7 நாட்களில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவது எப்படி?

6

ஸ்டார்ட் அப் தொடங்குவது என்பது கடினமான காரியம் என்று எனது நண்பர்கள் பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு நிறுவனத்தை தொடங்குவது மிக சுலபம், ஆனால் அதை வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்து செல்வதுதான் கடினம். சரி 7 நாட்களில் ஒருவர் ’ஸ்டார்ட் அப்’ நிறுவனம் ஒன்றை தொடங்கமுடியுமா? ‘விடாமுயற்சி’ என்ற பண்பை பின்பற்றுவோர் நிச்சயம் அதை செய்துவிடமுடியும்...

அந்த 7 நாட்களை எப்படி ப்ளான் செய்யவேண்டும்? 

நாள் 1: ஆராய்ச்சி

பலகோடி வருமான நிறுவனங்கள் எல்லாம் எப்படி தொடங்கியது என்று உங்களுக்கு தெரியுமா? தங்கள் அருகாமையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஐடியா’வைக் கொண்டு அவர்கள் தொடங்கியதால் அது சாத்தியமானது. 

அதனால் உங்களுக்குள் இருக்கும் ஆராய்ச்சியாளனை வெளியே கொண்டு வாருங்கள்! உங்களை சுற்றியுள்ள பிரச்சனைகளை தேடுங்கள், தினம்தினம் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகள் என்னவென்று ஆராயுங்கள். அதை ஒரு பட்டியலாக இட்டு பார்த்தால் முதல் நாளிலேயே குறைந்தது உங்களிடம் 10 பிரச்சனைகள் கையில் இருக்கும். 

நாள் 2: வழி தேடுங்கள்

இப்போது உங்களுக்கு பிரச்சனை என்ன என்று தெரியும், அதற்கு இவ்வுலகில் இல்லாத தீர்வு என்ன என்றும் புரிந்திருக்கும். சிந்திக்க தொடங்குங்கள்... அந்த பிரச்சனையை நீங்கள் எப்படி தீர்க்கப்போகிறீர்கள் என்று... நீங்கள் வயதில் இளையவர், உங்களுக்கு அதற்கு தகுந்த தகுதி இல்லை என்றெல்லாம் பின்வாங்கவேண்டாம். 5 வயது ஜோ ஜார்விஸ் என்ற சிறிய பையன் தான் தன் வீட்டு அருகாமையில் உள்ளோரின் கழிவு அகற்றல் பிரச்சனைகளுக்கு உதவி, பின்னர் ஒரு வெற்றிகரமான கழிவு அகற்றல் நிறுவனத்தை நிறுவமுடிந்தது. பாருங்கள் இது இத்தனை சுலபமானது!

நாள் 3: சமூகத்தினருடன் பழக்கம்

நீங்கள் இது வரை எத்தனை மக்களை சந்தித்திருப்பீர்கள்? பள்ளி, கல்லூரி நண்பர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சமூக வலைதள நண்பர்கள் என்று எத்தனையோ பேர்... அவர்கள் பெயர்களை பட்டியல் இடுங்கள். யார் யாருக்கு என்னென்ன திறமை உள்ளது அவர்கள் உக்களுடைய ஐடியா’விற்கு எப்படி உதவ முடியும் என்றும் குறிப்பெடுங்கள். 

பொதுவாக ஒரு குழுவில், ஒரு கண்டுபிடிப்பாளர், ஒரு தயாரிப்பு டிசைனர், ஒரு சந்தைப்படுத்தும் வல்லுனர் மற்றும் நிதி ஆலோசகர் இருக்க வேண்டும். இவை பார்ப்பதற்கு பெரிய விஷயங்கள் போல் தோன்றினாலும், இந்த திறமைகளை கொண்டவர்கள் உங்கள் நட்பு வட்டத்திலேயே நிச்சயம் இருப்பர். 

லிஸ்ட் ரெடி என்றால் உடனடியாக அவர்களிடம் உங்கள் ஐடியாவை சொல்லுங்கள். அவர்கள் உங்கள் ஐடியா’வை திருடி விடுவார்கள் என்று அஞ்ச வேண்டாம். அதைக்காட்டிலும் அவர்களது கூடுதல் அறிவுரைகள் உங்கள் எண்ணத்தை மெருக்கேற்றவே உதவும். 

நாள் 4: உருவாக்கம்

இப்போது உங்கள் கையில், பிரச்சனை என்ன? அதற்கான தீர்வு, அதை சரிசெய்யும் குழு எல்லாமே ரெடி. உங்கள் புத்தாக்கத்தை செயலில் காட்ட தக்க நேரம் வந்துவிட்டது நண்பா... உங்கள் மனதில் கட்டியிருந்த எண்ணக்கோட்டையை உருவாக்க களத்தில் இறங்கு. தாமதிக்காதே... முதலில் ஒரு சாம்பிள் தயாரிப்பு தான் தேவை அதை தயார் செய். 

நாள் 5: பகிருங்கள்

உலகத்துடன் உங்கள் தயாரிப்பை பகிருங்கள். வாடிக்கையாளர்கள்  மற்றும் வழிகாட்டிகளுடன் உங்கள்  தயாரிப்பை பகிருங்கள். மற்ற தொழில்முனைவோர்களிடம் அதை பற்றி விளக்குங்கள். 1000 பேர் என்ற இலக்கை வைத்து அவர்களிடம் உங்கள் தயாரிப்பை பகிர்ந்து அவர்களின் கருத்து மற்றும் குறைகளை கேட்டு அறியுங்கள்! 

நாள் 6: ஒரு அடி பின்னே

உங்கள் தயாரிப்பைப் பற்றி இப்போது உங்களிடம் பலவிதமான மக்களின் கருத்துக்கள் இருக்கும். அதை ஒவ்வொன்றாக பார்த்து முடிந்தவரை சரிசெய்து உங்கள் தயாரிப்பை மறுசீரமைப்பு செய்யுங்கள். உங்களின் தயாரிப்பு உங்களுக்கு திருப்தி அளித்துவிட்டால்... ரெடி அதை சந்தையில் வெளியிட தயாராகுங்கள்...

நாள் 7: வெளியீடு

எல்லா வெற்றி நிறுவனங்களும் தங்களில் முதல் 1000 வாடிக்கையாளர்களை, தயாரிப்பை வெளியிட்ட சில நாட்களிலேயே பெற்றுள்ளனர். அதேப்போன்ற சூழ்நிலையை உருவாக்க உங்கள் வெளியீட்டை பிரம்மாண்டமாக, கடுமையாக சந்தையில் செய்யவேண்டும். உங்களின் முதல் 1000 வாடிக்கையாளர்கள் வந்துவிட்டால், உடனே நீங்கள் உங்கள் தயாரிப்பில் சில மாற்றங்களை, மேம்பாடுகளை செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உங்கள் தயாரிப்பு வாடிக்கையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வை அளித்து, அவர்களை திருப்திபடுத்தும். 

என்ன நண்பர்களே உங்கள் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தை தொடங்க நீங்கள் தயாரா???

(பொறுப்புதுறப்பு: இக்கட்டுரையின் ஆங்கில எழுத்தாளர் திபாகர் பாலா. இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல)