எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! 

0

தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எதார்த்தவாத அழகியலோடு கவிதைகளையும் கதைகளையும் எழுதுபவர் வண்ணதாசன். 

இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. அதன் படி தமிழில் எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய ’ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக புது டெல்லியில் உள்ள சாகித்திய அகாடமி தெரிவித்துள்ளது.

சி. கல்யாணசுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட 70 வயதாகும் வண்ணதாசன், திருநெல்வேலியில் பிறந்தவர். இலக்கியவாதியும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான தி.க.சிவசங்கரனின் மகனான இவர், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளையும் எழுதி வருகிறார். இதுவரையிலும் 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள், ஒரு குறுநாவல், 2 கடித தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். கலைமாமணி, தமிழ்பேராயம், இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.

தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருது குறித்து வண்ணதாசன் தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ”

”எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கு நான் எழுதிய கடிதங்கள்தான் என்னை மேலும் எழுதத்தூண்டின. கடிதங்களை நான் முக்கியமானவையாக மதிக்கிறேன். 54 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். என்னோடு 1960களில் எழுதத் துவங்கியவர்கள் பலர் எழுத்தை நிறுத்திவிட்டார்கள். இளைய படைப்பாளிகளின் எழுத்துக்கள் எனக்கு நம்பிக்கை அளிக்கின்றன. வாசகர்கள், இளைய படைப்பாளிகள் தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளர்களின் படைப்புகளை தேடிக்கண்டுபிடித்து வாசிக்கவேண்டும். தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தாமிரபரணி சார்ந்து தொடர்ந்து படைப்புலகில் இயங்குவேன்,” என்றார்.