இதமான தேநீர் தயாரிப்பில் வெற்றியை ருசித்த அபிஜித் மஜும்தார்

0

கிழக்கு டெல்லியில் உள்ள பரபரப்பான மார்க்கெட் பகுதியில் உள்ள அமைதியான சந்து ஒன்றில் அமைந்துள்ளது அபிஜித் மஜும்தாரின் தேநீர் விடுதி. கடந்த 2012ல் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் இயங்கும் இங்குதான் மஜும்தார் தனது சுவையான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

உபகரணங்கள் மற்றும் வடிவமைப்புத் தொழில்துறையில் சுமார் 18 வருடம் வேலை பார்த்தார் அபிஜித். வேறு யாரோ ஒருவருக்கு வேலை பார்ப்பதை விட தனக்குத்தானே வேலை பார்க்கலாம் என்று முடிவெடுத்தார் அவர். அதன் விளைவுதான் இந்தத் தேநீர் விடுதி.

“நானும் எனது நண்பரும் முதலில் உணவு பற்றித்தான் யோசித்தோம். நகர் முழுவதும் உள்ள உணவு விடுதிகளில் வழங்கப்படும் விதவிதமான உணவு வகைகள் பற்றி தகவல்கள் சேகரித்தோம். இரண்டு ஆண்டுகள், ஒவ்வொரு வார விடுமுறையின் போதும் டெல்லியை சுற்றி வந்தோம். புதிதாக என்ன இருக்கிறது என்பதில் தொடங்கி, தள்ளுவண்டிக் கடைகளில் தரப்படும் உணவு வகைகள், அவர்களின் சேவைகள் என்று எல்லாவற்றையும் ஆய்வு செய்தோம்.”

என்று நினைவு கூர்கிறார் அபிஜித். “விதவிதமான உணவு விடுதிகள், ஆடம்பரமான காபி ஷாப்கள் என ஒவ்வொன்றும் புதுப் புது வகையான உணவுகளை வழங்குவதைப் பார்தோம். தேநீர் விடுதிகள் இல்லை என்றும் எங்களுக்குத் தெரியவந்தது. நாம் இந்தியர்கள். தேநீரை அதிகம் விரும்பக் கூடியவர்கள். வீட்டில் அல்லது சாலையோர பேக்கரிகளில் நாம் தேநீரை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். டெல்லியின் உணவு உலகில் ஆடம்பரமான காபி ஷாப்புகள் இருக்கும் போது தேநீர் விடுதிகளை மட்டும் காணோமே ஏன்? இந்தக் கேள்விதான் நாம் ஒரு தேநீர் விடுதியைத் திறக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது” என்கிறார் அவர்.

தேநீரின் மீது பேரார்வம்

சாம்டெல்லில் ஏர்பஸ் மற்றும் எப் 16 போன்ற நுகர் பொருட்களுக்கான சிஆர்டி டிஸ்பிளே வடிவமைக்கும் பணிகளைச் செய்து கொண்டிருந்தார் அபிஜித். அவருக்கு சீனாவிலும் ஜப்பானிலும் நிறைய வர்த்தக நண்பர்கள் இருந்தனர். இப்போது தேநீர் விடுதி ஆரம்பித்த பிறகு அந்த நண்பர்கள் அவர்கள் நாட்டு தேயிலைத் தூளை அபிஜித்துக்குப் பரிசாகக் கொண்டு வந்தனர். அவர்கள் நாட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதி இது. இந்தப் பரிசுப் பொருட்களால் விரைவிலேயே அபிஜித்தின் அலமாரி நிறைந்து விட்டது. “எனது சேகரிப்பு நண்பர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவர்கள் ஒரு தேநீர் தர முடியுமா என்று கேட்பார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியோடு சூடாக நான் தேநீர் தருவேன். ஒரு தேநீர் விடுதி பற்றி சிந்திக்கும் போதே அதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதும் இயல்புதானே” என்கிறார் அபிஜித்.

தேநீர் பற்றிய கல்வி

அபிஜித், தான் வேலை பார்த்த நிறுவனத்தில் வெறும் ஆலோசகராக மட்டும் பணி என்று வேலையைக் குறைத்துக் கொண்டார். அப்படியே தேநீர் தொடர்பான அறிவை விரிவாக்கிக் கொண்டிருந்தார். பலவிதமான தேயிலைத் தூள்களை வாங்கி அவற்றைப் பற்றி ஆய்வு செய்தார். நியூ கிளான்சியோவின் சிவா சாரியா, புதுடெல்லி மிட்டல் டீயின் விக்ரம் மிட்டல் போன்றவர்கள் அவருக்கு வழிகாட்டிகளாக அமைந்தனர். கடைசியில் சாம்டெல்லில் வேலையை விட்டு விட்டு சொந்தமாகத் தொழிலைத் தொடங்கினார் அபிஜித். கிழக்கு டெல்லி மார்க்கெட்டில் அவருக்கு ஒரு இடம் கிடைத்தது. நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை திரட்டினார்.

தடையைத் தாண்டி மீண்டும் முன்னேற்றம்

ஆனால் அபிஜித்தும் அவரது நண்பர்களும் சேர்ந்து திட்டமிட்டபடி தொழிலை தொடங்க முடியாமல் ஆரம்பத் தடங்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் தொடங்குவதற்கு முன் பூர்வாங்க வேலைகள் நிறைய இருந்தன. சிறிது போராட்டத்திற்குப் பிறகு, தேநீர் விடுதி திட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, தேயிலைத் தூள் விற்பனையைத் தொடங்கலாம் என்ற யோசனைக்கு வந்தார் அபிஜித். அவரது வழிகாட்டியான மிட்டல் டீஸ் கடையின் விக்ரம், தனது கடைக்கு தேயிலை விநியோகஸ்தராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். மற்றவர்களுக்காக பெரிய ஆர்டர்களைப் பெற்றதோடு, அவரது கடையிலேயே சில்லறை விற்பனையையும் ஆரம்பித்தார் அபிஜித். இதற்கிடையில் அவருக்கு நிதி உதவி செய்பவர்கள் பலர் கிடைத்தனர். சிலர் அவர்களின் தேநீர் கோட்டாவுக்காக அங்கே வந்தார்கள். வேறு சிலர் அபிஜித்துடன் சூடான ஊலாங் (Oolong) தேநீரைச் சுவைத்தபடி அரட்டை அடிக்க வந்தனர்.

அபிஜித்திற்கு தனது வாடிக்கையாளர்களையே தனது வர்த்தகத் தூதுவர்களாக மாற்றும் திறன் இருந்தது. வித விதமான தேயிலை, இருப்பு வைத்தல், எதனோடு எதைச் சேர்த்தால் ருசி என்று சகலவிதமான விஷயங்களிலும் ஆலோசனைகளை வழங்கினார் அபிஜித். நாட்கள் செல்லச் செல்ல, அபிஜித்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. “ஒரு ஜப்பான் குடும்பத்தினர் மாதம் ஒரு முறை தவறாமல் என் கடைக்கு வந்து விடுவார்கள்” என்கிறார் அவர்.

இந்தச் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனையோடு, ஆன்லைனில் தேயிலை விற்பனை செய்ய சாய்வாலா எனும் இணையதளம் ஒன்றையும் தொடங்கினார் அபிஜித். அமேசான் போன்ற இணையதளங்களோடு அவர் இணைந்து கொண்டார். அவை அபிஜித்தின் விற்பனையை அதிகரித்தன. மற்றொருபுறம் அடுத்த ஆண்டில் தனது கனவான தேநீர் விடுதி ஆரம்பிப்பதற்கான வேலைகளை அமைதியாக செய்து கொண்டிருந்தார் அபிஜித்.

ஃப்ளோரல் டீ (floral tea) அல்லது டீசனெஸ் (Tisanes) எனப்படும் மூலிகை டீ விற்பனை செய்யும் அபிஜித், அதைப் பற்றி நிறையப் படித்து தெரிந்து கொள்கிறார். “பல்வேறு வகையான டீசனெஸ்-ன் மருத்துவ குணங்கள் குறித்து எனக்குத் தெரியவந்தது. அவற்றை ஆய்வு செய்யத் தொடங்கினேன். கடைசியில் இயற்கை மருத்துவப் பொருளாக அதை விற்பனை செய்யும் யோசனை வந்தது. தற்போது குசம்பப்பூ (safflower) மற்றும் கற்பூரவள்ளி (Borago officianalis)பூக்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். குசம்பப்பூ குடல் வியாதிகளைக் குணப்படுத்தும் பண்புடையது. ஜீரணத்திற்கு உதவும். இயற்கையான மளமிளக்கி. குழந்தை பிறந்த பெண்களின் ஆரோக்கியத்தைப் பேணக் கூடியது. ஊதா நிறமுடைய இதழ்களைக் கொண்ட கற்பூரவள்ளிப் பூ ஒரு இயற்கை கிருமிநாசினி. ஆனால் இந்தியாவில் இது அரிதாகத்தான் கிடைக்கிறது. பெரும்பாலான முகப்பவுடர் மற்றும் ஆன்டிசெப்டிக் க்ரீம் தயாரிப்பில் இது அதிகம் பயன்படுகிறது” என்று விளக்குகிறார் அபிஜித்.

அரிதான பூக்களை கொள்முதல் செய்து, அவற்றைப் பயன்படுத்தி விதவிதமான தேநீர் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார் அபிஜித். அதில் சேர்மானம் சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க சில ஆயுர்வேத மருத்துவர்களையும் உடன் வைத்திருக்கிறார் அவர்.

இயற்கைக்கு மரியாதை

இயற்கையான தேயிலைப் பயன்பாட்டை நாங்கள் ஊக்குவிக்கிறோம். மிளகு, மற்றும் பூக்கள் மூலம் ஒவ்வொரு தேநீருக்கும் ஒவ்வொரு சுவையைப் பெறுவது பற்றிக் கற்பிக்கிறோம். தேயிலைக் கொள்முதலுக்கு சோரின், நம்ரிங், கோபால்தரா, சங்மா போன்ற தேயிலைத் தோட்டங்கள், தேயிலை ஏல இல்லங்கள் மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள தனிப்பட்ட தேயிலை விற்பனையாளர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் அபிஜித். அவரது இந்தத் தொடர்புகள் மட்சா, ப்யூர், பெர்மொசா மற்றும் ப்ளூமிங் போன்ற முதன்மைத் தேயிலைகளை நியாயமான விலையில் பெற அவருக்கு உதவுகின்றன.

ஆக்கம்: இந்திரஜித் டி சவுத்ரி | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா