கன்னிகாதான சடங்கைத் தவிர்த்து திருமணம் செய்து வைக்கும் பெண் புரோகிதர்!

திருமண சடங்கில் ஆணதிக்கத்தை தவிர்க்க தானே புரோகிதர் ஆன நந்தினி.

0

பெற்றோர்கள் தங்களது மகளை ஒரு பொருளாகவே பாவித்து அடுத்தவருக்கு தானமாக வழங்கும் மனநிலை மக்களிடையே இருந்து வருகிறது. இந்த ஆணாதிக்க மனநிலையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நந்தினி போமிக்.

நாம் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்திலேயே வாழ்கிறோம். இங்கு பெரும்பாலான சடங்குகள் ஆண் புரோகிதர்களால் செய்யப்படுகிறது. திருமணங்களிலோ அல்லது மற்ற சுப நிகழ்ச்சிகளிலோ பெண் புரோகிதர்கள் சடங்குகளைச் செய்வதைப் பார்ப்பது அரிது. எனினும் அனைத்து நிலைகளிலும் காணப்படும் இத்தகைய சமூக தடைகளை பெண்கள் தகர்த்து வருகின்றனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் கொல்கத்தாவைச் சேர்ந்த நந்தினி போமிக். இவர் ஒரு பெண் புரோகிதர். இவர் கன்னிகாதானம் போன்ற ஆணாதிக்க முறையை வெளிப்படுத்தும் சடங்குகள் இன்றி திருமண விழாவை நடத்தி வருகிறார். 

நந்தினி இவ்வாறு புரோகிதம் செய்வதுடன் சமஸ்கிருத பேராசிரியராகவும் நாடக நடிகராகவும் பணியாற்றி வருகிறார். அவர் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஆணாதிக்க செயல்பாடுகளுக்கு சவால் விடும் விதத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மேற்கு வங்காளத்தில் புரோகிதர் பணியில் ஈடுபட்டுள்ள முதல் பெண்மணியாவார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவிக்கையில்,

"பெண்களை பொருட்களாக பாவிக்கக்கூடாது என்பதால் கன்னிகாதானம் செய்யும் வழக்கத்தை நான் திருமண சடங்குகளில் பின்பற்றுவதில்லை. சடங்குகளை எளியமுறையில் செய்வேன். மொத்த நிகழ்ச்சியையும் ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுவேன்.”

மணமகனும் மணமகளும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக கடினமான சமஸ்கிருத சுலோகங்களை பெங்காலி அல்லது ஆங்கில மொழியில் பாடுகிறார். அவர் நடத்தி வைக்கும் திருமணங்களில் பின்னணியில் ரபீந்திர சங்கீத் இசைக்கப்படும்.

சமீபத்தில் நந்தினி 27 வயதான அர்கா பட்டாச்சாரியா மற்றும் அன்விதா ஜனார்தனன் திருமணத்தை நடத்தி வைத்தார். பெண்கள் ஆணாதிக்க மனநிலையை தகர்த்ததோடு மட்டுமல்லாமல் புரோகிதத்திற்கும் மதிப்பு சேர்க்கின்றனர் என்றார் அர்கா. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா உடன் உரையாடுகையில்,

”பல ஆண் புரோகிதர்கள் மந்திரங்களை தவறாக உச்சரிப்பதை கேட்டிருக்கிறேன். கடந்த வருடம் நந்தினியும் அவரது நண்பர்களும் நடத்திய திருமணத்திற்கு சென்றபோது அவர்கள் சமஸ்கிருத வரிகளை ஆங்கிலத்திலும் பெங்காலியிலும் விவரித்தது என்னைப் பெரிதும் கவர்ந்தது.”

நந்தினி கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 40 திருமணங்கள் நடத்தி வைத்துள்ளார். அவரது மகளின் திருமண சடங்குகளையும் அவரே நடத்தினார். நந்தினி தனது பணி வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார். அவரது வருவாயில் பெரும் தொகையை ஒடிசாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்திற்கு தானமாக வழங்குகிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA