாக்ஸ் நிறுவனம் கொண்டுள்ள தொடர்பு குறிப்பிடத்தக்கது. கிளியர்டாகஸ் ஷீரோஸ்.இன் மூலம் தேர்வு செய்த பெண் சார்டர்ட் அக்கவுண்டண்டுகளை வைத்து வரி தொடர்பான சந்தேகங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். இதேபோல் பிரின்ஸிபல் அட்வைஸர்ஸ், ஹனிவெல் போன்ற நிறுவனங்களும் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர்" என்றார்.


ஷீரோஸ் மூலம் பலன் பெற்றது என்னவோ பெரும்பாலான பெண்களே என்றாலும் ஒரு சில ஆண்களும் ஷீரோஸ் மூலம் பயன் பெற்றுள்ளனர். இன்ஜினியர்கள், ஆன்லைன் வர்த்தகர்கள், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருபவர் போன்றோர் எங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். நாங்கள் எதை போதிக்கிறோமோ அதையே செயல்படுத்துகிறோம். எங்களுடன் இணைந்துள்ள பலர் தொலைவில் இருந்து வேலை பார்த்தாலும் மிகப் பெரிய பொறுப்புகளை நிறைவேற்றி வருகின்றனர்.

"தங்களது விருப்பங்களையும், கனவுகளையும் மெய்ப்பட வைக்க ஷீரோஸ்.இன் நிறைய பேருக்கு ஒரு வரம் தரும் தளமாக அமைந்திருக்கிறது. இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டோர் தற்போது ஓர் அற்புதமான குழுவாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு பெண்ணின் கனவையும் மெய்ப்பட வைப்பதே ஷீரோஸின் தாரக மந்திரம்" என்கிறார் சாயிரீ.