'ரிபப்ளிக்' - புதிய முயற்சி மூலம் மீண்டும் வருகிறார் அர்னாப் கோஸ்வாமி!

0

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்து திடிரென வெளியேறிய அர்னப் கோஸ்வாமி அடுத்து என்ன செய்யப்போகிறார்? புதிதாக சேனல் தொடங்குகிறாரா? என்று பல தரப்பிலும் பேசி வந்தனர். இந்நிலையில் அர்னப் தான் தொடங்கவிருக்கும் புதிய முயற்சியை பற்றி தற்போது கூறியுள்ளார். அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்காவிட்டாலும், தான் தொடங்கப் போகும் தளத்தின் பெயர், ‘ரிபப்ளிக்’ (குடியரசு என்று பொருள்) என்று சில செய்தி தளங்களுக்கு பேட்டி அளித்து உறுதி அளித்துள்ளார் அர்னப்.

தி நியூஸ் மினிட், தி க்விண்ட் செய்தி தளங்களுக்கு பேசிய அர்னப் கோஸ்வாமி, தான் தொடங்கவுள்ள செய்தி தளத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்,

“என் முயற்சியின் பெயர் ‘ரிபப்ளிக்’, இதற்கு எனக்கு இந்திய மக்களின் ஆதரவு வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அதற்கான தொடக்க பணிகள் நடைபெறுவதாகவும், உத்தர பிரதேச தேர்தலுக்கும் முன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்றார்.

நவம்பர் 1-ம் தேதி அர்னப், டைம்ஸ் நவ் குழுமத்தில் இருந்து ராஜினாமா செய்தார். இவர் டைம்ஸ் நவ், ஈடி நவ் ஆகிய சேனல்களின் முதன்மை செய்தி ஆசிரியர் மற்றும் தலைவராக பணியில் இருந்தார். அர்னப் கோஸ்வாமி, தனது செய்தி விவாத நிகழ்ச்சி, ‘தி நியூஸ் ஹவர்’ ‘The News Hour’ மூலம் நாடெங்கும் பிரபலமாகி பல வருடங்களாக இதை வெற்றிகரமாக நடத்தி வந்தார். சூடான விவாதங்கள் மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து நல்ல நிலையில் இருந்த இந்நிகழ்ச்சியின் மூலம் டைம்ஸ் நவ் சேனலின் 60 சதவீத வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

கொல்கத்தாவில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகையில் சிலகாலம் பணிபுரிந்து, என்டிடிவி சேனலில் முதலில் இணைந்தார் அர்னப். பின்னர் டைம்ஸ் நவ் செய்தி சேனலில் இணைந்து தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டவர். 

டைம்ஸ் நவ் சேனலை விட்டு சென்ற இறுதி தினம், அங்குள்ள ஊழியர்களிடம் பேசிய அர்னப் கோஸ்வாமி, தான் செய்தி சேனலையும் தாண்டி ஒரு சுதந்திரமான தனிப்பட்ட ஊடகம் ஒன்றை தொடங்க உள்ளதாக கூறினார். 

“இனி தனிப்பட்ட ஊடகங்கள்கள் செழிக்கத்தொடங்கும். நான் பிபிசி, சிஎன்என் போன்ற சேனல்களுடன் போட்டியிடப் போகிறேன்,” என்றார். 

சில வாரங்களில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று அப்போது அர்னப் கூறி இருந்தார். இப்போது வந்துள்ள தகவலின் படி, அர்னபின் நிறுவனம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் என்றும், பெங்களுருவை சேர்ந்த ஒரு பெரிய டிவி விநியோகஸ்தக குழுமம் மற்றும் செல்வாக்கு மிக்க விளம்பர ஊடகம் ஒன்றும் இவருடைய நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர் என்று தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாபெரும் குழு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளது. 

அர்னப் விட்டுச் சென்று இடத்தில், நியூஸ் எக்ஸ் செய்தி ஆசிரியர் ராஹுல் சிவசங்கர் அமர்த்தப்பட்டுள்ளார்.  

கட்டுரை: யுவர்ஸ்டோரி குழு