ஜெயலலிதாவின் பால்ய நண்பர் பகிரும் நினைவலைகள்...

0

"நீ அன்று இருந்த அதே வால் பையனை போலவே இன்றும் இருக்கிறார் விஜி... என் தலைமுடி பின்னலை இழுத்து கிண்டல் செய்வாயே...” என்று சிரித்த முகத்துடன் தன் பள்ளி நண்பரை வரவேற்று அவருக்கு நாற்காலி போடச்சொல்லி காபி கொடுக்கச் சொன்னார் ஜெயலலிதா. 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவு பெங்களூரில் உள்ள அவரது பால்ய நண்பர் விஜய் ராவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னைக்கு குடிபெயர்வதற்கு முன் பெங்களூரில் தனது குழந்தைப்பருவத்தை கழித்தவர் ஜெயலலிதா. அவரை ஒரு துருதுருப்பான பாரம்பரியமிக்க பெண்ணாக நினைவில் வைத்திருக்கிறார் விஜய்.  

ஜெயாவை விட மூன்று வயது இளையவர் விஜய் ராவ். 1950’ களில் டாடா சில்க் ஃபார்ம் பகுதியில் பலருக்கு மத்தியில் பிரகாசித்து நின்ற பெண்ணாக ஜெயலலிதாவை நினைவு கூறுகிறார் விஜய். அம்மு என்ற ஜெயலலிதா தனது தாயார் சந்தியா, தாத்தா, பாட்டியுடன் பெங்களூரில்   வசித்து வந்து, பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார். 

ஜெயா சலுகைகள் பல பெற்ற பெண்ணாக வளர்ந்தார். பள்ளிக்கு டோங்கா என்ற குதிரை வண்டியில் செல்வார். 

“குழந்தைகள் நாங்கள், தெற்கு பெங்களுருவில் உள்ள டாடா சில்க் ஃபார்ம் மைதானத்தில் ஒரு குழுவாக சேர்ந்து விளையாடுவோம். நொண்டி விளையாட்டு, துரத்தி ஓடி ஒருவரை பிடித்து விளையாடுதல், பெரிய மாணவர்கள் விளையாடும் கபடியை கண்டு களித்தல் என்று எங்கள் சிறு வயது நாட்களை கழித்தோம்,” என்றார் விஜய். 

அப்போதும் கூட, அம்மு தான் செய்தவற்றில் தீவிரமாக இருந்து அதில் வெற்றிப்பெற முயற்சிப்பாள். சிறு வயது முதலே அவர் கொண்ட இந்த குணம், அவரை ஒரு சிறந்த அரசியல்வாதியாக ஆக உதவியது. லலிதாம்பாள் என்பவரிடம் பரதம் பயின்றார் ஜெயா அவரும் எங்கள் வீட்டு அருகில் வசித்தார்.

“ஒரு நாளும் தனது நடன வகுப்பை தவறவிடமாட்டார் அம்மு. அப்போதே அதில் அவருக்கு இருந்த ஈடுபாடும் கவனமும் என்னை ஈர்த்தது,” என்றார் விஜய்.

மற்றொரு அண்டை வீட்டுக்காரரான, சிகே.ருக்மணி இடம் அவரின் தாயார், தமிழக முதல்வராக இருப்பவர் நம் வீட்டு அருகே வசித்த அந்த சுட்டிப்பெண் அம்மு என்று கூறியபோதே அடையாளம் கண்டுள்ளார். பன்முகத்திறமை கொண்டு, படங்களில் நாயகி ஆகி பின் அரசியலில் பரிமளித்தவருடன் சிறுவயதில் தானும் பரதம் கற்றவர் என்று நீண்ட நாட்களுக்கு பின்னரே தெரிந்து கொண்டார் ருக்மணி. 

“எனக்கு அவ்வளவாக நினைவில் இல்லை, அப்போதெல்லாம் படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாததால் என்னிடம் நாங்கள் சேர்ந்து இருக்கும் படம் ஏதும் இல்லை. ஆனால் நானும் அம்மு சென்ற அதே நடனப்பள்ளியில் பரதம் கற்றேன்,” என்றார் ருக்மணி.  
பெங்களுரு பிஷப் காட்டன் பள்ளி வகுப்பு படம் - கீழ் வரிசை வலது கடைசியில் ஜெயலலிதா
பெங்களுரு பிஷப் காட்டன் பள்ளி வகுப்பு படம் - கீழ் வரிசை வலது கடைசியில் ஜெயலலிதா

விஜய் ராவ், தன் குழந்தைப்பருவ நண்பர் தமிழ் சினிமாவில் நுழைந்த பொழுதிலும் அவரை பற்றி ஆவலுடன் அவ்வப்போது தெரிந்து கொண்டுள்ளார். பெங்களூரில் தமிழ் சினிமா ரிலீஸ் ஆகும் என்பதால் ஜெயலலிதாவின் படங்களை அவர் பார்த்து மகிழ்ந்துள்ளார். 

”ஜெயாவின் குடும்பம் பெங்களூரில் 1959 முதல் 60 வரை இருந்தது. மாஸ்டர் ஹிரனய்யா எனும் நாடகக் கலைஞர் எங்கள் ஏரியாவிற்கு குடிபெயர்ந்தார். ஜெயாவின் அம்மா சந்தியாவும் நாடக நடிகை என்பதால் எல்லாரும் ஒரு குழுவாக சேர்ந்து சென்னைக்கு வாய்ப்புகள் தேடி சென்றனர்,” என்றார் விஜய்.

பல ஆண்டுகள் கழித்து, 1994 இல் ராவ் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்றார். ஜெயாவின் தனிப்பட்ட அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு தான் அவரது சிறுவயது நண்பர் என்றும் அவரை சந்திக்க விழைவதாகவும் கேட்டிருந்தார் ராவ். 

”காலை 8.30 மணிக்கு போயஸ் தோட்டம் அடைந்தேன். ஆனால் என்னை அங்குள்ள கமாண்டோ படையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. நல்லவேளை என்னிடம் பேசியிருந்த அதிகாரி காரில் அங்கே வர, என்னை கண்டவுடன் தன் வண்டியினுள் ஏற்றிக்கொண்டு உள்ளே சென்றார்.” 

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. ஒரு நீண்ட பெரிய ஹால், அதில் ஒரு பெரிய நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்திருந்தார், அவர் அருகே அப்போது இருந்த மாநில தலைமை செயலாளர் வெங்கட்ராமன் இருந்தார். சில எம்எல்ஏ’க்கள், எம்பி’க்கள் மற்றும் அதிகாரிகளும் அங்கே நின்று கொண்டிருந்தனர் என்றார். 

“ஒவ்வொருவரையும் பேசிவிட்டு வெளியே அனுப்பினார் ஜெயா. அப்போது தான் அங்கே நான் மட்டுமே கடைசி நபராக நின்று கொண்டிருந்ததை உணர்ந்தேன். அப்போது என்னை நோக்கி அவர்... ஆம் என்று கடுமையாக கேட்க, என்னை அழைத்து சென்ற அதிகாரி ஜெயலலிதாவின் காதில் நான் யார் என்பதை கூறினார். பெங்களூரிவில் இருந்து வந்துள்ளதாகவும் பால்ய நண்பர் என்பதையும் கூறினார். ”

விஜய் ராவ், ஜெயாவிடம் தங்களின் பால்ய ஸ்நேகத்தை பற்றியும், அப்போது நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்த முயற்சித்து பேசினார். 10 நிமிடங்கள் நின்றுகொண்டே பேசிய ராவை ஜெயா உணர்ச்சியற்று நோக்கியதாக விஜய் கூறினார். ஆனால் திடீரென சிரித்த ஜெயா அவரை நோக்கி,

”என் தலைமுடி பின்னலை இழுத்து கிண்டல் செய்த அந்த வால் பையன் விஜி தானே நீ...?? ஆம் என்று சொல்வதற்குள் விஜய் அமர நாற்காலி போட உத்தரவிட்டார் ஜெயலலிதா. இவர் பெங்களூரில் இருந்து வந்துள்ள என் கெஸ்ட் அவருக்கு காபி கொடுங்கள் என்று சொன்னார்.”

பழைய கதைகளை பேசினோம். தன் வீட்டு அருகே விளையாட வந்ததை பற்றி பேசினார்கள். விஜயின் பாட்டி காவேரி அம்மாவின் பெயரைக்கூட நினைவுக்கொண்டு விசாரித்தார் ஜெயலலிதா. அது ஒரு நல்ல சந்திப்பு. இப்போதும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது என்கிறார் விஜய்.நான் என்ன செய்கிறேன் என்று கேட்டறிந்த அவர், ஒரு பத்திரிகையாளராக பணியாற்றுகிறேன் என்று கூறியதும் சரி என்று கேட்டுக்கொண்டார்.”

நான் கிளம்பும் போது அவர் கூறியது, “உங்களுக்கு எப்பொதெல்லாம் என்னை பார்க்கத் தோன்றுகிறதோ, எனக்கு ஃபாக்ஸ் அனுப்புங்கள், நான் ஒப்புக்கொண்டபின் வந்து பாருங்கள்,” என்றும் சொன்னார். 

ஆனால் அதற்கு பின் ராவ் அவரை சென்று பார்க்கவில்லை. 

”எனக்கு அவரைப்பற்றிய நினைவுகள் அப்படியே உள்ளது. ரெட்டை ஜடையுடன் இருந்த ஒரு அழகான பெண்...” 

ஆங்கில கட்டுரையாளர்: அனில் புதூர் லுல்லா