இந்தியாவில் மெத்தைகள் சந்தையில் முத்திரை பதிக்க விரும்பும் 'சண்டே ரெஸ்ட்'

0

தூக்கத்திற்கு உதவும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கும் எண்ணம் அல்போன்ஸ் ரெட்டிக்கு (Alphonse Reddy) உண்டான போது 2011 ல் அவர் ஃபேப்மார்ட்டை துவக்கினார். தூக்கத்திற்கான சந்தையான இந்நிறுவனம், 2014 வரை செயல்பட்டது. பேப்மார்ட் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்த போது வாடிக்கையாளர்களுக்கு மெத்தை(மேட்ரஸ்) வாங்கும் அனுபவம் திருப்தியாக இல்லாமல் இருப்பதை தெரிந்து கொண்டார்.

அதிக வேறுபாடில்லாத பல்வேறு மாதிரிகளில் இருந்து தேர்வு செய்வதையே பலரும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. விலையிலும் ஒருங்கிணைந்த தன்மை இல்லாத நிலையில் நிறுவனங்கள் தள்ளுபடி முறையிலேயே கவனம் செலுத்தியதால் வாடிக்கையாளர்களுக்கு வாங்கும் அனுபவம் அதிருப்தியாகவே இருந்தது.

சந்தையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை புரிந்து கொண்ட அல்போன்ஸ் 2014 ம் ஆண்டில் "சண்டேரெஸ்ட்" (Sundayrest) கருத்தாக்கத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த எண்ணத்தை இறுதி செய்ய ஓராண்டு ஆனது. சண்டேரெஸ்ட் ஆரம்பத்தில் சொந்த நிதியில் துவக்கப்பட்டு ஓராண்டுக்கு பின் 2,50,000 டாலர் முதலீடு பெற்றது. ஆனந்த மொர்ஜாரியா(Anand Morzaria ) மற்றும் பென்னிவைஸ் சொல்யூஷன்ஸ் பிரைவெட் லிட் ( 201 3ல் ஆக்லிவி அண்ட் மாத்தர் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவை நிறுவனம்) இணை நிறுவனர்களிடம் இருந்து இந்த நிதி பெறப்பட்டது.

“பணியாளர்கள் நியமனம், வென்டர்களை நிர்வகிப்பது, பிராடக்ட் டெவலப்மண்ட் மற்றும் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் சவால்களை எதிர்கொள்வதில் எல்லா ஸ்டார்ட் அப்களும் சந்திக்கும் அதே பயணத்தை தான் நாங்களும் மேற்கொண்டோம். அதோடு லாபத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் நீடித்த வர்த்தகத்தையும் உருவாக்க விரும்பினோம். குறைந்த முதலீட்டில், தாக்குப்பிடித்து நிதி வசதி கொண்ட ஸ்டார்ட் அப்களுடன் போட்டியிட வேண்டியிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எங்களிடம் இருந்த அருமையான குழு போட்டி மிகுந்த துறையில் வளர்ச்சி அடைய உதவியது” என்கிறார் அல்போன்ஸ்.

தயாரிப்பு உருவாக்கம்

மெத்தைகள், மென்மை தன்மை, ஆதரவு மற்றும் மூல அடுக்கு என மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது. ஆனால் 30 விதமான வேறு வேறு அடுக்குகளை கொண்டதாக உருவாக்கும் சாத்தியம் இருக்கிறது என்கிறார் அல்போன்ஸ். அதற்கேற்ப 30 வகையான வேறுபாடுகளையும் பொருத்திப்பார்க்க கூடிய மாடுலர் படுக்கையை சண்டேரெஸ்ட் உருவாக்கியது.

"எங்கள் தேவை முடிவு செய்ததும் 2015 குளிர்காலம் மற்றும் 2015 கோடையில் ஐதராபாத் மற்றும் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு, பாலினம், எடை, உயரம், முதுகு நிலை மற்றும் கர்பணிகள் என பல்வேறு பிரிவினர் மத்தியில் மெத்தைகளை பயன்படுத்த வைத்து சோதனை செய்தோம்” என்கிறார் அல்போன்ஸ்.

ஒரு தயாரிப்பு உருவாக்கத்தில் வடிவமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வடிவமைப்பு என்பது பொருள் எப்படி தோன்றுகிறது என்பது அல்ல, அது எப்படி செயல்படுகிறது என்பதாகும். உதாரணமாக இந்திய சூழலில் மெத்தையில் வியர்வை கரை படிவது சகஜமாக இருக்கிறது. இதை மனதில் கொண்டு சண்டேரெஸ்ட் எளிதாக அகற்றக்கூடிய ஜிப் கவரை உருவாக்கியது.

மெத்தைக்கான பொருட்களைப்பொருத்தவரை 100 சதவீத லேட்டக்ஸ், பெல்ஜியத்தில் உள்ள மேம்பட்ட ரோபோட்டிக் ஆலைகளில் இருந்து தருவிக்கப்படுவதாக அல்போன்ஸ் கூறுகிறார். மெத்தையில் பயன்படுத்தப்படும் துணி, Oeko-Tex 100 சான்றிதழ் பெற்றதாகும். துணியில் எந்த தீங்கான தன்மையும் இல்லை என்பதற்கான சர்வதேச அளவிலான சான்றிதழ் இது.

சண்டேரெஸ்ட்டின் முன்னணி மாதிரியான லேட்டக்ஸ் பிளஸ் ஜெர்மனியின் எல்ஜிஏ (மெத்தையின் நீடித்த தன்மையை குறிக்கிறது) சான்றிதழ் பெற்று, 99/100 மதிப்பெண் பெற்றுள்ளது. நிறுவனம் பொருட்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து தருவித்து இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்கிறது. மேலும் சண்டேரெஸ்ட் மெத்தைகள் ஜப்பானின் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஹிரோகி ஷிராடோரியால் வடிவமைப்பக்கப்பட்டவை.

"எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்தே தருவிக்க விரும்புகிறோம். இப்போதைக்கு தரத்தில் கவனமாக இருக்கிறோம்” என்கிறார் அல்போன்ஸ்

மெத்தை ரகங்கள்

சண்டேரெஸ்ட் இரண்டு மெத்தை ரகங்களை உற்பத்தி செய்கிறது. ஆர்த்தோபிளஸ் ரூ.17,990 விலையிலும் லேட்டக்ஸ் பிளஸ் ரூ.34,490 விலையிலும் கிடைக்கின்றன. விலை வேறுபாட்டைப்பொருத்தவரை, லேட்டக்ஸ் மெத்தைகள் (சான்றிதழ் பெறாதவை) சந்தையில் ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை விலை கொண்டிருப்பதாக அல்போன்ஸ் கூறுகிறார்.

“விலையை உயர்த்தி தள்ளுபடி அளிக்கலாம் ஆனால் பேரம் பேச அல்லது இணையத்தில் சலுகைகளை தேட நேரம் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு அது நியாயமாக இருக்காது என்பதால் அவ்வாறு செய்யவில்லை” என்கிறார் அவர் மேலும்.

டிஜிட்டல் விளம்பரத்தில் அதிகம் செலவிடப்படவில்லை என்றாலும் நிறுவனம், டி.வி, நாளிதழ் மற்றும் இதர வழிகளில் விளம்பரம் செய்து வருகிறது.

மெத்தைகளை அனுப்பி வைக்க ஷிப்பர் (Shippr) மற்றும் போர்டர் (Portr ) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பெங்களூருவில் அதே நாளில் டெலிவரி செய்கிறது. மற்ற நகரங்களில் ஒரு வார காலத்தில் டெலிவரி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லை என்றால் பணத்தை திருப்பி அளிக்கும் வகையில் 100 இரவு பயன்படுத்திப்பார்க்கும் வசதியை அளிக்கிறது.

”இது வரை 1000 மெத்தைகளுக்கு மேல் விற்றிருக்கிறோம். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் ஆர்டர்களில் மாத அடிப்படையில் 50-100 சதவீத வளர்ச்சி பெற்று வருகிறோம்” என்கிறார் அல்போன்ஸ்.

நிறுவன அமைப்பு

சண்டேரெஸ்ட் தொழில்நுட்பம், நிதி, மார்க்கெட்டிங், வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என 10 பேர் குழுவை கொண்டுள்ளது. மெத்தை தயாரிப்பை 100 பேரிடம் அவுட்சோர்ஸ் செய்திருக்கிறது. பணத்தை மிச்சமாக்க இது உதவுவதாக சொல்கிறார் அல்போன்ஸ். குழுவில் உள்ளவர்கள் ஃபேப்மார்ட், ஃபிளிப்கார்ட், கேஎப்சி, பீட்டர் இங்க்லாண்ட், டெல்டா பாட்னரஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். பிட்ஸ் பிலானி, இன்சீட் உள்ளிட்டவற்றில் கல்வி பயின்றவர்கள்.

எதிர்காலம்

சண்டேரெஸ்ட் தற்போது பெங்களூருவில் ஒரு சண்டே ஸ்லீப் லாஞ்ச் கொண்டுள்ளது. மேலும் நான்கு மையங்களை துவக்க திட்டமிட்டுள்ளது. ஐதராபாத், சென்னை, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கும் விரிவாககம் செய்ய உள்ளது. ஒவ்வொரு நகரிலும் 3 அல்லது 4 மையங்கள் அமைக்கப்படும்.

யுவர்ஸ்டோரி பார்வை

இந்தியாவில் மெத்தைகள் சந்தை 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலானது என்கிறார் அல்போன்ஸ். இந்திய சந்தையில் மெத்தகளின் சந்தைப்பங்கு, பெரிய பிராண்ட்களின் பங்கு ஆகிய விவரங்களின் திரட்டியதன அடிப்படையில் இதை அவர் முன்வைக்கிறார்.

சந்தையில் ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களே அதிகம் உள்ளன. கர்லான்,ஸ்லீப்வெல், ஸ்பிரிங் வெல், பெப்ஸ் மற்றும் இதர நிறுவனங்கள் உள்ளன.

இந்த போட்டி மிக்க சந்தையில் ஒராண்டே ஆன சண்டேரெஸ்ட் நுழைந்து தனக்கான இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது.

இந்த ஸ்டார்ட் அப் அடுத்த 3 ஆண்டுகளில் 10 சதவீத சந்தைப்பங்கை பெற விரும்புகிறது. சர்வதேச மற்றும் இந்திய நிறுவன போட்டியை கருத்தில் கொள்ளும் போது இது சவாலானது. இந்நிறுவனம் பி அண்ட் எஸ் மார்க்கெட் ரிஸர்ச்சால் 23 பில்லியன் டாலர் சந்தை என மதிப்பிடப்பட்டுள்ள சர்வதேச சந்தையையும் இலக்காக கொண்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. சரியான விலை மற்றும் சந்தைக்கு பொருத்தமான தன்மையை கண்டறிவதில் தான் வெற்றி இருக்கிறது.

இணையதளம்:

ஆக்கம்: Aparajita Choudhury

தமிழில்: Cyber Simman