பெற்றோர்களின் கவலை தீர்க்கும் 'ஃபுட் ப்ரின்ட்ஸ்' மழலையர் பள்ளி!

மழலையர் பள்ளி-நம்பிக்கை- பாதுகாப்பு

0

ஒரு வார நாளின் நண்பகல் பொழுது. பீகாரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன் நடுங்கும் கரங்களால் தொடுதிரை வசதி கொண்ட அதிநவீன கைபேசி ஒன்றை இயக்குகிறார். அவரது மனைவியும் அவருடன் இணைந்து கொள்ள இருவரும் கண் தட்டாது அந்தத் திரையை நோக்குகிறார்கள்.

இத்தனை சுவாரசியமாக அவர்கள் பார்ப்பது ஏதேனும் நெடுந்தொடரையோ, அல்லது ஆன்மீக நிகழ்ச்சியையோ அல்ல. அவர்களது பேரக்குழந்தை பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் டில்லியின் ஒரு குழந்தைக் காப்பகத்தில் நிம்மதியான உறக்கத்தில் இருக்கும் காட்சிதான் அது.

பர்வேஷ் ஷர்மா, ராஜ் சிங்கால், ஆஷிஷ் அகர்வால் ஆகிய மூவரும் இணைந்து டில்லியில் மழலையர் பள்ளி ஒன்றைத் துவக்க முடிவு செய்தனர். தொழில்நுட்பத்தின் வசதிகளும், உலகத் தரத்திலான பாடத்திட்டமும் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் பயன்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அந்நோக்கம் நிறைவேறியதின் அடையாளமே நாம் முந்தைய பத்தியில் பார்த்த காட்சி. இவர்களது காப்பகத்தோடு இணைந்த மழலையர் பள்ளியின் பெயர் “ஃபுட் பிரின்ட்ஸ்(Foot Prints)”.

“எங்களின் வகுப்பறைகள் அனைத்திலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தியிருக்கிறோம். அக்காட்சிகளை பெற்றோர்கள் நேரடியாக காணவும் வசதி செய்திருக்கிறோம். இதன் மூலம் நாளின் எந்த நொடியிலும் தத்தமது குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பெற்றோர் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆரம்பத்தில் நாள் முழுவதும் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பார்த்தபடி இருந்த பெற்றோர் இப்போது எங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்டுவிட்டார்கள். ஆனால் சில தாத்தா பாட்டியரோ இன்னமும் கூட தங்கள் பேரக் குழந்தைகளை நாள் முழுவதும் தொடர்ந்து கண்டு ரசித்து வருகின்றனர்” என்கிறார் இந்நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக அதிகாரியுமான பர்வேஷ்.

முன்கதை சுருக்கம்

டெல்லி ஐஐடியின் முன்னாள் மாணவர்களான இம்மூன்று இளைஞர்களும், 90களின் மத்தியில் அக்கல்லூரியில் ஒன்றாய் படிக்கும் போது நண்பர்களானார்கள். படிப்பை முடித்தபின் பிரிந்து, வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டனர். இவர்களில் பர்வேஷும், ராஜ் சிங்காலும் 2009ஆம் ஆண்டில் மீண்டும் சந்தித்தனர். இம்முறை இவர்களிருவரும் பிரிக் ரெட் டெக்னாலஜீஸ் எனும் நிறுவனத்தை உருவாக்கும் குழுவில் இணைந்து பணியாற்றினர்.

பர்வேஷுக்கு ஆரம்பத்திலிருந்தே தொழில் முனைவர் ஆகும் கனவு இருந்தது. 'ஃபுட் பிரிண்ட்ஸ்' துவங்குவதற்கு முன்பாகவே அவர் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தியிருக்கிறார். ஒன்று இ-லேர்னிங் எனப்படும் கணிணி வழிக் கற்றலுக்கான நிறுவனம். மற்றொன்று ஒரு மென்பொருள் நிறுவனம்.

இந்த இரு நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் பர்வேஷின் வாழ்வின் மிக முக்கியமான திருப்பு முனை நிகழ்ந்தது. ஆம், அவரது மூத்த மகன் கபீர் பிறந்தது இக்காலகட்டத்தில்தான்.

யுரேகா தருணம்

குழந்தை வளர்ப்பு தந்த அனுபவம் பர்வேஷை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ள மழலையர் காப்பகங்களின் தரத்தோடு நம் நாட்டில் இருக்கும் காப்பகங்களை ஒப்பிட்டுப் பார்த்தவருக்கு ஏமாற்றமே எஞ்சியது.

”முதல் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் என்பது குழந்தையின் வாழ்வில் மிகவும் முக்கியமான காலகட்டம். அந்த வயதுகளில்தான் அவர்களின் மூளை வளர்ச்சி முழுமையடைகிறது. ஆனால் அந்த தருணங்களின் முக்கியத்துவத்தை இங்குள்ள மழலையர் பள்ளிகள் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை” என்கிறார் பர்வேஷ்.

இதையே தொடர்ந்து சிந்தித்தவருக்கு நாமே ஏன் அத்தகைய ஒரு பள்ளியைத் தொடங்கக் கூடாது என்ற சிந்தனை வந்திருக்கிறது. தன் நண்பர்களின் உதவியோடு குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் உன்னத நோக்கத்தோடு அவர் ஆரம்பித்ததுதான் இந்த ஃபுட் பிரிண்ட்ஸ் மழலையர் பள்ளி. ஜூலை 2012ல் கூர்கனில் இவர்களின் முதல் பள்ளி துவங்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்

கூர்கன் மற்றும் நொய்டா பகுதிகளில் இது வரையில் 5 மையங்களைத் துவக்கியுள்ளனர். இப்பள்ளிகளில் தனித்தன்மையோடு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், குழந்தைகளின் தேவைகளை கவனிக்கும் பணியாளர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர். மூன்று மாதத்திலிருந்து நான்கு வயது வரை உள்ள குழந்தைகள் இப்பள்ளிகளில் பயில்கின்றனர்.

”மற்ற குழந்தைகளோடு கலந்து விளையாடும் ஆனந்தத்தை பெறுவதோடு வாழ்விற்கு அடிப்படையான கல்வியையும் ஆசிரியர்களிடமிருந்தும், பொறுப்பாளர்களிடமிருந்தும் குழந்தைகள் கற்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் பர்வேஷ்.

ஃபுட்பிரிண்ட்ஸில் நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டம் மிகுந்த கவனத்தோடும், ஆழ்ந்த ஆராய்ச்சி நோக்கோடும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் பெரியவர்களோடு இணைந்து பயில்வதே இதன் அடிப்படை.

“மூன்று மாதக் குழந்தை, கல்வி கற்பதாவது என்று உங்களுக்குத் தோன்றக் கூடும். ஆனால் உண்மையில் மூன்று மாதக் குழந்தை பார்ப்பது, கேட்பது, முகர்வது என பல்வேறு முறையில் இவ்வுலகிலிருந்து கற்கத் துவங்கி விடுகிறது. சில மாதங்களிலேயே முகங்களை அடையாளம் காணவும், நெருங்கியவர்களின் குரலுக்கு எதிர்வினையாற்றவும் முடிகிறது என்கையில் அவ்வயதில் மூளை வளர்ச்சியை அதிகரிக்க முடியுமென்பதும் சாத்தியம்தானே?” என்று பர்வேஷ் கேள்வியெழுப்புகிறார்.

குழந்தைகளின் மூளையோடு சேர்த்து உடலுக்குமான உணவைப் பற்றியும் இந்நிறுவனம் அக்கறை செலுத்துகிறது. இங்கே இருக்கும் பொழுதுகளில் மிகுந்த அக்கறையுடன் திட்டமிட்ட முறையில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவுகளை நேரத்துக்கேற்ப வழங்குகிறது. பெற்றோர்கள் தாங்களே தயாரித்த உணவு வகைகளை கொடுத்தனுப்புவதானால் அதற்கும் வழி வகைகள் உண்டு.

”பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்றவாறு சற்று தங்கள் சமையல் முறைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும். இங்கே நாங்கள் மிகவும் சத்தான சரிவிகித உணவையே குழந்தைகளுக்கு தயாரித்து அனுப்புகிறோம். வருடத்தில் கிட்டத்தட்ட 40 வகை காய்கறிகளையும், பழங்களையும் குழந்தைகள் ருசிபார்க்குமாறு பார்த்துக் கொள்கிறோம்” என்று தொடர்கிறார் பர்வேஷ்.

பெற்றோர் கண்காணிப்புக் கேமிராக்கள் மூலம் நேரடியாக குழந்தைகளின் வகுப்பறை நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்பதோடு குறுஞ்செய்திகள் மூலமாகவும் தங்கள் குழந்தைகளின் கல்வி, உணவு, தூக்கம் போன்ற செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பெற முடியும்.

அமெரிக்காவோடோ அல்லது இங்கிலாந்தோடோ ஒப்பிடுகையில் இந்த தரமான சேவைக்கு இந்தியப் பெற்றோர் செலவழிக்க வேண்டியிருப்பது சற்று குறைவான தொகையே. வீட்டிலிருந்தே உணவு கொடுத்துவிடுவதாக இருக்கும் பட்சத்தில் 1 லட்சத்தி 30ஆயிரம் ரூபாயும், பள்ளியே உணவளிப்பதாக இருந்தால் ஒன்றரை லட்ச ரூபாயும் ஆகிறது.

இத்துறையில் உள்ள வாய்ப்புகள்

ஒரு ஆராய்ச்சியின் படி இந்தியாவில் 300 மில்லியன் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். எனவே தரமான குழந்தை காப்பகங்களுக்கு இங்கே பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

“வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் நடுத்தர வர்க்க குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் அதிகம் செலவழிக்கத் தயாராக உள்ளனர். எனவே மழலையர் பள்ளி மற்றும் காப்பகங்களுக்கு இங்கே நல்ல தேவை உள்ளது” என்கிறார் இப்பள்ளிகளின் நிர்வாக அலுவலரான ராஜ் சிங்கால்.

வீ கேர்(We Care - in Bengaluru), க்ளே ஸ்கூல்(Klay Schools - across India), மதர்ஸ் ப்ரைட்(Mothers’ Pride - across India) போன்ற வேறு சில நிறுவனங்களும் இத்துறையில் தங்கள் சேவையை வழங்கி வருகின்றன.

இதுவரையில் அதிகபட்சமாக இப்பள்ளியின் ஐந்து மையங்களிலுமாக 700 குழந்தைகள் வரை பயின்றுள்ளனர். 400 குழந்தைகள் தற்போது பயின்று வருகின்றனர். இந்த குறுகிய காலகட்டத்தில் லாபமாக இந்நிறுவனம் ஈட்டியுள்ள தொகை மட்டும் 6 கோடி. இத்தொழில், முதலீட்டாளர்களின் ஆதரவைப் பெறுவதிலும் சளைக்கவில்லை. கடந்த சில வருடஙக்ளில் 7 கோடி வரையில் முதலீட்டுத் தொகையை இப்பள்ளி திரட்டியுள்ளது.

டெல்லியிலேயே மேலும் 40 மையங்களைத் திறக்க திட்டமிட்டிருக்கிறது ஃபுட்பிரிண்ட்ஸ் நிறுவனம். கூடவே, விரைவில் மற்ற மாநகரங்களிலும் கால் பதிக்கவுள்ளது என்று தங்கள் எதிர்காலதிட்டம் பற்றி கூறுகிறார் பர்வேஷ். எனவே விரைவில் மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னையிலும் இந்நிறுவனம் தங்கள் சேவையைத் தொடரஉள்ளது.

இணையதள முகவரி: Footprints

ஆக்கம்: Aparna Ghosh| தமிழில்: எஸ்.பாலகிருஷ்ணன்