உழவர்களின் உன்னத உழைப்பை பேசும் 4 நிமிட வீடியோ படைப்பு!

0

உழவர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் சோற்றில் கை வைக்க சேற்றில் கால் வைக்கும் உழவர்களின் உன்னத உழைப்புக்கு ஊக்கம் தந்து போற்றி நன்றி கூறுகிறது ஒரு வீடியோ பகிர்வு.

இந்திய விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், இந்த வீடியோ குறும்படத்தை 'The Most Important Job' (உலகில் மிக முக்கியமான தொழில்) எனும் தலைப்பில் யூடியூபில் பகிர்ந்துள்ளதாக முருகப்பா குழுமம் தெரிவித்துள்ளது.

சுவாரசியங்கள் அடங்கிய இந்தக் குறும்படம், இணையத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விவசாயத்தின் மகத்துவத்தையும், உழவர்களின் உழைப்பையும் போற்றும் இந்தப் படைப்பு, உழவர் திருநாளையொட்டி யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல தொகுப்பாளர்களான ஆர்.ஜே. பாலாஜியும், வெங்கியும் தனித்தனியாக பொதுமக்களிடம் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்கிறார்கள். அதில் முதலாவது கேள்வி, "உலகில் கடினமானதும் முக்கியமானதுமான தொழில் எது?" என்பதாகும். "நம் ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்துக்கும் எந்தத் தொழில் அத்தியாவசியம்" என்பது இன்னொரு கேள்வி.

இந்தக் கேள்விகளை கேட்கும் விதமும், மக்கள் அதற்கு அளிக்கும் பதிலும் நகைச்சுவையும் சமூக அக்கறையும் இரண்டறக் கலந்ததாகும். இறுதியில், இந்த வீடியோவில் பங்கேற்ற ஒவ்வொருவரும் உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தையும், உழவர்களின் மேன்மையையும் உணர்ந்து நன்றி தெரிவிப்பது நெகிழ்ச்சியானது.

அத்துடன், விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் ஊக்கம் பெறும் பாடல் ஒன்றையும் இணைத்துள்ளதும், அதற்குரிய காட்சியமைப்புகளும் மிகச் சிறப்பு. இத்தனையும் நான்கே நிமிடத்தில் அடக்குவது அற்புதமான உத்தி.

சுரேஷ் கைலாஷ் எழுதிய இந்தப் பாடலுக்கு திமோதி மதுக்கர் இசையமைத்துள்ளார். பிரபல பாடகர்களான மால்குடி சுபா, ஷாலினி மற்றும் கோபால் ஷர்மா ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர். கருத்தாக்கம் இன்டர்ஃபேஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம். இந்தக் குறும்படைப்பை இயக்கியிருப்பவர் ஹரிஹரன்.

The Most Important Job - குறும் வீடியோ படைப்பு இதோ...