’பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் தொடர்வது வேதனை அளிக்கிறது’- குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி

0

இந்தியாவில் பெண்கள் கடவுளாக வணங்கப்படும் அதே வேளையில் அவர்களுக்கு எதிராக வன்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனை அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி கூறினார்.

சென்னையில் இந்திய மாதர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை துவக்கி வைத்துப் பேசிய அவர் நாள்தோறும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் செயல்கள் துரதிருஷ்டவசமானது, வருத்தமளிக்க கூடியது என்றும் கூறினார். பெண்களைப் போற்றும் நாகரீகமான சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான நிகழ்வுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்திய மாதர் சங்கத்தை தோற்றுவித்தவர்கள் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய அந்தஸ்த்து மற்றும் மதிப்பு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் ஆனால் அந்த நோக்கம் வெற்றிபெற இன்னும் சில தூரத்திற்கு பெண்கள் பயணிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்திய மாதர் சங்கத்தை தோற்றுவித்த அன்னி பெசன்ட் மார்கரட் கசின்ஸ், சரோஜினி நாயுடு ஆகியோர் பெண் வாக்குரிமைக்கான போராட்டத்தினை துவக்கியவர்கள் என்றும் குழந்தை திருமணத் தடைச் சட்டம் மற்றும் சாராதா சட்டம் ஆகியவற்றை நடைமுறைப் படுத்துவதில் முக்கியப் பங்கு ஆற்றினார்கள் என்றும் குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டினார்.

பெண்களுக்கு சம வாய்ப்பு மற்றும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்று நமது அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் நிஜ வாழ்க்கையில் அது அவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்து வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம் மதிப்பிடப்படும்போது பெண்களின் பங்கு கணக்கில் எடுக்கப்படுவது இல்லை என்று கூறிய குடியரசுத் தலைவர் இந்த விஷயம் பெண்களுக்கு எதிரான பாகுபாடை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் மக்களவையில் தற்போது 11.3 சதவீதம் பெண் உறுப்பினர்கள் மட்டும் இருப்பதாக அவர் கூறினார். இது சர்வதேச அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22.8 சதவீதம் ஆக இருப்பதாகக்குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்டுதான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய அந்தஸ்த்து அளிக்க இடஒதுக்கீடு முறை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். பெண்கள் முழுமையாக மேம்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு கல்வி மற்றும் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆகியவற்றில் அதிகப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதுடன் மற்ற துறைகளிலும் அவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முது பெரும் புற்று நோய் நிபுணர் டாக்டர் சாந்தா மற்றும் சமூக ஆர்வலர் திருமதி. கிருஷ்ணம்மாள் ஜகன்நாதன் ஆகியோரைக் கவுரவிக்கும் விதமாக ஆளுநர் திரு. வித்தியாசாகர் ராவ் கேடயம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில சமூகநலத் துறை அமைச்சர் திருமதி. வி. சரோஜா மற்றும் இந்திய மாதர் சங்கத் தலைவர் திருமதி. பத்மா வெங்கட்ராமன் மற்றும் கவுரவ செயலர் திருமதி. பார்கவி தேவேந்திரா பங்கேற்றனர்.