உங்கள் தயாரிப்பு விற்காமல் போனதற்கான மூன்று காரணங்கள்!

2

உங்கள் பொருட்கள் விற்காமல் இருப்பதற்கு 3 கோடி காரணங்கள் இருக்கலாம் –வாடிக்கையாளர்கள் இடையே முறையான விழிப்புணர்வு இல்லாதிருத்தல் அல்லது பொருட்கள் முறையாக விளம்பரப்படுத்தாமை போன்ற பல காரணங்களாக இருக்கலாம்.

ஒரு தொழிலை தொடங்கி அதில் முன்னேற பல கடினமான பாதைகளை கடந்து வர வேண்டும். அது மிக சுலபமாக நடந்து விடும் என்று நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் அது அப்படி அல்ல. ஒரு பொருளை சுலபமாக விற்க முடியும் என்றால் நம்மை சுற்றி இவ்வளவு தயாரிப்புகள் தோல்வியில் முடிந்திருக்காது.

புள்ளிவிபரங்கள் காட்டுவது:

• 7 தயாரிப்புகளுள், ஒரே ஒரு தயாரிப்பு மட்டும்தான் வெற்றி அடைகிறது.

• 7 புதிய பொருள் தயாரிப்பு யோசனையில், 4 மட்டும்தான் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது

• புதிய தயாரிப்புகள் பெரும்பாலும் 25-45 சதவீதம் தோல்வியையே அடைகிறது

ஒரு சூழ்நிலையில் உங்கள் தயாரிப்புகள் விற்கவில்லை என்றால், உடனே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். உங்கள் தயாரிப்பு வெற்றி அடையாமல் போக 3 முக்கியக் காரணங்கள் உண்டு.

சந்தை ஆராய்ச்சியில் நீங்கள் அதிக நேரம் செலவிடவில்லை:

உங்கள் தொழில் யோசனை மிகச் சிறந்ததாக இருக்கலாம் ஆனால் அது சந்தையில் நிலைத்திருக்குமா என்பதே கேள்வி. உங்கள் தயாரிப்பு மக்கள் தேவையை பூர்த்தி செய்யுமா? அதை வாங்குவார்களா? அல்லது பல சந்தை போட்டியாளர்களுடன் நிலைத்திருக்குமா? முதலில் சோதித்து பார்க்க வேண்டும் அல்லது தீவிரமாக சந்தை ஆராயச்சியில் இறங்க வேண்டும். சோதனை முயற்சியில் உங்களுக்கு சந்தையின் பல தேவைகள் புலப்படும்; அது உங்கள் தயாரிப்பை மேம்படுத்த உதவும். உங்கள் சந்தை ஆராய்ச்சி போதுமானதாக இல்லை என்றால் நிச்சயம் உங்கள் தயாரிப்பு தோல்வியை சந்திக்கும்.

முறையான சந்தை ஆராய்ச்சி இல்லாமல் தோல்வியை தழுவியதற்கான மிகப்பெரிய வழக்கு ஆய்வு ’New Coke’ ஆகும். எண்பதுகளில் வெளிவந்த கோகோ கோலா பெரும் தோல்வியை தழுவியது. புதியது அல்லது பழையது எதுவாயினும் சுவையே முக்கியம் என நிறுவனம் எண்ணியது. ஆனால் அவர்கள் அசல் சுவை மற்றும் பிராண்ட் மீது உள்ள மதிப்பை மதிப்பீடு செய்யத் தவறிவிட்டனர். பழைய கோக் சந்தையில் இருந்து போய்விடும் என்று அஞ்சி மக்கள் அதன் மீதே அதிகம் பற்று கொண்டனர்.

மேலும், செக்வே வழக்கை யாரால் மறக்க முடியும்? ஆமாம், இரு சக்கர ஸெல்ப்- பாலன்சிங் ஸ்கூட்டர், நீங்கள் பெரும்பாலும் மால்கள், சுற்றுலா இடங்கள் அல்லது கட்டிடங்களில் பார்க்கும் ஸ்கூட்டர். இதில் உங்களுக்கு தெரியாதது என்னவென்றால், முதலில் இது போக்குவரத்திற்காக அதாவது அலுவுலகதிற்கு, பள்ளிக்கு செல்ல தயாரிக்கப்பட்ட வாகனம். ஆனால் செக்வே ஸ்கூட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் எங்கு நிறுத்த வேண்டும் என்ற குழப்பத்தில் இது தயாரிக்கப்பட்ட உண்மையான நோக்கத்தை இழந்தது.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தயாரிப்பு பற்றிய விழுப்புணர்வு இல்லை – முறையான விளம்பரம் இல்லாமையே காரணம்:

ஆரம்பத்தில் விளம்பரம் செய்ய அதிக பண முதலீடு செய்வது கடினம் என்றாலும் விளம்பரம் இல்லாமல் மக்களுக்கு உங்கள் தயாரிப்பை கொண்டு செல்ல முடியாது. உங்கள் தயாரிப்பின் நல்லது மற்றும் அதன் தேவையை நீங்கள் சொல்லாதவரை உங்கள் பொருள் விற்காது. சரி, உங்கள் பொருள் விற்கிறது ஆனால் போதுமான அளவு விற்பனை இல்லை என்றால் அதை பயன்படுத்த மக்களுக்கு தெரியவில்லை என்று அர்த்தம்.

உதாரணதிற்கு, TATA நானோ மாடல் காரை வெளியிட்டது, இது இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கான அடுத்தக்கட்ட நிலமையாக இருக்கும் என நம்பினர். ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு அது இல்லாதலால் தோல்வி அடைந்தது.

இது போன்றே Kellogg’s-க்கும் நடந்தது, பால் மற்றும் ஸ்பூன் கொண்ட cereal-ஐ வெளியிட்டது. இதன் நோக்கம் பெற்றோர்கள் இல்லாத போது குழந்தைகள் தங்களாகவே அதை உண்ணுவது ஆகும். ஆனால் அதன் வடிவமைப்பு குழந்தைகளுக்கு ஏற்றதாக இல்லை. அதன் நோக்கத்தை சந்திக்காததால் அது தோல்வி அடைந்தது.

நீங்கள் சந்தைப்படுத்திய நேரம் சரி இல்லை:

ஒன்று உங்கள் தயாரிப்பை முன் கூட்டியே வெளியிடுவது அல்லது தாமதமாக வெளியிடுவது. முன் கூட்டியே வெளியிட்டால் வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புக்குத் தயாராக இருக்க மாட்டார்கள் அதேப்போல் தாமதமாக வெளியிட்டால் சந்தையில் அதிக போட்டி இருக்கும். பொருளாதார மற்றும் அரசியல் சூழல் உங்கள் தயாரிப்பிற்கு ஏற்றதாக அமையாதிருத்தல்.

மைக்ரோசாப்டின் Spot (Smart Personal Objects Technology) தோல்வி அடைந்தது. ஆனால் ஆப்பிள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் வாட்ச் பெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சின் முன்னோடி 10 வருடங்களுக்கு முன் வந்த மைக்ரோசாப்டின் spot தான். spot-ல் ஈமெயில் பெரும் வசதி, வானொலி, குறுஞ்செய்தி பெறுதல், செய்திகள் பெறுதல் போன்ற அம்சங்கள் இருந்தது. ஆனால் அவர்கள் அதை வெளியிட்ட நேரம் சரியானதாக இல்லை, மக்கள் அப்பொழுது அதீத வேகம் கொண்ட கைபேசிகளையே விரும்பினர்.

மற்றுமொரு எடுத்துக்காட்டு pets.com, செல்லப்பிராணிகளுக்கு தேவையானதை விற்கும் தளம். இரண்டே வருடத்தில் இது மூடப்பட்டது; காரணம் ஆன்லைன் விற்பனை அப்பொழுது சரிந்து கொண்டிருந்தது.

உங்கள் தயாரிப்பு விற்காமல் இருக்க இது போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் இருந்து வெளிவர நிச்சயம் வழி இருக்கும், அதை காணுங்கள். சந்தையில் இருந்து உங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்டு, மெருகேற்றி மீண்டும் வெளியிடுங்கள். அது உங்களுக்கு சாத்தியம் இல்லை என்றால் தோல்வியை பாடமாக ஏற்று அடுத்த வேலைக்கு செல்லுங்கள். 

ஆங்கில கட்டுரையாளர்: அமித் துவா