ஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...   

3

மக்களை சந்தோஷப்படவைக்கவே மீடியா துறையை தேர்ந்தெடுத்து, ஆர்ஜே, வீஜே, ஸ்டாண்ட்-அப் காமெடி, யூட்யூப் சேனல் என்று பல துறைகளில், தளங்களில் தன் முத்திரையை பதித்து தனக்கான ஒரு தொழில்முனைவுப் பாதையை அமைத்துக் கொண்ட ராதா மணாளன் பகிரும் அனுபவங்கள். 

பிறந்த ஊர் சிவகங்கை என்றாலும், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை என்று பல ஊர்களில் வசித்துள்ளார் ராதா மணாளன். திருச்சி பிஷப் ஹெப்பர் கல்லூரியில் படித்தது என்னவோ பி.எஸ்.சி பிசிக்ஸ், பின்னர் வாழ்க்கை என்னவோ மீடியா என்று ஆகிவிட்டது.

"சிறுவயது முதலே என் குரல் மற்றும் கிரியேடிவ் திறனை பயன்படுத்தி அதில் பணிபுரியவே ஆசைப்பட்டேன். வேறு வாய்ப்பின்றியே பி.எஸ்.சி படித்தேன்...” என்று தொடங்கினார் ராதா மணாளன்.

டிகிரி முடித்துவிட்டு, எம்.ஏ மாஸ்காம் படித்துவிட்டு சென்னை வந்த ராதா, ரேடியோ மிர்ச்சியின் முதல் ஆர்ஜே ஆகி தூள் கிளப்பினார். கல்லூரி முடித்து ரேடியோவில் சேர்ந்த சில காலத்திலேயே பிரபலம் ஆவதென்பது சும்மாவா?

”இளம் வயதில் என் குரலை ரசிக்கும் ரசிகர்கள், நடிகர்ளை பேட்டி எடுக்கும் வாய்ப்பு, திரைத்துறையில் நண்பர்கள் என்று அந்த காலக்கட்டத்தில் எனக்குக் கிடைத்த அனுபவம் எல்லாருக்கும் சுலபமாக அமையாது,” என்கிறார். 

அப்போது விகடன் வழங்கிய சிறந்த ஆர்ஜே விருதையும் பெற்றுள்ளார் ராதா மணாளன். தான் ஒரு ஆர்ஜே’வாக மட்டுமல்லாமல் ரேடியோ மிர்ச்சி தொடக்கத்தில் இருந்து பணியாற்றியதால், ஒரு ரேடியோ ஸ்டேஷன் கட்டமைப்பது முதல் ஐடியாக்களை உருவாக்குவது, குழு மேலாண்மை என்று ஒரு தொழிலை தொடங்கத் தேவையான அத்தனை அனுபவத்தையும் கற்றதாக குறிப்பிடுகிறார்.

அதன் பின் மதுரையில் ரேடியோ மிர்ச்சி தொடங்கியது, பிக் எஃப்எம், சக்தி எப்ஃஎம், என்று தொடர்ந்து ரேடியோவில் கோலோச்சினார் ராதா மணாளன். ரேடியோவை தொடர்ந்து அவர் அடுத்து அடி எடுத்தது, சின்னத்திரை...

தந்தி டிவியின் கிரியேட்டிவ் தலைமை பொறுப்பை ஏற்றார் ராதா. டிவி ஆன்கராகவும், பல முக்கிய நிகழ்ச்சிகளில் தோன்றி பிரபலமானார்.

“ஆரம்பக்கட்டத்தில் இருந்து ஒரு பிராண்டை லான்ச் செய்து, அதற்குத் தேவையான யுக்திகளை கண்டெடுத்து, மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது எப்படி என்று என் இந்த ரேடியோ, டிவி அனுபவங்களில் கற்றுக்கொண்டேன். சவால்களை எப்படி கையாள்வது என்று புரிந்தவுடன், நானே என் சொந்த மீடியா பிராண்ட் உருவாக்க முடிவெடுத்தேன்.” 

தந்தி டிவி, ஜெயா டிவி என்று சில வருடங்கள் ரவுண்ட் வந்தபின், அடுத்த மாற்றத்தை நோக்கி நகர்ந்தார். அதுதான் டிஜிட்டல் மீடியா. 2015-ல் டிஜிட்டல் மீடியா மற்றும் வர்த்தகம் ஆரம்பக்கட்டத்தில் இருந்த காலம், என்றாலும் அதில் துணிவுடன் இறங்கினார் ராதா மணாளன்.

பிரபல நாளிதழ் தினமலர், டிஜிட்டல் மீடியாவில் கால்பதிக்க திட்டமிருந்த தருணத்தில் ஆதர்ஷ் என்பவரை சந்தித்து தன் யூட்யூப் சேனல் தொடங்கும் ஐடியாவை சொன்னார் ராதா. அதுவே ’மெட்ராஸ் செண்ட்ரல்’ தொடங்க வழி செய்தது. இன்று வரை இந்த சேனலுக்கு என்று ஒரு தனி அடையாளமும், அங்கீகாரமும் உள்ளது. யூட்யூப் சேனல் என்பதே புதிய முயற்சி என்பதால் அதில் பலவிதங்களின் கிரியேடிவிட்டியை கொண்டுவந்தார் ராதா மணாளன்.

“டிஜிட்டல் மீடியா புதியது என்பதால் நிதானமாக அடியெடுத்தோம். இரண்டு தயாரிப்பாளர்கள், ஒரு கேமராமேன் மற்றும் இரு எடிட்டர்களை நியமித்து ‘மெட்ராஸ் செண்ட்ரல் சேனல்’ தொடங்கினோம். உள்ளடக்கத்தில் எனக்கு முழு சுதந்திரம் வேண்டுமென நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்தேன். அது எனக்கு பெரிதும் உதவியது.” 

2015 சென்னை வெள்ளம் வந்த சமயத்தில், மெட்ராஸ் செண்ட்ரல் தயாரிப்பில் வந்த ’மேன் vs ரெயின்’ (பிரபல பேர் க்ரில்ஸ் நிகழ்ச்சியின் காமெடி வடிவம்), மக்கள் மத்தியில் வைரல் ஆனது. 10 லட்சம் பேர் அதை ஃபேஸ்புக்கிலும், ஒரு லட்சம் பேர் யூட்யூபிலும் பார்த்து ரசித்தது, இவரின் குழுவிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்த சேனலை பற்றி புகழாத மக்கள் இல்லை, பீப் சாங் பற்றிய மற்றொரு வீடியோவும் வைரல் ஆனது. சில இதழ்களும் இதுபற்றி செய்திகள் வெளியிட்டனர். இங்கும் ராதாவுக்கு கிடைத்தது அனுபவத்துடனான கற்றல் என்கிறார்.

“ஆம், எனக்கு டிஜிட்டல் மீடியா பற்றியும், அதில் எத்தகைய உள்ளடக்கத்துக்கு தேவை இருக்கிறது, உலக அளவில் மக்களை எப்படி சென்றடைவது என்று தெரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்தது,” என்கிறார். 
டிவி நிகழ்ச்சி நேர்காணலில் நடிகர் மாதவன் உடன் ராதா மணாளன்
டிவி நிகழ்ச்சி நேர்காணலில் நடிகர் மாதவன் உடன் ராதா மணாளன்

இணையத்தில் SEO பற்றியும், ஒரு யூட்யூப் சேனல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள், சவால்கள் பற்றியும் நன்கு புரிந்துகொண்டதாக கூறினார். 

மெட்ராஸ் சென்ட்ரலில் கிடைத்த முழு அனுபவம், தன் சொந்த யூட்யூப் சேனல் தொடங்க ஊக்குவித்ததாக பகிர்கிறார் ராதா மணாளன். ஆன்லைனில் கல்வி, பொழுதுபோக்கு என பல யோசனைகளுக்குப் பின் உருவானதே, ‘கிச்டி’ ’Kichdy’. இது என்ன கிண்டும் உப்புமா கிச்சடியா எனக் கேட்டால்?

“ஆம் கிச்டி எனும் வார்த்தை இந்தியா முழுதும் பிரபலம். எல்லா வகையான பொழுதுபோக்கு மற்றும் தரமான விஷயங்களை சொல்லக்கூடிய ஒரு தளமாக இது இருக்கவேண்டும், அதேசமயம் மக்களையும் கவரவேண்டும் என நினைத்தேன்,” என்கிறார்.

தனக்கு பிடித்த தளங்களில் ஒன்றான யுவர்ஸ்டோரியை போலவே, சாமனியர்களின் கதைகளை வீடியோ வடிவில் சொல்ல நினைத்து தொடங்கியதே ‘கிச்சடி’ என்கிறார். மக்களை இதன் மூலம் ஊக்கப்படுத்துவதே தனது லட்சியம் என்றார். தன்னுடைய சுயமுதலீட்டில், சில நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் நிதியுதவியுடன் இந்த யூட்யூப் தளத்தை துவங்கினார் ராதா. கேமரா, எடிட்டிங் தேவையான சாதனங்கள் மற்றும் ஸ்டுடியோ வசதி கொண்ட இடத்தில் நிறுவனத்தை தொடங்கினார். 

“நாங்கள் யூட்யூப் சேனல் தொடங்கி இரண்டாம் மாதத்திலேயே வருவாய் ஈட்டத் தொடங்கினோம். ஏன் முதல் மாதத்திலேயே சுமார் 532 டாலர்கள் வருவாய் ஈட்டினேன்,” என்கிறார் உற்சாகமாக.

வருங்காலத்தில் யூட்யூப் மீடியா மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற காரணத்தினால் இந்த தளம் தனக்கு பிடித்திருக்கிறது என்கிறார். ‘கிச்டி’ வெறும் ஒரு யூட்யூப் சேனலாக நின்றுவிடாமல், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத் தளமாக வளரவேண்டும் என்கிறார். கிச்டி சேனலை ஒரு டிவி சேனலுக்கு இணையாக வளர்த்தெடுக்க விரும்புகிறேன் என்றும் சொல்கிறார். 

ஆனால், இன்று பல யூட்யூப் சேனல்கள் இருக்கிறதே? எப்படி போட்டியை சமாளித்து தனித்து நிற்கப்போகிறீர்கள் என்று கேட்டால்?

“யூட்யூப் சேனல் துவங்குவது இலவசம் மற்றும் சுலபம். ஒரு ஜிமெயில் ஐடி இருந்தாலே துவங்கிவிடலாம். ஆனால் அதன் வெற்றியின் ரகசியமே உள்ளடக்கத்தை பொறுத்தே உள்ளது. அந்த ஒரு தந்திரம் தெரிந்தால் மட்டுமே யூட்யூப் சேனலை மக்களிடம் பெரிய அளவில் கொண்டு சேர்க்கமுடியும்.”

தானும் கிச்டி தொடங்கிய புதிதில் சில தவறுகள் செய்ததால், சில வீடியோக்கள் சரியாக சென்றடையவில்லை என்று ஒப்புக்கொள்கிறார் ராதா. அதே நேரம் மக்களுக்கு என்ன பிடிக்கிறது, எதை விரும்பிப்பார்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு மெல்ல மெல்ல இவர் தயாரித்த சில வீடியோக்கள் வைரல் ஆனது. 

கிச்டி சேனலில் ராதா மணாளன்
கிச்டி சேனலில் ராதா மணாளன்
“சமூகத்துடன் தொடர்புடைய தலைப்புகளில் தயாரித்த ஜெயலலிதா மரணம், பிட்காயின், போன்ற வீடியோக்கள் 10 லட்சம் முதல் 30 லட்சம் பார்வையாளர்களை பெற்று வைரல் ஆனது. அதே போல் டிவி சீரியல்களை கலாய்த்து வெளியிட்ட ஷோ பிரபலமானது,” என்கிறார்.

யூட்யூப் சேனலில் வருவாய் ஈட்டுவது எப்படி? என்று கேட்டால், ராதாவின் பதில், யூட்யூப் ஒரு பிராண்ட் வளர்க்கும் தளம் மட்டுமே, அதில் ஓரளவு தான் வருவாய் ஈட்டமுடியும், அதுவே ஒரு தொழிலாக இருக்கமுடியாது என்கிறார். 

“உலகளவில் பிரபலமாக இருக்கும் ஒருசில குழந்தைகள் சேனல், சமையல் குறிப்பு சேனல்கள் தவிர மற்றவை பெரிய அளவில் யூட்யூபில் மட்டுமே சம்பாதித்துவிட முடியாது. கடைகள், பெரிய பிராண்ட் மற்றும் நிறுவனங்கள், யூட்யூப் சேனல்களுடன் இணைந்து வீடியோக்கள் செய்து பிராண்டை பிரபலப்படுத்த இது சிறந்த இடம்,” என்கிறார். 

கிச்டி சேனலை பொறுத்தவரை, தொடங்கிய ஒன்றரை ஆண்டில், சுமார் 2.3 லட்சம் சப்ஸ்க்ரைபர்களுடன், மாதம் சராசரியாக 20 லட்சம் பேர் பார்க்கும் சேனலாக வளர்ந்துள்ளது. இதை மாதம் 2 கோடி பார்வையாளர்கள் வரை வளர்க்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.

சேனல் விரிவாக்கம் பலவகைகளில் செய்யமுடியும் என்று சொல்லும் அவர், தென்னிந்தியாவின் முன்னணி ஆன்லைன் வெப்சைட் ஒன்றுடன் இணைந்து தங்களது சேனலை வெளியிட உள்ளார். பொழுதுபோக்கு தவிர, பிரத்யேக குழந்தைகள் சேனல், உணவு சேனல் என்று பல துறைகளில் விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் முதலீடு எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் சொல்கிறார். 

”தொழில்நுட்பம், குழு மற்றும் கட்டமைப்பை விரிவாக்க மீடியா துறையில் விருப்பமுள்ள முதலீட்டாளர்களை எதிர்நோக்கி உள்ளேன்.”

தினம் தினம் சவாலே தொழில்முனைவு வாழ்க்கை எனும் ராதா, முன்பெல்லாம் மாதம் முதல் தேதி சம்பள எஸ்எம்எஸ் வந்துவிடும், ஆனால் இப்போது நான் என் குழுவிற்கு சரியானபடி சம்பளம் போடவேண்டும் அதற்கு தொடர்ந்து உழைக்கவேண்டும் என்கிறார். 

மீடியா துறையில் உள்ள வெற்றி் தொழில்முனைவர்களான யூடிவி ரோனி ஸ்க்ரூவாலா, யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா, நெட்ஃப்ளிக்ஸ் ரீட் ஹாஸ்டிங்க்ஸ், சீனாவின் டென்செண்ட் ஹோல்டிங்க்ஸ் ஆகியோர் தனது முன்மாதிரிகள் என்றும் அவர்களின் வளர்ச்சிக் கதைகள் தன்னை மீடியா துறையில் முன்னேறிச்செல்ல உந்துதல் அளிப்பதாகவும் சொல்லி முடிக்கிறார் கனவுகளை நினைவாக்க வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ராதா மணாளன்.

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan