சுருள்பாசி, க்ரீன் டீ என இயற்கை ஆரோக்கிய உணவுத் தயாரிப்பில் கலக்கும் சென்னை தம்பதியர்!

0

இன்றைய வாழ்க்கை தரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் நம் ஆரோக்கியத்தின் மீது எத்தகைய தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்று நாம் அனைவரும் அறிந்ததே, இதன் காரணமாகவே இயற்கை மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறையை பற்றி அதிகம் பேச ஆரம்பித்துள்ளோம். இதற்குத் தீர்வாக பல தொழில்முனை நிறுவனங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

தன் இறுதியாண்டு உயிரியல் தொழில்நுட்பப் படிப்பின் பகுதியாக ஆரம்பித்த ஒரு ப்ராஜெக்ட் தன்னை ஒரு தொழில்முனைவராக மாற்றியதைப் பற்றி உமா கிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். சென்னையைச் சேர்ந்த இவர் "மிஸ்டிக் கிரீன்" என்ற நிறுவனத்தின் நிறுவனர் இவர்.


சுருள்பாசி - இயற்கை தந்த அற்புதம்

"SRM பல்கலைகழகத்தில் இறுதியாண்டு உயிரியல் தொழிநுட்பப் படிப்பின் போது பாசிகளை பற்றி ப்ராஜெக்ட் செய்ய முடிவெடுத்தேன். இதில் சுருள் பாசி பற்றி தகவல்கள் திரட்டிய பொழுது மிகுந்த ஆர்வம் எனக்கு எழுந்தது" என்று கூறும் உமா,

சோதனை முயற்சியாக தனது வீட்டு மாடியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சுருள் பாசியை வளர்க்க ஆரம்பித்தார்.

சுருள் பாசி, இயற்கை நமக்கு தந்த அற்புதம். ஒரு கிலோ பச்சை காய்கறிகளில் உள்ள சத்து ஒரு கிராம் சுருள் பாசியில் உள்ளதாக ஆராய்சிகள் சொல்கின்றன.

உமா கிருஷ்ணன் வணிக பின்னணியுள்ள குடும்பத்தில் வளர்ந்ததால் தொழில்முனைவது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. தனது படிப்பை சரியான வழியில் உபயோகிக்கும் சிந்தனையில் சுருள் பாசி வளர்க்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.

2010 ஆம் ஆண்டு தனது பட்டப் படிப்பை முடித்த கையோடு, பெரிய அளவில் சுருள் பாசி வளர்த்தலை ஆரம்பித்தார். இதற்கென சென்னை அடுத்த ரெட்டேரி பகுதியில் தயாரிப்பிற்குத் தேவைப்பட்ட ஐந்து 4000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய தொட்டிகளை நிறுவினார். இதற்கிடையில் ஆயுர்வேத மருத்துவர்களையும் அணுகத் தொடங்கினார்.

ஏழே நாட்களில் வளரக்கூடிய சுருள் பாசிக்கு தேவையானதெல்லாம் சுத்தமான தண்ணீர், ஐந்து வகையான உப்புகள் இதனுடன் மதர் கல்ச்சர் முறை. ஒன்பதாவது நாளில் அறுவடை செய்யப்பட்டு வெயிலில் காய வைத்து பின்பு பொடி செய்யப்படுகிறது.

"பவுடர் வடிவில் சுருள் பாசியின் சுவை பலருக்கும் பிடிக்காது, 2011 ஆம் ஆண்டு முதல் இதை காப்ஸ்யுல் வடிவிலும் தயாரிக்க ஆரம்பித்தோம்" என்று கூறும் உமா இவர்களின் எல்லாப் பொருட்களும் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விற்கப்படுகிறது என்கிறார்.

பிற ஆரோக்கிய வகைகளான கோதுமை புல், வாழைத்தண்டு போன்றவற்றிலிருந்து பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்த உமா, சுருள் பாசி மற்றும் நெல்லி கலந்து வைட்டமின் சி சத்துடைய தயாரிப்பையும் மேற்கொண்டார். சுருள் பாசியில் எல்லா விதமான புரதச்சத்தும் வைட்டமின் சத்தும் இருப்பினும் வைட்டமின் சி சத்து இல்லாததே இந்த தயாரிப்பிற்குக் காரணம் என்கிறார் உமா.

தேநீர் தயாரிப்பு

இயற்கை ஆரோக்கியத்தின் மீதான ஆர்வத்தால், திருமணத்திற்கு பின் அவர் கணவருடன் இணைந்து தேநீர் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார் உமா. இதைப் பற்றி உமாவின் கணவர் கிருஷ்ணன் கூறுகையில்,

"சுவையூட்டப்பட்ட நீர் வகைகளில் எனக்கு பெரிதும் ஆர்வம் இருந்தது. ஒரு ரிசார்ட்டில் நாங்கள் தங்கியிருந்த பொழுது, அங்குள்ள செஃப் தேநீரில் செம்பருத்தி சேர்ப்பதை பார்த்தேன். அன்றிலிருந்து பல்வேறு சுவையூட்டிகளைக் கொண்டு பரிசோதனை செய்ய ஆரம்பிதேன். இப்படி ஆரம்பித்தது தான் "மிஸ்டிக் கிரீன் டீ" Mystic Green Tea என்கிறார்.

"கிரீன் டீ அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது என்று நாம் அறிவோம், ஆனால் இதன் சுவை பெரும்பாலோருக்கு பிடிப்பதில்லை. ஆரோக்கியம் அதனுடன் சுவை இந்த எண்ணத்தில் எழுந்தது தான் எங்களின் ஐந்து விதமான மூலிகைகள் கொண்டு சுவையூட்டப்பட்ட கிரீன் டீ தயாரிப்புகள்" என்கிறார் உமா.

ரோஸ், இலவங்கப்பட்டை & புதினா, செம்பருத்தி, லெமன் கிராஸ் & இஞ்சி மற்றும் எட்டு வகையான மசாலா கொண்ட ராயல் ஸ்பைசஸ் என, மிஸ்டிக் கிரீன் டீ ஐந்து வெவ்வேறு சுவைகளில் தயாரிக்கின்றனர்.

உலக மக்கள் பெரும்பாலானோர் சுவையூட்டப்பட்ட பானங்களை பற்றி நன்கு அறிந்துள்ளனர். வருங்காலத்தில் சுத்தமான பால் தட்டுபாட்டின் காரணமாக ப்ளாக் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவையே அதிக புழக்கத்தில் இருக்கும் என்கிறார் கிருஷ்ணன்.

எதிர் காலத் திட்டம்

சுருள் பாசியுடன் நெல்லி, வெள்ளரி, அஸ்வகந்தா போன்று பிற சுவையூட்டிகளையும் சேர்த்து புதிய பொருட்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளனர். இதைத் தவிர பிஸ்கட், சாக்லேட் மற்றும் நூட்டுல்ஸ் போன்ற தயாரிப்புகளிலும் ஈடுபட உள்ளதாக கூறுகின்றனர்.

________________________________________________________________________

தொடர்பு கட்டுரை:

ஊட்டச்சத்து உணவு உங்கள் வீடு தேடி வரும்: 'டன்டுருஸ்ட்'

________________________________________________________________________

விரைவில் சில்லறை வர்த்தக கடைகளிலும் இவர்களது தயாரிப்புகள் கிடைக்கும் என்றும் அதற்கான பேச்சு வார்த்தையில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். வளர்ச்சிப் பாதையில் இருப்பதால் விநியோகஸ்தர்கள் மூலமாகவும் தயாரிப்புகளை கொண்டு செல்லும் எண்ணம் உள்ளதாக நம்மிடம் பகிர்கின்றனர்.

சுருள் பாசி வளர்க்க MSME  மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பிறருக்கு பயிற்சி அளித்துள்ளார் உமா. சுருள் பாசி பற்றி அதிக விழிப்புணர்வு செய்யவும் இவர்கள் எண்ணியுள்ளனர்.

உணவே மருந்து என்று ஆரோக்கியம், இயற்கை விவசாயம் என மக்கள் தங்களின் பார்வையை திருப்ப ஆரம்பித்துள்ள நிலையில், ஆரோக்கியம் சார்ந்த தரமான பொருட்களுக்கு கூடுதல் வரவேற்பு உள்ளதாகவே தெரிகிறது.

வலைத்தளம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற இயற்கைமுறை உணவுத்தொழில் கட்டுரைகள்:

'கருப்பட்டி கடலைமிட்டாய்' தொழிலில் கலக்கும் பொறியியல் பட்டதாரி!

இயற்கை வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து பெற்று விற்பனை செய்யும் 'நேச்சுரலி யுவர்ஸ்'