இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையில் ராணுவ அதிகாரி ஆகிய முதல் பெண்மணி!

0

கடந்த இரண்டாண்டுகளாக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். எனினும் ஒரு புதிய துறையில் இது படிப்படியாகவே நடந்து வருகிறது. சமீபத்திய காலம் வரை உதவி ஆணையர் அளவில் பெண்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதற்கு துணை ராணுவப் படையான இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை (ஐடிபிபி) பொருத்தமான உதாரணமாகும்.

பீஹாரைச் சேர்ந்த 25 வயதான பிரக்ரிதி இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையில் நேரடியாக ராணுவ அதிகாரி அந்தஸ்து பெற்ற முதல் பெண்மணி ஆகியுள்ளார். 

முதல் முயற்சியிலேயே கடந்த வருடம் எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் அவர்.

பீஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரக்ரிதி சிறு வயது முதலே நாட்டிற்காக சேவை செய்ய விரும்பியதாக தெரிவித்தார். அவரது அப்பா இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார். இவர் பிரக்ரிதிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார்.

2016-ம் ஆண்டு இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையில் ராணுவ அந்தஸ்து கொண்ட பெண் அதிகாரியை தேர்ந்தெடுக்கப் போவதாக வெளிவந்த அரசாங்க அறிவிப்பு குறித்து பிரக்ரிதி தெரிந்துகொண்டார். அதன் பிறகு மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) தேர்விற்கு தயாராக தீர்மானித்தார். முதல் விருப்பமாக இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையை தேர்வு செய்தார். கடினமாக உழைத்து தன்னைத் தயார்படுத்திக் கொண்டதும் வெற்றிகரமாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார்.

பிரக்ரிதி மின்பொறியியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்தார். தற்போது உத்தர்கண்டின் பித்தோரகர் பகுதியில் அமைந்துள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை முகாமில் நியமிக்கப்பட்டுள்ளார். தெஹ்ராதூனில் உள்ள இராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு செல்ல உள்ளார்.

இதற்கு முன்பு இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையின் உயர் பதவிகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மருத்துவராகவோ அல்லது தொழில்நுட்பக் குழுவிலோ மட்டுமே நியமிக்கப்படுவார்கள். எனினும் ராணுவ அதிகாரி ஆகியுள்ள முதல் பெண்மணி பிரக்ரிதி ஆவார்.

பிரக்ரிதிக்கு அவரது பெற்றோர் முழு ஆதரவளித்ததாகவும் அவர் தனக்கு விருப்பமான வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்க சுதந்திரம் அளித்ததாகவும் தெரிவிக்கிறார். மற்ற பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆண், பெண் பேதமின்றி அவர்களுக்கு பிடித்த வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கட்டுரை : THINK CHANGE INDIA