இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 19 யூனிகார்ன் நிறுவனர்கள்!

2018-ம் ஆண்டின் பார்க்ளேவின் ஹுரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிகர மதிப்புடைய யூனிகார்ன் நிறுவனர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடைய கூட்டு மதிப்பு 73,600 கோடி ரூபாயாகும்.

0

பார்க்ளேவின் ஹுரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2018, இந்தியாவில் உள்ள 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிகர மதிப்புடைய பணக்கார தனிநபர்களின் தொகுப்பாகும். இதில் பேடிஎம், ஃப்ளிப்கார்ட், உடான், ஓயோ, ஓலா, பைஜூஸ் போன்ற யூனிகார்ன் நிறுவனங்களின் தொழில்முனைவோர் 19 பேர் இடம்பெற்றுள்ளது.

மீடியா.நெட் நிறுவனத்தைச் சேர்ந்த திவ்யாங்க் துராக்கியா 11,600 கோடி ரூபாய் மொத்த சொத்து மதிப்புடன் யூனிகார்ன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இவரைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் விஜய் சேகர் ஷர்மா 10,500 கோடி ரூபாய் மதிப்புடனும் Zerodha நிறுவனத்தின் நிதின் காமத் மற்றும் குடும்பத்தினர் 8,600 கோடி ரூபாய் மதிப்புடனும் பட்டியலில் அடுத்தடுத்த இடம் வகித்துள்ளனர்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல், ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால், ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் போன்றோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற நிறுவனர்கள் ஆவர். யூனிகார்ன் நிறுவனர்கள் 19 பேரின் கூட்டு மதிப்பு 73,600 கோடி ரூபாயாகும். 

2017-ம் ஆண்டின் பார்க்ளேஸ் ஹுரன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை 617-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கையானது 2018-ம் ஆண்டில் 831-ஆக அதிகரித்துள்ளது. 

2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதியின்படி இந்தியர்களின் நிகர மதிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தொகுக்கப்பட்டது. அந்த சமயத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 68.51-ஆக இருந்தது. இந்தப் பட்டியல் இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்தியர்களுக்கு மட்டுமானது.

இந்த 19 யூனிகார்ன் நிறுவனர்களில் 10 பேர் கர்நாடக மாநிலத்தில் செயல்படுகின்றனர். ஓயோ நிறுவனரான 24 வயது ரித்தேஷ் அகர்வால் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இளம் நபராவார். அதே போல் பில்டெஸ்க் நிறுவனத்தின் 49 வயது எம் என் ஸ்ரீனிவாசு பட்டியலில் இடம்பெற்றவர்களில் வயது முதிர்ந்தவர் ஆவார்.

831 இந்தியர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் க்ரூப் தலைவர் முகேஷ் அம்பானி 3,71,000 கோடி ரூபாய் நிகர மதிப்புடன் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முன்னணி வகிக்கிறார். 

இந்தப் பட்டியலில் இடம்பெற்ற 831 தனிநபர்களின் ஒட்டுமொத்த மதிப்பு 719 பில்லியன் டாலராகும். இந்த தொகை இந்தியாவின் மொத்த ஜிடிபி-யான 2,848 பில்லியன் டாலரில் (ஏப்ரல் 1, 2018 ஐஎம்எஃப் மதிப்பீட்டின்படி) நான்கில் ஒரு பங்காகும். 233 பேருடன் மும்பை அதிக பணக்காரர்கள் அடங்கிய நகரமாக உள்ளது. அதைத் தொடர்ந்து 163 பேருடன் புது டெல்லியும் 69 பேருடன் பெங்களூருவும் உள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : திம்மய்யா பூஜரி | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL