ஒரு விமானச் சிப்பந்தி, தொழிலதிபராக வளர்ந்த கதை..

0

ரதி ரானா, மிடுக்கான தோற்றம். அத்தோற்றத்துக்கேற்ப கிங்ஃபிஷர், இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களில் பணிப்பெண் பொறுப்பு. ஆனால், ஏனோ அவர் அந்த பணியை தொடரவில்லை. அந்தப் பணியை துறந்தார். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்துவிட்டு நிலையில் அவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொள்வது. இந்த தேவையை நன்கு உணர்ந்த ரதி, பணியில் உள்ள பெண்களுக்கு, வீட்டு வேலைக்காக பணிப் பெண்களை ஏற்பாடு செய்யும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார்.

ஒருவர் தன் துறையை விடுத்து முற்றிலுமாக மற்றுமொரு துறையைத் தேர்வு செய்யும்போது, அவரது வாழ்வில் நடந்த மிகப்பெரிய சம்பவத்தின் தாக்கமாகவே அது நடந்திருக்கும் எனக் கருதப்படுவது இயல்பே. ஆனால், ரதி ரானா விஷயத்தில் அவ்வாறான எந்த தாக்கத்தின் விளைவாகவும் அவரது புதிய தொழில் முயற்சி உருவாகவில்லை.இது குறித்து ரதி கூறும்போது, "ஒரு விமான சிப்பந்தியாக நான் சொகுசான வாழ்க்கையையே வாழ்ந்தேன். என் கார் கதவை திறந்துவிட ஒருவர், ஆடம்பர ஓட்டலில் வாசம், நினைத்த உணவை புசிக்கும் அந்தஸ்து என எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால், அதே வேளையில் ஆயிரக்கணக்கானோர் ஒரு வேளை உணவுகூட இல்லாமல் இருந்தனர் என்ற சிந்தனை என்னுள் எழுந்து கொண்டே இருந்தது" என்கிறார்.


அடுத்தவர் நலனுக்காக...

தனக்காக மட்டுமே வாழும் மனிதர்கள் மத்தியில் ரதி ரானாவுக்கு பிறர் நலன் பேண ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தை எப்போதுமே இருந்தது. அவ்வப்போது ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்ற ரதி, அங்கிருப்பவர்களோடு நேரம் செலவழிப்பதையும், அவர்களுக்காக உணவு, உடை வாங்கித் தருவதையும் செய்து வந்திருக்கிறார். ஆனால், அது மட்டுமே போதுமானதாக அவருக்கு தோன்றவில்லை. அப்போதுதான், அந்தச் சம்பவம் நடந்தது. வீட்டு வேலை தேடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை சந்தித்தார் ரதி. அதுவே பின்னாளில், வீட்டு வேலைக்காக பெண்களை ஏற்பாடு செய்து தரும் அமைப்பை உருவாக்குவதற்கு அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.தனக்கு உதித்த புதிய யோசனையை தனது கணவர் பிரதீக்கிடம் தெரிவித்தார் ரதி. அவர் முழுமனதுடன் உதவ முன்வந்தார். ரதியின் யோசனை செயல்வடிவம் பெற்றது. அப்படித்தான் உருவானது 'உங்கள் வீட்டுக்கான பணிப்பெண்' (HouseMaidForYou) என்ற நிறுவனம்.

எப்படி செயல்படுகிறது இந்நிறுவனம்?

"வீட்டு வேலை செய்வதற்கு தயாராக இருக்கும் பெண்களின் தகவல் தரவுகள் எங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் எங்களை அணுகும் வாடிக்கையாளரின் தேவைக்கு, விருப்பத்துக்கேற்ப பொருத்தமான நபரை தேர்வு செய்து நாங்கள் வேலைக்கு அனுப்புகிறோம். அவ்வாறு, குறிப்பிட்ட அந்த நபரை ஒரு வீட்டுக்கு பணிக்கு அனுப்பும் முன்னர் அவருடன் நேர்காணல் நடத்துகிறோம். அவருடைய விருப்பங்களை கேட்டறிகிறோம். மேலும், பாதுகாப்பு அம்சங்களுக்காக அவரது வீட்டின் முகவரியைப் பெற்று அதை சரி பார்க்கிறோம். அவரது தனிநபர் அடையாள அட்டையையும் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். அதன் பின்னரே எங்கள் வாடிக்கையாளர் வீட்டு பணிக்காக அந்தப் பெண்ணை பணியமர்த்துகிறோம்.

எங்கள் நிறுவனத்தில் எப்போது ஒரு பெண் பதிவு செய்துகொள்கிறாரோ அப்போது முதல் அவர் எங்கள் நிறுவனத்தின் ஊதியம் பெறுவோர் பட்டியலில் இணைகிறார். அவருக்கு சரியான தேதியில் சரியான சம்பளம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறதா? அவரது மருத்துவ காப்பீடு, தொழிலாளர் வைப்பு நிதி மேலாண்மை, ஆண்டுக்கு 12 நாள் விடுப்பு ஆகிய பயன்கள் முறையே சென்றடைகிறதா என்பதையும் உறுதி செய்கிறோம்" என்றார்.

ஒவ்வோர் நாளும் சவால் நிறைந்ததே...

நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் பெண்களை பணி அமர்த்துவது பாதி வெற்றியே. முழுமையான வெற்றியானது அவர்களை அந்தப் பணிக்கேற்ப பயிற்றுவிப்பதிலேயே இருக்கிறது. தொழில் நேர்த்தியை கற்றுக் கொள்ள பல பெண்கள் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை. நேரம் தவறாமை. சரியாக 9 மணிக்கு பணிக்குச் செல்வதற்குப் பதிலாக அரை மணி நேரம் கழித்து 9.30 மணிக்கு பணிக்கு செல்வதில் தவறு என்ன இருக்கிறது என்பதே அவர்களின் கண்ணோட்டம். இது ஒரு எடுத்துக்காட்டு.

அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் பயிற்சியில், நேரம் தவறாமை போன்ற பல்வேறு தொழில் நேர்த்தியை கற்பிக்கிறோம். அதேபோல், வீட்டில் உள்ள வயதானவர்களை பராமரிக்க பணிப் பெண் தேவை என வாடிக்கையாளர் கோரினால், அதற்கேற்ப வயதானவர்களை பராமரிப்பதில் முன் அனுபவம் இருக்கும் நபரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு மேலும் பயிற்சி அளித்தே அனுப்புகிறோம். இப்படி பணிப் பெண்களின் திறமைகளை செதுக்குவது, தொழில் நேர்த்தியை மேம்படுத்துவது ஒவ்வோர் நாளையும் சவால் நிறைந்ததாக மாற்றுகிறது.

ஓராண்டு நிறைவுக்கான காத்திருப்பு...

 ஓராண்டைதாண்டி வெற்றிகரமாக "வீட்டுப் பணிப்பெண்"(HouseMaidForYou) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சில பெண்கள் தங்கள் பணியை பாதியில் துறந்து சென்று விடுகின்றனர். இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் எங்கள் நிறுவனத்தால் நிரந்தர வருமானம் கிடைக்கும் பணியில் அமர்ந்து பயனடைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. சில பெண்கள் மாதம் ரூ.10,000 வரைகூட சம்பாத்திக்கின்றனர். அது எனக்கு பெரு மகிழ்ச்சியளிக்கிறது. நான் என்ன சாதித்திருக்கிறேன் என்பதை அசை போட்டு பார்க்கும்போது பெருமிதம் ஏற்படுகிறது எங்கிறார் ரதி

என் குடும்பம்..என் பலம்..

"என் வெற்றிக்குப் பின்னால் இருப்பது என் குடும்பமே. என் கணவர் பிரதீக் எனது வெற்றியில் பெரும் பங்கு வகிக்கிறார். புதிய முயற்சியை தொடங்கிய ஆரம்ப காலத்தில், வார இறுதி நாட்களில் கூட நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. நானும், என் கணவரும் பல நாட்கள் சந்திக்காமல் கூட இருந்திருக்கிறோம். சிறு பின்னடைவுகள் ஏற்படும் போது நான் சோர்ந்துவிடுவேன். அப்போதெல்லாம் என்னை ஊக்குவித்தது என் கணவரே" என்றார் ரதி. 

தனது மனைவியின் வெற்றிப் பயணம் குறித்து பிரதீக் கூறும்போது, "அவரது எண்ணமும், கடின முயற்சியுமே அவரது வெற்றிக்கு வழி வகுத்தது. 10 வருடங்களுக்கு முன்னர் இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. ஆனால், இப்போது நிறைய உள்ளன. இத்தொழிலில் இன்னும் மேம்படுத்துவது அவசியம்" என்றார்.

'மாற்றத்திற்கான ஊடு'

"பல பெண்களுக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அந்த வகையில் ஒரு மாற்றத்துக்கான ஊடாக நாங்கள் இருந்திருக்கிறோம். ஆனால், பணிப் பெண்களை பணியமர்த்திக் கொள்வோர் மத்தியில் சிறு மாற்றம் அவசியம். அவர்களும் சற்று சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் தங்களது பணிப்பெண் காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், அதற்கேற்ற சரியான ஊதியத்தை வழங்க தயாராக இருப்பதில்லை" எனக் கூறுகிறார் பிரதீக்.

ஆத்ம திருப்தி

இந்தப் பணியில் ஓர் ஆத்ம திருப்தி இருக்கிறது. அதை எடுத்துரைக்க ஒரு சின்ன சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த பெண் ஒருவர் தனது குழந்தையைப் பேண ஆள் இல்லாததால் பணியை துறக்க முடிவு செய்தார். அவரது மேலதிகாரி எங்கள் நிறுவனத்தைப் பற்றி அறிந்திருந்ததால் அந்தப் பெண்ணுக்கு எங்கள் தொடர்பு எண்ணை அனுப்பியிருக்கிறார். வரும் எங்களிடம் வந்தார். அவர் தேவையை அறிந்து அவருக்கு ஒரு பணிப் பெண்ணை அனுப்பி வைத்தோம். நாங்கள் பணிக்கு அனுப்பிய அந்தப் பெண் இப்போது வரை அந்த வீட்டில் தான் வேலை பார்க்கிறார்" என மகிழ்கிறார் ரதி ரானா.

சரியான அனுகுமுறை தேவை..

சில பெண்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பல வீடுகளில் வேலை செய்கின்றனர். இத்தகைய முறை சரியானதாக அமையாது. அப்படி வேலைப்பளுவை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு பெண் எங்களிடம் வந்தார். அவருக்கு, 2 வீடுகளில் வேலை வாங்கித் தந்தோம். அவர் இப்போது மாதம் ரூ.11,000-க்கு மேல் சம்பாதிக்கிறார். எனவே வீட்டுப் பணிப் பெண் வேலையைப் பொருத்தவரை சரியான திட்டமிடுதல் அவசியம். இதுவே எங்கள் வெற்றி என நாங்கள் கருதுகிறோம் என்றார் ரதி.

சுவையான அனுபவம்..

ஒரு சில்லறை விற்பனையகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த பெண் ஒருவர் எங்களிடம் வந்தார். அவருக்கேற்ற வேலையை வாங்கித் தந்தோம். அவருக்கு நிரந்தர வருமானம் வரத் தொடங்கியது. அவரது நீண்ட நாள் கனவு ஒரு ஸ்கூட்டி வாங்க வேண்டும் என்பதே. அதை எங்களிடம் தெரிவித்தார். அவருக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தந்தோம். அதை வைத்துக் கொண்டு சொந்தமாக ஒரு ஸ்கூட்டி வாங்கினார். அந்த ஸ்கூட்டியைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை மறக்க முடியாது. இப்போது அவர் வேலைக்கு ஸ்கூட்டியில்தான் செல்கிறார். வீட்டு வேலைக்கு ஸ்கூட்டியில் வருகிறாரே என்று வாடிக்கையாளர்களே வியப்பதுண்டு. இதுவே உண்மையான வெற்றி.