குறு, சிறு மற்றும் நடுரக தொழில் முனைவோரை ஊக்குவிக்கும்      விற்பனையாளர் தொழில் கண்காட்சி!

1

சிறு தொழில்நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சென்னையில் பிப்ரவரி 2 ஆம் தேதிமுதல் இரண்டு நாட்கள் பிரமாண்ட தொழில்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுரக தொழில்நிறுவனங்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் ஆலோசகர் எஸ். சிவஞானம் சென்னையில் தெரிவித்தார்.

இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுரகத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை குறு-சிறு மற்றும் நடுரகத் தொழில்கள் வளர்ச்சி நிலையம் 2018 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சியாக தொழில் கண்காட்சியும்  பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுரக தொழில்நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.) வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

மத்திய அரசு 2012-ம் ஆண்டு பிரகடனம் செய்த பொதுக் கொள்முதல் கொள்கையை பிரபலப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் அரசுத்துறைகளும் தங்களுடைய வருடாந்திரத் தேவையான பொருள் மற்றும் சேவையில் குறைந்த பட்சம் 20 சதவீதத்தை குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்தே வாங்க வேண்டும். இந்த 20 சதவிகிதத்திலும் உள் ஒதுக்கீடாக 4 சதவிகிதம் பட்டியலினத்தோர் நடத்தும் குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும். இவையே பொதுக் கொள்முதல் கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.

2 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் இயந்திரவியல், கட்டுருவாக்கம், வார்ப்பு, அடித்துவடித்தல், வேதியியல், மின்சாரம், மின்ணணுவியல், அறைக்கலன்கள், கணினி, தகவல் தொழில்நுட்பம், போன்ற துறைகளைச் சார்ந்த குறு சிறு நிறுவனங்கள் குறிப்பாக  அரசுத்துறைகளுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் விற்பனையாளர்களாக விரும்பும் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இக்கண்காட்சியில் 150 அரங்கங்கள் அமைக்கப்படும். சுமார் 2500 பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1000 தொழில் முனைவோர்களுக்கும் மேலாகவும் பயன்பெறவும் வாய்ப்புகள் உண்டு. 15 முதல்தர பொறியியல் கல்லூரிகளும் 1000 மாணவர்களும் 500 தொழில் ஆர்வலர்களும் கலந்து கொள்வார்கள் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கண்காட்சியின் போது விற்பனையாளர்கள் தங்களை பதிவு செய்துகொள்ளும் முறை பற்றிய தொழில்நுட்பப் பயிலரங்குகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மேலும் பல்வேறு நிதி நிறுவனங்கள் தங்கள் திட்டங்களையும் சேவைகளையும் பற்றி தொழில்முனைவோருக்கு எடுத்துரைப்பார்கள். 

ஏற்றுமதி ஆவணங்களைத் தயாரிப்பது பற்றிய சிறப்புக் கருத்தரங்கு ஒன்றும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சார்ந்த திட்டங்கள்,  பொதுக்கொள்முதல் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல் மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனங்களின் விவரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கண்காட்சி மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.