ஆன்லைன் ஷாப்பிங்கை எளிதாக்கும் ஷாப்இன்ஸிங்க்!

0

இ-காமர்ஸ் தளங்கள் ஷாப்பிங்கை எளிதான விஷயமாக மாற்றியிருந்தாலும் அதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. கடைகளில் சென்று வாங்கும்போது உடன் உறவினர்களையும் அழைத்துச் சென்று ஆலோசனை செய்து ஒரு பொருளை வாங்குவோம். ஆனால் ஆன்லைனில் அப்படி செய்ய முடியாது. இதற்கு ஒரு தீர்வை கண்டறிந்திருக்கிறார்கள் இரு முன்னாள் யாஹூ ஊழியர்கள். இவர்கள் உருவாக்கியிருக்கும் 'ஷாப்இன்ஸிங்க்' (ShopInSync) செயலி நாம் ஆன்லைனில் வாங்குவதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் பொருள் பற்றி நம் உறவினர்கள், நண்பர்களோடு சாட் செய்துகொள்ள உதவுகிறது.

அதென்ன ஷாப்இன்ஸிங்க்?

நாம் தேர்ந்தெடுக்கும் பொருள் எந்த இ-காமர்ஸ் தளத்தில் விலை குறைவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, அந்தப் பொருள் பற்றி நண்பர்கள், வீட்டிலுள்ளவர்களிடம் இன்-ஆப் மெஸேஜிங் மூலம் பகிர்ந்துகொள்ள உதவுகிறது இந்த செயலி.

ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் உள்ளிட்ட முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களின் லட்சக்கணக்கான பொருட்களின் பட்டியல் இந்த செயலியில் இருக்கிறது. 12 பிரிவுகளில் அந்த பொருட்கள் பிரிக்கப்பட்டு அவற்றுக்கான விலை ஒப்பீட்டு பட்டியலும் இடம்பெற்றிருக்கிறது.

செயலி செயல்படத் தொடங்கிய கதை!

சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 2015 ஜுலை மாதம் ராஜ் ராமசாமி, ஆஷிஷ் பர்னாமி ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. ராஜ் யாஹூவின் வருவாய்த்துறை நிர்வாகியாகவும், ஆஷிஷ் யாஹூவின் பொறியியல்துறை தலைவராகவும் பணியாற்றியவர்கள். இந்த நிறுவனத்திற்கு பெங்களூருவிலும் ஒரு அலுவலகம் இருக்கிறது.

ஆன்லைன் வர்த்தகம் குறித்த நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர், இருவரும் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக அனுபவம் தனிமைமிக்கதாய் இருக்கிறது என்பதை உணர்ந்தனர். விலையை தவிர்த்து பிறருடைய கருத்துகளும், ஆலோசனைகளும் கூட ஆன்லைன் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் தெரிந்துகொண்டனர்.

அதேசமயம், அப்படி பிறருடைய கருத்துகளையோ, ஆலோசனைகளையோ அவ்வளவு எளிதாக பெற முடிவதில்லை. ஷாப்பிங் செய்பவர் அந்த தளத்தின் லிங்க்கையோ, அல்லது அந்தப் பொருளின் ஸ்க்ரீன்ஷாட்டையோ அனுப்பவேண்டியிருக்கிறது. பின்னர் போனில் அவர்களை தொடர்புகொண்டு கருத்து கேட்டு அதன்பின்தான் முடிவெடுக்க வேண்டியதாக இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு இ-காமர்ஸ் தளத்திலும் லட்சக்கணக்கான பொருட்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் மொத்தமாக ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து விலை ஒப்பீடு செய்ய எந்தவித வசதியும் இல்லை. இவற்றை எல்லாம் அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள்.

இந்தக் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து, ஆன்லைன் ஷாப்பிங்கை இனிமையாக மாற்ற ராஜ், ஆஷிஷ் மற்றும் நான்கு பொறியியலாளர்கள் இணைந்து ஷாப்இன்ஸிங்க் செயலியை உருவாக்கினார்கள்.

“ஷாப்பிங் செய்பவரின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப இந்த செயலியை வடிவமைத்துள்ளோம். பொருட்களின் விலை, தரம் ஆகியவற்றையும் தாண்டி பெரும்பான்மையான பொருட்கள் உறவினர்கள், நண்பர்களின் கருத்துப்படியே வாங்கப்படுகின்றன. எனவே அவர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் இணைத்து ஷாப்பிங் அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாங்கள் விரும்பினோம்” என்கிறார் ராஜ்.


தற்போது ஆண்ட்ராயிடில் செயல்படும் இந்த செயலி சீக்கிரமே ஐ.ஓ.எஸ்ஸிலும் கிடைக்க இருக்கிறது. முதல்கட்டமாக மொபைல்களில் செயல்படும் இந்த செயலி, மக்களிடம் பெறும் வரவேற்பைப் பொறுத்து டெஸ்க்டாப் வெர்ஷனாகவும் மேம்படுத்தப்படும்.


செயல்படும் முறை

ஒருவர் முதல் முறை இந்த தளத்தில் மேற்கொள்ளும் தேடல்களின் அடிப்படையில் அடுத்த முறை இந்த தளமே அவருக்கான பொருட்களை பரிந்துரை செய்கிறது. அந்தந்த சீசனில் பிரபலமாகும் பொருட்களின் விலை, தரம் ஆகிவயற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.

இந்த தளத்தின் வழியே நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு சிறு தொகையை பங்காக பெற்றுக்கொள்கிறது ஷாப்இன்ஸிங்க். அடுத்த கட்டமாக, இந்த செயலியில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களுக்கும், தளங்களுக்கும் கட்டணம் விதிப்பதன் மூலம் தங்கள் வருவாயை கூட்ட இருக்கிறார்கள் இந்தக் குழுவினர். இன்னும் நிறைய பயனாளிகளை ஈர்க்கும் வண்ணம் செயலியை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிர்கால திட்டங்கள்!

நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2020ல் இந்தியாவில் இ-காமர்ஸ் வர்த்தகத்தின் மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்குமாம். இதனால் இந்தத் தளத்தில் செயல்பட எண்ணற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. விலை ஒப்பீட்டுத் தளமான பைஹட்கே(BuyHatke) கடந்த மே மாதம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், பீனோஸ்(BEENOS) ஆகியோரிடமிருந்து ஒரு மில்லியன் டாலர் அளவிற்கு முதலீட்டைப் பெற்றது. ஃபிளிப்கார்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் தன் பிரத்யேக மெஸேஜிங் சேவையான பிங்கை அறிமுகப்படுத்தியது. மற்றொரு நிறுவனமான வூடு(Voodoo) ஒரு மில்லியன் டாலர் அளவிற்கு முதலீட்டை பெற்றுள்ளது. பிரைஸ்மோஜோ என்ற செயலி உள்ளூர் வர்த்தகர்களுடன் பேரம்பேசி பொருட்களை வாங்க உதவுகிறது.

இந்தத் தளங்களிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ள மெனக்கெடுகிறார்கள் ஷாப்இன்ஸிங்க் குழுவினர். வருங்காலத்தில் இன்னும் நிறைய நிறைய இ-காமர்ஸ் தளங்களை தங்களோடு இணைக்க இருக்கிறார்கள். தங்கள் குழுவில் அதிக ஆட்களை இணைக்கும் முயற்சியிலும், வெளி முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியிலும் தற்போது ஈடுபட்டிருக்கிறது இந்த நிறுவனம்.

எங்கள் கருத்து!

மிக நேர்த்தியான முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த செயலி ஷாப்பிங்கை இனிமையான அனுபவமாக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சில கேமிங் வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தத் தளம் இன்னும் நிறைய பேரை ஈர்க்கலாம். உதாரணமாக, சிறப்பாக பரிந்துரைக்கும் பயனருக்கென புள்ளிகள் வழங்கலாம். அப்படி அதிக புள்ளிகள் பெறும் பயனர் தன் நட்பு வட்டம் தவிர்த்து பிறருக்கும் ஆலோசனை தரும் வசதியை கொண்டுவரலாம்.

அதேபோல், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக, காரணத்திற்காக பொருட்கள் வாங்கப்படும்போது அதற்கான ஆலோசனைகளை இந்தத் தளமே வழங்கலாம். உதாரணமாக, இப்போது ஒரு குடும்பம் தங்கள் வீட்டை புதுப்பிக்க இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இந்தந்த பொருட்கள் தேவைப்படலாம் என்ற பரிந்துரைப் பட்டியலை இந்தத் தளமே வழங்கலாம். அது ஷாப்பிங்கை இன்னும் எளிமைப்படுத்தும்.

அதேபோல் திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கான பரிசுகளை பரிந்துரைக்கும் வசதியையும் இணைக்கலாம். இந்தியா, அமெரிக்கா என இரண்டு நாடுகளில் பணியாற்றிய அனுபவம் இந்த இரண்டு நிறுவனர்களுக்கும் இருப்பதால், இவர்களின் திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாகத்தான் இருக்கிறது.

இணையதள முகவரி: ShopInSync

ஆக்கம்- ஹர்ஷித் மால்யா | தமிழில்- சமரன் சேரமான்

உள்ளீடுகள் உதவி: இமானுவேல் ஆம்பர்பர்