2018-ம் ஆண்டில் சந்தையை ஆளப்போகும் 5 மார்கெட்டிங் போக்குகள்... 

சந்தைப்படுத்துவதில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் இருந்து வருவதால் சந்தைப்படுத்துவோர் தொடர்ந்து இதை கவனத்தில் கொண்டு தங்களை அதற்கேற்றவாறு தயார்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.

3

நுகர்வோரின் ஆர்வமானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அனைத்து துறைகளின் ப்ராண்டுகளும் 2017-ம் ஆண்டைப் போலவே வாடிக்கையாளர் அனுபவத்தை புதுமையான விதங்களில் உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த மாற்றமானது வரும் 2018-ம் ஆண்டில் மேலும் வலுவாகவும், ஆழமாகவும், விரைவாகவும் இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

இதை சாத்தியப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்று ஸ்மார்ட்ஃபோன். இது நுகர்வோர் தகவல்களை தெரிந்துகொள்ளவும், சலுகைகள் குறித்து தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. இதனால் நுகர்வோருக்கு உடனடியாக ஒரு மனநிறைவை ஏற்படுத்துகிறது. நுகர்வோருக்கு தேவை எழும் தருணத்தில் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கக்கூடிய ப்ராண்ட்தான் அவர்களது தேர்வாக இருக்கும். அவ்வாறு தேவையான வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்ககூடிய அத்தகைய ப்ராண்டுகள் தங்களது வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக தொடர்பில் இருக்கும்.

96 சதவீத நுகர்வோர் புரிதலுக்கும் ஆய்வு செய்வதற்கும் தங்களது ஸ்மார்ட்ஃபோனையே அணுகுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்கும் சமூகங்களை உருவாக்கிக்கொள்ளவும் ஸ்மார்ட்ஃபோன்களையே பயன்படுத்துகின்றனர். இது உண்மையெனும் பட்சத்தில் சந்தைப்படுத்துவோர் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

இந்த மாற்றங்களுக்கு வடிவம் கொடுக்கக்கூடிய சில போக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. ஸ்மார்ட்ஃபோன்கள் வாயிலான வலைதள பயன்பாடு அதிகரிக்கும். லேப்டாப்கள், டெஸ்க்டாப்கள், டேப்லட்கள் மற்றும் இதர சாதனங்களின் பயன்பாடு குறையக்கூடும். இது சந்தைதாரர்கள் 24X7 வாடிக்கையாளர்களுடன் பேச வாய்ப்பளிக்கிறது. சமூக ஊடகங்களையும் மொபைல் வாயிலாகவே அணுகும் போக்கில் அபரிவிதமான அதிகரிப்பு இருக்கக்கூடும். இதன் காரணமாகவே ஃபேஸ்புக்கை மொபைல் வாயிலாக அணுகும் பயனர்களின் எண்ணிக்கை குறைவாகவே கணிக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கிறது. 

ஒவ்வொரு மாதமும் இந்தத் தளத்தை 1.1 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் நிலையில் ஃபேஸ்புக் இந்த எண்ணிக்கையை துல்லியமாக கணிக்கும் நிலையில் இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் தொடர் எண்ணிக்கை உயர்வால் ஒவ்வொரு வருடமும் சமூக ஊடகங்களையும் இணையதளத்தையும் மொபைல் வாயிலாக பயன்படுத்துவோரின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே கணிக்கப்படுகிறது. இந்த நிலையானது 2018-ம் ஆண்டும் தொடரக்கூடும்.

2. தயாரிப்பு அல்லது சேவை குறித்த ஆர்வத்தை வாடிக்கையாளர்களிடையே தூண்ட உருவாக்கப்படும் கண்டெண்ட் மார்கெட்டிங் வாயிலாகவே வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ளுதல், நம்பிக்கையை உருவாக்குதல் மற்றும் இலக்காக கருதியவர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுதல் உள்ளிட்டவை நடைபெறக்கூடும். அதைத் தொடர்ந்து பிக் டேட்டா அனாலிசிஸ் (BDA), செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), சமூக ஊடகங்களின் தலையீடு போன்றவற்றால் இவை வலுப்படுத்தப்படும்.

3. வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்குவதில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இது வரை இல்லாத அளவு மேம்படுத்தபடும். பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) போன்ற நிறுவனங்கள் கூட பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைத் தாண்டி சேவையை விரிவுபடுத்துகிறது. இவர்களது ‘ஸ்மார்ட் ட்ரைவ்’ செயலியானது ஓட்டுநர் வாகனத்தில் பயணித்தவாறே பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி சேவையளிக்கும் நிலையங்களை கண்டறிய உதவுகிறது. விற்பனைப் பொருட்களுடன் கூடுதல் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதே போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்தி வெற்றியடைய உதவும்.

4. சந்தைப்படுத்துவோரையும் வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து தொடர்பில் இருக்கச் செய்வதில் வீடியோ பெரும்பங்கு வகிக்கக்கூடும். வாடிக்கையாளர்களின் பங்களிப்பையும் தொடர்பையும் அதிகப்படுத்துவதற்காக 3D ப்ரொஜெக்ஷன் மேப்பிங் போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதில் தொழில்நுட்பம் வாயிலாக ப்ரொமோஷனல் காட்சிகளும் வீடியோக்களும் பொருட்களின் 3D ப்ரொஜெக்ஷனை காட்சிப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் கொகோ கோலா தனது பிரச்சாரங்களில் ஒன்றான ’ஒன் ப்ராண்ட்’ மூலம் இதை செயல்படுத்தியது. ஃபேஸ்புக் லைவ், BeLIve, Zoom போன்றவற்றின் உதவியுடன் சந்தைப்படுத்துவோர் லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் முறையை எளிதாக அணுகமுடியும். வாடிக்கையாளர்கள் மெய்நிகர் உண்மை அனுபவத்தை பெறுவதற்காக சிறப்புக் கண்ணாடி அணியவேண்டியது கட்டாயமாக இருப்பது ஒரு தடங்கலாக இருப்பதுபோல் தோன்றினாலும் இவை பெரியளவில் பயன்பாட்டில் இருக்கக்கூடியதாகும்.

5. வாடிக்கையாளர்களின் அனுபவம் சார்ந்த தகவல்கள் தொகுப்பில் (Customer Journey Mapping) ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டு நிறுவனங்கள் பலவகையான கூடுதல் தகவல்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறக்கூடும். வாடிக்கையாளர்களின் அனுபவங்களும் தகவல் பரிமாற்றங்களும் அவர்களது பயணத்தில் நிலையின் அடிப்படையில் மாறும். எனவே குறிப்பிட்ட வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப நிகழ்கால அடிப்படையில் பொருள் அல்லது சேவையை உருவாக்கவும் தொடர்பு கொள்ளப்படும் தருணமான தொடுபுள்ளியை (touchpoints) உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் டூல்களை நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடும்.

மார்கெட்டிங்கின் எதிர்காலம் பன்முகத்தன்மை கொண்டதும் சக்திவாய்ந்ததுமாக இருக்கும். அதே சமயம் இது கட்டுபாடு இல்லாத உணர்வை ஏற்படுத்துகிறது. தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கபடும் என்பது பொய்யாக்கப்படுகிறது. அனைத்து தகவல்களும் பொதுவெளியில் அம்பலமாகும் உணர்வை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம் என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மார்கெட்டிங் என்கிற பெயரில் சாதுர்யமாக தகவல்களை பயன்படுத்திக்கொள்ளும்போதும் மறுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இவையே மார்கெட்டிங்கின் எதிர்மறை விளைவாக பார்க்கப்படுகிறது. 

2018-ம் ஆண்டில் சந்தைபடுத்துபவர் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில்கொண்டு அதற்கு தீர்வளிக்கும் விதத்தில் செயல்பட்டால் சந்தைப்படுத்துவோர் – வாடிக்கையாளர் இடையேயான உறவு வலுப்படுத்தப்படும்.

ஆங்கில கட்டுரையாளர் : ஜோன்ஸ் மேத்யூ

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இவை எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.)