ஸ்டார்ட் அப் உலகின் நம்பிக்கைமிகு ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் உருவாக்கியுள்ள 't-hub' மையம்

1

தொழில்முனைவோர் புதிது புதிதான வெற்றிக் கதைகளை உருவாக்குகின்றனர். 

ஹைதராபாத் நகரை 'ஸ்டார்ட் அப்' மையமாக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

'டி-ஹப்' மூலம் உலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதே அவரது குறிக்கோள்.

அவர்தான் 'ஸ்டார்ட் அப்' உலகின் நம்பிக்கைக்குறிய ஆலோசகர் - ஸ்ரீநிவாஸ்.!

குழந்தைகள் வெவ்வேறு விஷயங்களை ஆழமமாக தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக பல பல கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்கள் மனத்தில் தோன்றும் அத்தனை கேள்விகளையும் தாய், தந்தையிடம் கேட்கிறார்கள். வானத்தை பார்த்து, 'மேகம் எப்படி உருவாகிறது?' என்றும், அதன் மாறுபட்ட வண்ணங்கள், வடிவங்கள் குறித்தும் கேட்கிறார்கள். 'ஏன் மனித உடல் சூடாக இருக்கிறது?', 'ஏன் குழந்தைகளுக்கு காய்ச்சல் வருகிறது?' என்றெல்லாம் கேட்கிறார்கள். கடிகாரம் என்ன மந்திர தந்திரத்தால் இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள அதனை திறந்து பார்க்க முயற்சிக்கிறார்கள். எப்படி கால்குலேட்டர் எப்போதும் சரியான பதிலை மட்டும் தருகிறது என்று யோசிக்கிறார்கள். இப்படிப் பல பொருட்களின் செயல்பாட்டை தெரிந்து கொள்ள அவற்றை பிரித்து மேய்ந்துவிடுவார்கள்.

தந்தை பிரிட்டனில் பிரபல மருத்துவராக இருந்த போதும் மகனின் ஆர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்லி புரியவைக்க தவறியதில்லை. எந்த கேள்விக்கும் தெரியவில்லை என்று சொல்லி அவனை ஏமாற்றவில்லை. அத்தனை சந்தேகத்தையும் தீர்த்து வைத்திருக்கிறார். குழந்தைப் பருவ கேள்வி கேட்கும் இந்த குணத்தினால் பெரியவனான பிறகு கேள்வி கேட்கும் 'மந்த்ரா'வை கற்றுக்கொண்டார். அது என்ன மந்திரம் என்றால் 'சரியான நபரிடம் சரியான கேள்வியை கேட்க வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கான வழி கிடைக்கும்' என்னும் மந்திரம்தான் அது. இந்த மந்திரத்தை எடுத்துக்கொண்டு உலகில் உள்ள அத்தனை தொழில்முனைவோரின் கனவுகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் நபராக இன்று உருவாகி இருக்கிறார்.

அவர்தான் ஸ்ரீநிவாஸ் கொல்லிபாரா..! டி - ஹப்பின்(T-HUB) தலைவர், முதன்மை அதிகாரி, நிறுவனர் என்று எல்லாமுமாக இருக்கிறார். தொழில் முனைவோருக்கான ஒரு சிறந்த சூழலை தனது 'டி.ஹப்' மூலம் ஹைதராபாத்தில் உருவாக்கி இருக்கிறார். தனது குழந்தை பருவத்து கேள்வி கேட்கும் பழக்கத்தின் மூலம் கற்றுக்கொண்ட மந்த்ராவை உரிய முறையில் பயன்படுத்தி இன்று தொழில் முனைவோருக்கான முக்கிய ஆலோசகராக உருவெடுத்து இருக்கிறார்.

யுவர் ஸ்டோரி அவரை சந்தித்த போது,

"சிறுவனாக இருந்த போது நான் கற்றதை இன்று தொழில் முனைவோரிடம் செயல்படுத்துகிறேன். அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்கிறேன். கேள்விகள் மட்டுமே கேட்கிறேன். கேட்கும் அத்தனை கேள்விகளும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். கேள்விகள் மூலம் தொழில்முனைவோரின் எண்ணங்களையும், சக்தியையும், திறமையையும் அவர்களின் வெற்றிக்கு உரிய காரணிகளாக மாற்றுகிறேன். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலமே அவர்கள் தொழிலுக்கான சரியான திட்டத்தை வகுத்து கொடுக்கிறேன். நான் அவர்களுக்கு தீர்வு என்று எதுவும் சொல்வதில்லை. என்னுடைய கேள்விகள் மூலமாக அவர்களே அதற்க்கான தீர்வை கண்டறிய உதவுகிறேன்" என்று தனது மந்திர ரகசியத்தை விளக்கினார், ஸ்ரீவாஸ்.

இந்திய தொழில்முனைவோரின் சக்தி மிகப்பெரியது. அவர்கள் உலகையே மாற்றக்கூடிய திறன் படைத்தவர்கள். நாட்டின் வெற்றிக் கதையை எழுத வேண்டுமானால் அதற்கு இது போன்ற பல மையங்கள் தேவை என்பது ஸ்ரீநிவாஸ் கருத்து.

பெங்களூருவில் 7 டி-ஹப் மையங்களை நடத்திவரும் இவர் தற்போது ஹைதராபாத்தில் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் மையத்தை உருவாக்கி உள்ளார். எப்படி தனது டி-ஹப்பை தொடங்கி வெற்றி கண்டாரோ அதே போன்று தற்போது இந்த ஸ்டார்ட் அப் பணியிலும் வெற்றிநடை போடுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

2015, நவம்பர் 5. அன்றுதான் டி- ஹப் தொடங்கப்பட்ட நாள். தொழில் துறையின் லெஜண்ட் ரத்தன் டாடா, தெலங்கானா மாநில ஆளுநர் ஈ.எல்.எஸ்.நரசிம்மன், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டி.ராம ராவ் ஆகிய மிக முக்கிய வி.வி.ஐ.பி. கள் அதனை தொடங்கி வைத்தார்கள் என்பதே அதன் சிறப்பை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

டி-ஹப், அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் இன்று பிரமாண்டமாக உருவாகி நிற்கிறது. தெலங்கான அரசு மட்டுமில்லாமல் ஐ.ஐ.ஐ.டி ஹைதராபாத், இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் கடுமையான உழைப்பும், ஒத்துழைப்பும் இதற்கு கிடைத்துள்ளது. தொழில் முனைவோருக்கான வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு சிறந்த சூழலை உருவாக்கித் தரவேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கம்.

ஐ.ஐ.ஐ.டி. வளாகத்துக்கு வெளியே உலகத்தர வசதிகளுடன் 70 ஆயிரம் சதுர அடியில் பறந்து விரிந்து கிடக்கிறது டி-ஹப். தொழில் முனைவோருக்கு ஒரு இன்குபேட்டர் ஆகவும், ஆக்ஸலரேட்டர் ஆகவும் செயல் படுகிறது என்பது இதன் சிறப்பு அம்சம். ஒட்டுமொத்தமாக, தொழில் முனைவோருக்கு அறிவுசார் மையமாகவும், தங்களை கட்டமைத்து கொள்ள உதவும் சிறந்த ஆதாரமாகவும் டி - ஹப் விளங்குகிறது.

டி-ஹப் பல வெற்றிக் கதைகளை உருவாக்கும். அந்த கதைகள் உலகின் பல பகுதிகளில் விவாதிக்கப்படும் என்பது நிறுவனரான ஸ்ரீனிவாசின் நம்பிக்கை!

பெங்களூரில் மட்டுமல்லாமல் ஹைதராபாத்திலும் ஏன் தொடங்கினீர்கள். அடுத்தடுத்த நகரங்களில் இருப்பதால் சண்டை சச்சரவுகள் வராதா என்று கேட்ட போது,

"நாட்டின் வளர்ச்சிக்கு பல நகரங்களில் ஸ்டார்ட் அப் மையங்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் பரஸ்பர ஒத்துழைப்போடு இவை வளர்ச்சிபெறும் என்கிறார். மட்டுமல்ல, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இது உதவும். ஒவ்வொரு மையமும் நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற போட்டியில் பயணிப்பார்கள்" என்பது ஸ்ரீனிவாசின் பதிலாக இருக்கிறது.

அது சரி ஏன் ஹைதராபாத்தை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு உணர்ச்சி பூர்வமாக பதிலளித்தார். இந்த நகரத்தோடு இணைந்த அவர் வாழ்க்கையின் மிக முக்கிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

ஹைதராபாத் நகரோடு இவருக்கு உள்ள உறவு மிக ஆழமானது. பல நண்பர்கள் மட்டுமல்ல சமூகத்தின் சக்தி படைத்த குடும்பத்தினர் தெரிந்தவர்களாக இருப்பதால், அரசியல் மற்றும் அதிகாரிகளின் உதவிகளை இலகுவாக பெறமுடியும் என்று நம்பியதால் இந்த நகரை தெரிவு செய்திருக்கிறார்.

இங்கு உயிரியல், மருத்துவம், வேளாண்மை என்று பல தொழில்களுக்கு சாத்தியக் கூறுகள் இருப்பதால் தொழில் முனைவோருக்கு ஸ்டார்ட் அப் மட்டுமல்ல ஆய்வுகளுக்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி பரஸ்பரம் பயன்பெறவும் உதவியாக இருக்கும்.

அமெரிக்கா, பிரிட்டன் என்று படித்த போதும், பணியாற்றிய போதும் கிடைத்த சில அனுபவங்களை சிலிகன் வேலியில் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் அதனை ஹைதராபாத்தில் செயல்படுத்த முடியும். அது மக்களுக்கு பயன் அளிக்கும் என்றும் நம்புகிறார் ஸ்ரீநிவாஸ்.

மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொழில் முனைவோர் அனைவரும் பெங்களூரு பக்கம்தான் சென்று கொண்டிருந்தார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகைகள் என்று எல்லோருமே பெங்களூரு பற்றி மட்டுமே பேசினார்கள். ஸ்டார்ட் அப் பற்றிய விபரம் குறைவாக இருந்த நேரத்தில் நானும், எனது நண்பர்களும் ஹைதராபாத்தில் உள்ள சூழலை மாற்றும் முயற்ச்சியில் இறங்கினோம். சிறிதாக அது வசப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு ஹைதராபாத் ஐ.ஐ.ஐ.டி பெரிய உதவி புரிந்தது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 2014 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதால் அது பல மாற்றங்களுக்கு வழி வகுத்தது. அரசு அப்போது பல உதவிகளை செய்ய முன்வந்தது. தகவல் தொழில்நுட்ப அமைச்சரான தாரகா ராம ராவ் தனது முயற்சியில் பல திட்டங்களை, கொள்கைகளை வகுத்து செயல் படுத்தினார். ஸ்டார்ட் அப்பிற்கும், தொழில் முனைவோருக்கும் பல ஊக்கங்களை அரசு வழங்கி வருகிறது. அரசின் புதிய கொள்கைகள் காரணாமாக, கடின முயற்சியில் இந்த டி-ஹப் தொடங்க முடிந்தது.

கார்பரேட் உலகை விட்டுவிட்டு ஏன் ஸ்டார்ட் அப் பக்கம் வந்தீர்கள் என்று கேட்டால், தனது ரத்தத்திலேயே தொழில் முனைவு ஊறிப்போய் இருப்பதாக கூறுகிறார். தனது தாத்தா முனைவர் சி.எல்.ராயுடு அன்றைய ஆந்திரா மாநிலத்தின் முக்கிய இடது சாரி தலைவராக இருந்தார். விஜயவாடாவை ஒட்டிய பல கிராமங்களில் பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்க காரணாமாக இருந்தார். பல பள்ளிகளை தொடங்கினார். பலனை எதிபார்க்காத அவரது உழைப்பு என்னையும் கவர்ந்துள்ளது. நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதனால் மக்கள் பயன் பெற வேண்டும். இந்த சமுதாயத்தை ஒளிமயமாக மாற்ற வேண்டும். என்னுடைய அடையாளத்தை அவர்கள் மத்தியில் விட்டுச் செல்ல வேண்டும் என்பதே எனது ஆசை.!

ஸ்ரீனிவாசின் தந்தை பிரிட்டனில் டாக்டராக பணியாற்றியவர். பின்னர் அவரே வணிகத்திலும் கால் பதித்து முழு நேர பிசினெஸ்மேனாக மாறி இருக்கிறார். இதனால் ஸ்ரீனிவாசும் சிறுவயதிலேயே விஜயவாடாவை விட்டு பிரிட்டன் சென்று படித்து வளர வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் இரு நாட்டு கலை, கலாசாரம், வணிக சூழ்நிலை என்று அனைத்தையும் இலகுவாக புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. தனது தாத்தா சி.எல் ராயுடு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்த மாமா டாக்டர் பசந்குமார் ஆகியோர் எப்படி இந்த சமூகத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்தினார்கள் என்பது எல்லாம் ஸ்ரீனிவாசுக்கு பலவற்றை கற்றுத்தந்துள்ளது.

தனது கல்லூரி படிப்பை முடித்த உடனேயே ஒமேகா இம்யூனோடெக் என்கிற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். அது பின்னர் பிரிட்டனில் மிகப்பெரிய பார்மா நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அங்கிருந்து கார்பரேட் உலகத்திற்குள் ஸ்ரீநிவாஸ் நுழைந்திருக்கிறார். ட்ரோன்ஜிங் பயோடெக், கேக்காய் கார்பரேஷன், ஆஸ்பெக்ட் மென்பொருள் நிறுவனம், பிரபலமான பியூபிள் சாப்ட் என்று பலவற்றில் பல பல பொறுப்பில் பணியாற்றி இருக்கிறார் ஸ்ரீநிவாஸ்.

பின்னர், 2007 -ல் தனித்து இயங்க வேண்டும் என்று திட்டமிட்டதால் 'ஸ்டார்ட் அப் மென்டர்' ஆக பரிணமித்து, இன்று தனக்கென்று ஸ்டார்ட் அப் துறையில் தனித்துவமான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இன்று டி- ஹப் தொடங்கியது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று ஸ்ரீநிவாஸ் கூறுகிறார். அது பரந்து விரிந்து தொழில் முனைவோரின் பல வெற்றிக் கதைகளை உருவாக்கும். அந்த வெற்றிக்கதைகள் உலகின் பல பகுதிகளில் பேசப்பட வேண்டும். அதுதான் தமது கனவு என்று ஸ்ரீனிவாஸ் உறுதியோடு கூறுகிறார்.

ஸ்ரீநிவாஸ் தனது வாழ்க்கையிலும் பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்துள்ளார். 

"எனது வாழ்க்கையிலும் பல ஏற்றத்தாழ்வுகள் நிகழ்துள்ளன. அப்போதெல்லாம் புதிது புதிதாக பலவற்றை கற்றுக்கொண்டேன். அப்பாவின் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது என்பது மிக கஷ்டமான காலகட்டமாக இருந்தது. வங்கிக் கடன் தொடர்ந்து கழுத்தை நெரித்த கால கட்டம் அது. சந்தோஷமான காலகட்டத்தில் உடன் இருந்த சில நண்பர்கள் பிரிந்து போனார்கள். அனால், திடீரென உதவி நீட்டினார்கள். நீங்கள் பல நல்லவற்றை செய்துள்ளீர்கள். அதற்காக இந்த உதவி என்று அவர்கள் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல மனிதர்களை பெறுவது மிகவும் தேவையாக இருக்கிறது என்பதை அன்று தெரிந்து கொண்டேன்."

கார்பரேட் உலகில் இருந்து ஸ்டார்ட் அப் உலகிற்கு வந்த ஸ்ரீநிவாஸ் மூன்று முக்கிய நோக்கங்களை மனதில் வைத்திருக்கிறார். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சியை பெற வேண்டும், மனது விரும்பாத எந்த பணியையும் செய்யக்கூடாது, சமூக உதவிகள் செய்த குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் என்பதுதான் அது.!ா

ஆக்கம்: அரவிந்த் யாதவ் | தமிழில் ஜெனிட்டா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்