ராம்ஜாஸ் கல்லூரி விவகாரம்: தேசியவாதம் என்ற பெயரில் மற்றும் ஒரு அடக்குமுறையா?

0

ராம்ஜாஸ் கல்லூரி சம்பவம் அரசியல் அமைப்பு குறித்தும் சமூகத்தின் முன்னால் நீண்டுகொண்டிருக்கும் பாதை குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறது. இது ஒரு சிறிய பிரச்சனை. உலகின் எந்த ஒரு பகுதியிலும் நடைபெறும் கருத்தரங்கு போலவேதான் இதுவும் நடந்திருக்கவேண்டும். ஆனால் சமூகவிரோதிகளுடன் இணைந்திருப்பதாக கூறப்படும் சிலரை கருத்தரங்கிற்கு அழைத்தது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. அவர் குற்றவாளி என்று இன்னும் தீர்பளிக்கப்படவில்லை. தண்டனை வழங்கப்படவில்லை. ஆனால் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. 

பட உதவி: Hindustan Times
பட உதவி: Hindustan Times

இது மூன்று அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. முதல் கேள்வி ஒரு குடிமகனின் அடிப்படை கருத்துரிமை மீறுதல் என்றால் என்ன? இரண்டாவது கேள்வி அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது எது என்பதையும் யார் குற்றவாளி என்பதையும் தீர்மானிப்பது யார்? மூன்றாவது கேள்வி ஒருவேளை ஒருவர் கருத்து சுதந்திரத்தை மீறினால் அவரை தண்டிப்பது யார்?

ராம்ஜாஸ் கல்லூரியில் நடைபெற்றிருக்கவேண்டிய செமினார் நடைபெறவில்லை. இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்புவதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் செமினாரில் கலந்துகொண்டால் இந்தியாவிற்கு எதிரான கூற்றுகளே நடைபெறும் என்று யூகிக்கப்பட்டதால் இடையூறுகளும் காழ்ப்புணர்ச்சிகளும் வெளிப்படுத்தப்பட்டன. கொடூரமாக கொலை செய்வார் என்று யூகித்து முன்கூட்டியே ஒருவரை தூக்கிலிடுவது போலவே இச்செயல் அமைந்துள்ளது. சட்டத்தின் பார்வையில் ஒரு குற்றம் நடக்கலாம் எனும் எதிர்பார்ப்பின் அடிப்படையிலோ யூகத்தின் அடிப்படையிலோ ஒருவரை குற்றவாளி என்று எடுத்துக்கொள்ள முடியாது. குற்றவாளி என்று அறிவிக்கவோ குற்றம் சாட்டவோ குற்றம் நடந்திருக்கவேண்டும். இங்கே தேசியவாதம் என்கிற பெயரில் யூகத்தின் அடிப்படையில் ஒரு குடிமகனின் அடிப்படை கருத்துரிமை அடக்கப்படுகிறது.

இது விநோதமாக உள்ளது. ஆபத்தாக உள்ளது. இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் யாருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்காது. கருத்துரிமையை குறைக்க தொலையுணர்வு தொடர்பு மற்றொரு சாதனமாக மாறிவிடும். சுதந்திர பேச்சிற்கே இடமில்லாமல் போய்விடும். எவ்வித கலைவேலைகளும் திறம்பட சிறக்காது. எந்தவித திரைப்படங்களும் உருவாகாது. எவ்வித கல்விசார்ந்த நடவடிக்கைகளும் சிகரத்தை தொட முடியாது. எதிர்கால வளர்ச்சிக்கான எந்தவித புதுமைகளும் இருக்காது. எந்த ஒரு மாணவனும் தவறு இழைக்க அனுமதிக்கப்படமாட்டார். ஏனெனில் அவரது எண்ணங்கள் வெளிப்படுவதற்கு முன்பே யூகத்தின் அடிப்படையில் முளையிலேயே கிள்ளி எறியப்படும். இந்த நடவடிக்கைகள் கருத்துரிமையை தேவைக்கு அதிகமாக உரைப்பதாகவும், அர்த்தமற்றதாகவும் வழக்கத்திலில்லாததாகவும் மாற்றிவிடும். சொல்லப்போனால் இது ஒரு தடை உத்தரவு. தேசியவாதத்தின் பெயரில் ஒட்டுமொத்த சமூகத்திற்குமான தடை உத்தரவு.

அடிப்படை உரிமைகள் முழுமையாக இல்லை என்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இது கருத்துரிமைக்கும் பொருந்தும். இதிலும் முழுமையான சுதந்திரம் இல்லை. நியாயமான கட்டுப்பாடுகளையும் அரசியலமைப்பு வகுத்துள்ளது. கருத்துரிமை குறித்து அதில் கூறப்படுவதாவது – ”உங்கள் சுதந்திரம் என்பது எனது மூக்கின் நுனி வரைதான்.” அதாவது கருத்துரிமை என்கிற பெயரில் யாரும் சமூகத்தை நெறியற்ற வழியில் செலுத்தவோ ஜாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்தவோ, வெறுப்பு அல்லது வன்முறையை ஒருவரது பேச்சு, எழுத்து, செய்கை போன்றவற்றால் பரப்பவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஆனால் அதற்கு ஒருவர் முதலில் பேசவேண்டும். நியாயமான கட்டுப்பாடுகள் வெற்றிடத்தில் பயன்படுத்த முடியாது. இந்த கோணத்தில் பார்க்கும்போது கருத்துரிமை தடுக்கப்படுவதால் ராம்ஜாஸ் சம்பவம் அரசியலமைப்பின் அடிப்படைகளிலிருந்து வரம்பு மீறியதாகவே பார்க்கப்படும். கருத்துரிமை இல்லாமல் போகும்போது ஜனநாயம் விலகிவிடும். 1975-ல் இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தபோது இவ்வாறுதான் நடந்தது.

அடுத்தது இதற்குச் சமமான மற்றொரு கேள்வி. கருத்துரிமை மீறப்பட்டதை யார் முடிவு செய்வார்கள்? அரசியலமைப்புப்படி யாரேனும் புகார் அளித்திருக்கும் பட்சத்தில் காவல்துறை விஷயத்தை ஏற்றுக்கொண்டு விசாரிக்கலாம். அதற்குப் பிறகு குற்றம் உண்மையில் நடந்திருக்குமேயானால் நீதிமன்றம் தனது சட்ட நடவடிக்கைகளை தொடங்கலாம். யாருடைய புகாரும் இல்லாமலும் நீதிமன்றம் தானாகவே நடவடிக்கைகளை துவங்கலாம். ஆனால் ராம்ஜாஸில் சில தனிநபர்கள் தாமாகவே முடிவெடுத்தனர். அவர்களே புகார்தாரர்களாகவும் காவல்துறையாகவும் தங்களை நினைத்துக்கொண்டு நீதிமன்றத்தின் பங்கையும் அவர்களே செயல்படுத்தினர். ஏபிவிபி மாணவர்கள் வளாகத்தில் குறுக்கிட்டு, வன்முறையை கட்டவிழ்த்து செமினாரை ஏற்பாடு செய்தவர்களுக்கு பாடம் புகட்டினர். இது சட்டத்தை அமலாக்குவதல்ல, சட்டத்தை மீறுவதாகும்.

இப்படிப்பட்ட செமினார் அராஜகத்திற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் வழிவகுக்கும் என்று காவல்துறை ஊகிக்கும் பட்சத்தில் அந்த செமினாரை காவல்துறை மட்டுமே தடுக்கலாம். மாணவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர். துரதிர்ஷ்டவசமாக காவலர்கள் அமைதியான பார்வையாளர்களாகவே இருந்தனர். கைக்கூலிகளை விலக்கவுமில்லை தடுக்கவுமில்லை. இது அரசியலமைப்பை நாசமாக்குவதற்கு சமமாகும். 

அரசியலமைப்பு நாசமாவதும் ஆபத்தானதுதான். அரசியலமைப்பு ரீதியில் பார்க்கும்போது அரசியலமைப்பை நாசப்படுத்துவதன் மூலம் ஏபிவிபி தேசவிரோதமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கடந்த வருடம் ஜேஎன்யூ இந்தியாவிற்கு எதிரான சக்திகளை உருவாக்குவதாக குற்றம்சாட்டப்பட்டனர். இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியது எப்படியோ டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. கண்ணையா குமார் உட்பட சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் மூத்த வழக்கறிஞர்கள் எதிரிலேயே அவர் தாக்கப்பட்டார். அந்த டேப்பில் இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பிய காஷ்மீரி இளைஞர்கள் என்று சொல்லப்பட்ட மற்ற எட்டு நபரும் கண்டுபிடிக்கப்படாமல் கைது செய்யப்படாமல் இருந்தது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் காவல்துறை தற்போது தன்னுடைய அறிக்கையில் கண்ணையா குமார் அவ்வாறான கோஷங்களை எழுப்பவில்லை என்று தெரிவிக்கிறது. இங்கும் அரசியலமைப்பை நாசப்படுத்தும் வேலை நடந்துள்ளது. நீதிமன்றம் புறக்கணிக்கப்பட்டது.

வலதுசாரி ஆர்வலர்களும் அவர்களது ஊடக நண்பர்களும் நீதிமன்றமாகவும், நீதிபதியாகவும் மாறினர். குற்றம்சாட்டப்பட்டவர் தனது தரப்பு நியாயத்தை தெரிவிக்கும் முன்பே தீர்ப்பு அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்த நிலை தொடருமானால் நீதிமன்றங்களோ காவல்துறையோ தேவைப்படாது. மக்கள் தங்களது பிரச்சனைகளை பொதுவெளியில் தீர்த்துக்கொள்வார்கள். சட்ட ஒழுங்கு சீர்கெட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே ஏற்படும். அதாவது வலிமையானவர்கள் மற்றவர்களை அடக்கி ஆளலாம் என்கிற நிலை ஏற்படும்.

கடந்த சில வருடங்களில் தேசியவாதம் என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய குழந்தை பிறந்துள்ளது. தேசியவாதம் என்கிற பெயரில் எதிர்த்து செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் நியாயப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வெளிப்படையான மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க ஏஜென்சிகள் அமைதியாக உள்ளது. போட்டி சித்தாந்தங்களைக் கொண்ட சமூகத்தின் ஒரு பகுதிக்கு கருப்பு நிறத்தை அடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் பார்வையில் அந்தப் பகுதியினரின் சட்டபூர்வமான தன்மையை குலைத்து தங்களது மரியாதையைப் பெற முயல்கின்றனர். இந்தியா ஜனநாயகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தாலும் தேசியவாதம் என்னும் பெயரில் நிலவும் வன்முறையும் சகிப்புத்தன்மையற்ற நிலையும் நிலைமையை தலைகீழாக மாற்றிவிடும். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையானவர்களுக்கானது மட்டுமல்ல. சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்பதாக இருக்கவேண்டும். அது தனிநபராக இருக்கலாம், சமூகமாக இருக்கலாம், கருத்தாக இருக்கலாம், கருத்தியலாக இருக்கலாம்.

ஒரு மாநிலம் வலிமையற்றவர்களை பாதுகாக்கும் வண்ணம் இருக்கவேண்டும். இல்லையெனில் அந்த மாநிலத்தின் கருத்தியல் குறித்த தீவிர கேள்விகள் எழுப்பப்படும். சிறுபான்மையினரின் உரிமைகளை மாநிலத்தால் பாதுகாக்க முடியாததற்கு கடந்த சில வருடங்களாக மாநிலம் வலிமையிழந்து காணப்படுவதுதான் காரணமா என்கிற கேள்வியை ராம்ஜாஸ் விவாதம் எழுப்பியுள்ளது. ஆதரவளிக்க முடியாத நிலையில் இருந்தாலோ அல்லது குற்றவாளிகளுடன் இணைந்திருந்தாலோ காவல்துறையால் பார்வையாளராக மட்டுமே இருக்கமுடியும். இந்திய மாநிலம் வலிமையற்றது என்பதை நான் நம்ப மறுக்கிறேன். எனவே வலிமையானவர்களுடன் இணைந்துள்ளது என்றே சொல்லலாம். இது நாட்டின் வளர்சிக்கான அறிகுறி அல்ல. நாடு வளம்பெற அரசியலமைப்பு உயர்ந்திருக்கவேண்டும். அரசியலமைப்பை நாசப்படுத்தும் ஒவ்வொரு செயலும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். இதைச் சரிசெய்ய நேரத்தை கடத்தாமல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)