நீங்கள் பிரிலான்சராக இருப்பதில் இருந்து தொழில்முனைவோராக மாற வேண்டுமா?

0

பல்வேறு துறைகளில் பிரிலான்சர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். மேலும் பல பிரிலான்சர்கள் சொந்த வர்த்தகத்தை துவக்குவதிலும் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. உங்கள் விரிவாக்கத்தில் பணிச்சுமை, நிதி மற்றும் போட்டியில் நீங்கள் துவக்கத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உங்கள் பணி சிறப்பாக இருந்து, நீங்கள் நல்லெண்ணத்தை உருவாக்கி இருந்து, உங்கள் வருவாயை அதிகரிக்க விரும்பினால் நீக்கள் சொந்த வர்த்தகத்தை துவக்கி, பணிச்சுமையை பகிர்ந்து கொள்ள சில ஊழியர்களை நியமித்துக்கொள்வது அல்லது வேறு ஒருவருடன் இணைந்து வர்த்தகம் செய்வதில் எந்த தவறும் இல்லை. எனவே பிரிலான்சிங்கின் அடுத்த கட்டம் பற்றி அறிய விரும்பினால் மேல் படியுங்கள்!.

தொழில்முனைவோராவது ஏன்?

இப்போது உலகில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஸ்டார்ட் அப்கள் ஈர்ப்புடையதாக கருதப்படுகின்றன. இப்படி எங்கும் ஸ்டார்ட் அப் மனநிலை இருப்பதால், நாமும் தொழில்முனைவோராகி, சொந்தமாக தொழில் செய்தால் தான் வெற்றி பெற முடியும் என கருதப்படுகிறது. தொழில்முறை பணியாளர்கள் வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்கி நடத்தும் பல வெற்றிக்கதைகளை நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உங்களாலும் அது போல ஆக முடியுமா? பிரிலான்சராக தொடர்ந்து இருப்பதிலேயே என்ன தவறு? பிரிலான்சராக பணியாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. உங்களைச்சுற்றி நிகழும் பரபரப்பை கண்டு கொள்ளலாமல் இருப்பது சரியானது தான். உலகம் முழுவதும் பலருக்கு பிரிலான்சிங் செய்வது வருமானத்திற்கான வழியாகவும், தங்கள் தனிப்பட்ட வாழ்கையை கவனித்துக்கொள்வதற்கான வழியாகவும் அமைகிறது. ஆரம்ப ஆண்டுகள் அதிக பலன் அளிக்காவிட்டாலும் கூட நிலைப்பெற்று, உங்களுக்கான தொடர்புகள் மற்றும் வருவாய் ஆதாரத்தை ஏற்படுத்திக்கொண்ட பிறகு நீங்கள் கூடுதல் சுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ள முயற்சிக்கலாம்.

அதிக நெருக்கடி

நீங்கள் ஸ்டார்ட் அப்பை நடத்தும் போது பலவித சவால்கள் இருக்கலாம். நீங்கள் மற்றவர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதால் தொடர்ந்து திட்டங்களை பெறுவதற்கான நெருக்கடி இருக்கும். மேலும் ஒவ்வொரு ஊழியரும் 100 சதவீத முயற்சியை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் பணிச்சுமையை நிர்வகிப்பதைவிட பணியாளர்களை நிர்வகிப்பது கடினமானது. உளவியல் மற்றும் உணர்வு நோக்கிலான அம்சங்கள் இதில் உண்டு. இந்த ஊழியர்களின் சிறந்தவற்றை கொண்டு வருவது மற்றும் அடுத்த வாடிக்கையாளரை பெறுவதில் எப்போதுமே நெருக்கடி இருக்கும். பலரும் வேலையில் இருந்து விடுபட்டு பிரிலான்சிங் பணியை நாடுவது என்பதாக இருக்கும் போது, தொழில்முனைவில் மன அழுத்தம் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும். குறைந்த பட்சம் ஆரம்ப கட்டத்தில் இப்படித் தான் இருக்கும். சில நேரங்களில் தலைமுடியை பிய்த்துக்கொள்ளலாம் போலவும், ஏதேனும் தனி இடத்திற்கு செல்லலாம் போலவும் தோன்றும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது.

குறைந்த லாபவிகிதம்

ஸ்டார்ட் அப்கள் அதிக பணத்தை பெற்றுத்தரும் என நினைப்பது எளிதானது. உலகையே மாற்றக்கூடிய ஒரு ஐடியா இல்லாத பட்சத்தில், இது நூற்றில் ஒரு ஸ்டார்ட் அப்புக்கே சாத்தியம் எனும் நிலையில் உங்கள் ஸ்டார்ட் அப் திட்டவட்டமான பட்ஜெட்டில் பணியாற்ற நேரலாம். அல்லது நீங்கள் சொந்த பணத்தை போட வேண்டியிருக்கும். அதிக வேலைகள் கிடைத்து, மேலும் வாடிக்கையாளர்கள் வந்தாலும் கூட அவை தரும் வருவாய் ஊழியர் செலவு, கம்யூட்டர்கள், பர்னீச்சர்கள், சாப்ட்வேர் ஆகியவற்றுக்கு சரியாக இருக்கும். ஆக, நீங்கள் தனியே செயல்பட்ட போது இருந்த அளவுக்கு லாபவிகிதம் இருக்காது.

மாற்றத்திற்கான காரணங்கள்

இழப்பதற்கு எதுவுமில்லை

மற்றவர்கள் போல நீங்கள் உங்கள் நிரந்தர பணியை நம்பியிருக்கவில்லை என்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஸ்டார்ட் அப் சரியாக செயல்படாவிட்டால் நீங்கள் பழையபடி பிரிலான்சிங் பணிக்கே சென்றுவிடலாம். இதில் எந்த சிக்கலும் இருக்காது. எனவே அச்சம் தேவையில்லை.

உற்சாகமான வாய்ப்புகள்

எல்லையில்லா வாய்ப்புகள் தான் மனிதர்களை அறியாதவற்றை நோக்கி இழுத்துச்செல்கின்றன. வெற்றிகரமான ஸ்டார்ட் அப் உரிமையாளராக வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை நினைத்துப்பாருங்கள். நீங்கள் அடுத்த மைக்ரோசாப்டாக அல்லது ஃபேஸ்புக்காக உருவாகலாம். பிரிலான்சிங் நல்லது என்றாலும் அதில் வரம்புகள் உண்டு. அதில் அதிகம் முன்னேற வாய்ப்பில்லை. நிறுவனத்தை நடத்துவது மேலும் சவால் மிக்கதாக, மேலும் நிறைவு தருவதாக அமையும்.

(குறிப்பு: இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்தை பிரதிபலிப்பவை அல்ல)

ஆக்கம்: சவுரப் தியாகி | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'50,000 பெண்களை தொழில் முனைவோர் ஆக்குவோம்' - ஓலாவின் இலக்கு

இளம் தொழில் முனைவரின் கண்டுபிடிப்பினால், சாமான்யரின் தண்ணீர் பம்ப் பிரச்னைக்கு தீர்வு!