ஏழைகளுக்கு இலவச மருந்துகள் அளித்து உன்னத சேவை!

நாம் நோயுற்ற போது வாங்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. அப்படிக் காலாவதியாகாத மருந்துகளைச் சேகரித்து மருந்து தேவைப்படுவோருக்கு வழங்குகிறது PEPL எனும் தொழில் நிறுவனம்.

0

ஷேக்ஆலம் ஏழை விவசாயி. மேற்குவங்கம் பிர்ஹம்பூர் மாவட்டத்தில் ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த இவர், கடும் மழையிலும் வெயிலிலும் வயல்களில் பாடுபடக் கூடியவர். அடிக்கடி இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். ”நான் ஒரு ஏழைவிவசாயி என்பதால் என் இதயநோய்க்கு மருந்து வாங்கும் சக்தி எனக்கு இல்லை. எங்களுக்கு அருகாமைப் பகுதியில் உள்ள பாலகா என்னும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்குத் தேவையான மருந்துகளை இலவசமாக அளித்தனர்” என்கிறார் தற்போது நோயிலிருந்து நிவாரணம் பெற்றுவரும் ஷேக்.

அதேப்போல மேற்குவங்கம், தட்சின் தினாஜ்பூர் மாவட்டம், பாலூர்காட்டைச் சேர்ந்த அன்றாடக் கூலித்தொழிலாளியான சாபிதா தாஸுக்கும் கடுமையான தோல் நோய்ப் பிரச்சனை. அவரது வருமானமும் சிகிச்சைக்குப் பற்றாக் குறையாகத் தான் இருந்தது. ஆகையால் அவளது கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சத்தியஜித் மன்ச்சா அவருக்கு உதவிபுரிய முன் வந்தனர். “எனது வலதுகையில் உள்ள தோல்நோய்க்குக் கொடுத்த களிம்பு மருந்து எனக்கு நிவாரணம் அளித்துள்ளது. சத்தியஜித் மேனகா எனக்களித்த இந்த மருந்தை வாங்குவதற்கு வசதியற்றவள் நான்” என்கிறார் சபிதா.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களான பாலக்கா, சத்தியஜித் மன்ச்சா இருவருமே பிரியா எண்டர்டைன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (PEPL) என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். PEPL தற்போது "மெடிசன்பாக்ஸ்” என்ற தனித்துவமான சேவையைத் துவக்கியுள்ளது. இவர்களது இந்தச் சேவைமையம் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்களில் 11 இடங்களில் செயல்படுகின்றன. “மருந்து வாங்க வசதியற்ற மக்களுக்கு உதவியளிக்கும் இந்த மெடிசன்பாக்ஸ் திட்டத்திற்கான சிந்தனையை அளித்தவர் எனது அம்மா ’பூர்ணிமாதத்தா’. இவர் PEPL நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். பயன்படுத்தாத ஆனால் அதேநேரம் காலாவதியாகாத மருந்துகளை ஒருபெட்டியில் சேகரிப்பதும் இத்திட்டத்தில் ஒருபகுதி. இந்த வருடம் பெங்காலிப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று மருந்து சேகரிப்பு இயக்கம் துவக்கப்பட்டது. எங்களது மையங்கள் அனைத்திலும் மருந்து சேகரிப்பு இயக்கம் நடத்தப்பட்டன. எங்களது மையங்களின் புரவலர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், வணிக வளாகத் திரையரங்குகளிலும் இதுபற்றிய விழிப்புணர்வுப் படங்கள் திரையிடப்பட்டன. அதன் பிறகு சேகரிக்கப்பட்ட மருந்துகள் தன்னார்வ நிறுவனங்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டு, தமது சிகிச்சைக்கு தேவைப்படுகிற மருந்து வாங்க வசதியற்ற மக்களுக்கு அம்மருந்துகளை வழங்கினர்” என்று கூறினார் PEPL நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகிய அர்ஜித் தத்தா.

திரையரங்குகளில், படம் துவங்குவதற்கு முன்பாக கரகரப்பான குரலில் இந்தியன் பிலிம் நியூஸ் வழங்கிய ஆவணப்படங்கள் திரையிடப்படுமே…. மீண்டும் அந்தப் பழைய இனிமையான நாட்களை நமக்கு நினைவுபடுத்துகிறது, மருந்து சேகரிப்பு பற்றிய தகவல்களை திரையரங்குகளில் படங்களின் இடைவேளை நேரங்களில் காட்டப்படும் சிலைடு காட்சி. அங்குள்ள தகவல் பலகைகளிலும் இந்தச் செய்திகள் பற்றிய அறிக்கைகள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. மருந்து சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக PEPL முத்திரை பதித்த மருந்து சேகரிப்புப் பெட்டிகள் மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்படுகின்றன. "இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட அனைத்து மையங்களிலும் மக்கள், மனமுவந்து மருந்துகளை வழங்குகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மருந்துகள் ஏழைமக்களுக்குப் பெருமளவு நன்மை புரியும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் அர்ஜித்.

"எங்களது PEPL பெரும் மருந்துகளை 15 பயனாளர்களுக்கு பெங்களூரில் உள்ள RIHAD அமைப்பின் மூலம் அனுப்பி வைக்கிறோம். பெரும்பாலும் இந்த மருந்துகள் உள்ளூர் மருத்துவர்களால் வாயுத்தொல்லைக்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளாகவே உள்ளன” என்று உறுதிப்படுத்துகிறார் RIHAD அமைப்பிற்காக மேற்கு வங்கம் 24 தெற்கு பர்கானா மாவட்டங்களில் பணியாற்றும் சமூக ஊழியர் அலோக் பால்.

PEPL இன் சமூக நல இயக்கங்கள் மெடிசன் பாக்ஸ் திட்டத்துடன் முடிந்து விடவில்லை. இதுபோன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘’கடந்த ஆண்டு கல்கத்தாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்குச் சென்று எங்களது cemo (centre for ecological movement) சூழலியல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு அளித்தோம்’’ என்று தெரிவிக்கிறார் அர்ஜித்.

ஆங்கிலத்தில்: பய்சாலி முகர்ஜி | தமிழில்: போப்பு