நேர்மையின் மொத்த வசூல் ரூ.2.16 கோடி: விதிமீறலுக்கு எதிரான போக்குவரத்து போலீஸ்!

0

தனுஷ்க் மென்சிபா கச்சோட், குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் துணை சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். 57 வயதாகும் இவர், தனது 10 ஆண்டுகால பணி அனுபவத்தில் கிட்டத்தட்ட 2.16 கோடி ரூபாயை போக்குவரத்து மீறல் செய்தோரிடம் அபராதமாக வசூலித்துள்ளார் என்பது ஆச்சர்யமான தகவல். இவர் வசூலித்த இந்த தொகை, அவரின் அலுவலகம் வசூலித்த மொத்த தொகையில் 10சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ்க் குஜராத் காவல்துறையில் 1979ஆம் ஆண்டு காஸ்டபிளாக பணிக்கு சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு, வாகனங்களை பறிமுதல் (Tow) செய்யும் துறைக்கு மாறினார். அங்கு அவர் நேர்மை தவறாமல் தனது பணியை செய்து வந்தார். தனி ஒரு ஆளாக தனுஷ்க், 1.7லட்சம் கேசுகளை பதிவிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல். 

பொதுவாகவே போக்குவரத்து மீறல் வழக்குகளில், மேலிட சிபாரிசை காட்டி, அபராதம் கட்டாமல் தப்பிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு நடக்காதவாறு, தனக்கு தொழில்நுட்பம் பெரும் அளவு கை கொடுத்தது என்கிறார் தனுஷ்க். கடுமையான சமயங்களில் அது பேருதவியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“நோ பார்க்கிங்’கில் நிறுத்தப்பட்டுள்ள கார் மற்றும் பைக்குகளை நான் உடனடியாக என் போனில் படம் பிடித்துவிடுவேன். தவறிழைத்தவர் அபராதத்தை கொடுக்க மறுத்தால், நான் எடுத்த படங்களை காட்டி என் கடமையை செய்வேன்,”

என்று வீக்கெண்ட் லீடர் பேட்டியில் கூறியுள்ளார் தனுஷ்க். ஒரு நாளைக்கு, தனுஷ்க் சுமார் 100 வாகனங்களை டோ செய்வாராம். இது மற்றவர்கள் செய்வதை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கை ஆகும். 

ராஜ்கோட்டின் துணை ஆணையர் கேபி ஜாலா டிஎன்ஏவிடம் கூறுகையில், 

“தனுஷ்க் நம் நாட்டிலேயே 2கோடி ரூபாய் வரை அபராதம் வசூலித்த ஒரே நபராக இருப்பார் என்று எண்ணுகிறேன், அவருடைய ஈடுபாடும், உழைப்பும் எங்களை ஆச்சர்யப்படுத்துவதால், அவரை வேறு துறைக்கு மாற்றவில்லை,” என்றார். 

தனுஷ்க் மேலும் கூறுகையில்,

“நான் என் வேலையை செய்கிறேன். எவரேனும் போக்குவரத்து விதிகளை மீறினால், அவர்களிடம் அபராதம் விதிக்காமல் நான் விடமாட்டேன். ராஜ்கோட்டின் போக்குவரத்து மேலும் சிறப்பாக வேண்டும் என்று ஆசை படுகிறேன்.” 

கட்டுரை: Think Change India