உங்களின் திருமண ஜோடியை நீங்களே தேர்ந்தெடுக்க உதவும் மேட்ரிமோனியல் தளம்! 

0

கொச்சியைச் சேர்ந்த வெட்எடர்னா (Wedterna) என்கிற ஸ்டார்ட் அப்பை 2015-ம் ஆண்டு நிறுவினார் சனீஷ் சுகுமாரன். ஆன்லைன் மேட்ரிமோனி பிரிவில் செயல்படும் இந்நிறுவனம் அறிவிக்கப்படாத நிதித்தொகையை உயர்த்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டிருக்கும் எந்த ஒரு நபரிடம் பேசினாலும் நிச்சயம் அவரிடம் ஒரு கதை இருக்கும். அது மணம்முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த மணமகன் மணமகள் சந்திப்பாக இருக்கலாம். அல்லது பெற்றோர் எதிர்பார்த்த அம்சங்களில் இருந்து வெகுவாக மாறுபட்டிருந்த சம்பவமாக இருக்கலாம். பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் அவ்வளவு எளிதாக ஏற்பாடு செய்யப்படுவதில்லை. இதை மாற்றவும் இத்தகைய திருமணங்களில் ஒரு மாறுபட்ட அணுகுமுறையை அறிமுகப்படுத்தவும் வெட்எடர்னா ஸ்டார்ட் அப்பை நிறுவியுள்ளார் சனீஷ் சுகுமாரன்.

வெட்எடர்னா மணமகனோ அல்லது மணமகளோ சுயமாக தங்களது திருமணத்தை தாங்களே ஏற்பாடு செய்துகொள்ள உதவும் தளமாகும். மற்ற மேட்ரிமோனியல் தளங்கள் பெற்றோர்களை மையமாகக் கொண்டே செயல்படுகின்றன. வெட்எடர்னா அவ்வாறில்லை. பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் பாரம்பரிய திருமண ஏற்பாடுகளுக்கான பொறுப்பை மொத்தமாக குடும்பத்தினரிடமோ அல்லது உறவினரிடமோ ஒப்படைக்காமல் தாங்களாகவே ஈடுபட விரும்புவோருக்கு வெட்எடர்னா உதவுகிறது.

சனீஷ் குறிப்பிடுகையில்,

”மற்ற முக்கிய தகவல்களுடன் ஆளுமை மற்றும் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் புதுமையான சுயவிவர அம்சங்களை உருவாக்கியுள்ளோம். விவரங்கள் சுயமாக உருவாக்கப்படும் என்பதால் உங்களது கருத்துகளையும் தேவைகளையும் பகிர்ந்துகொள்ளலாம். இது மற்றவர்கள் உங்களுடன் உரையாடவும் இணையவும் உதவும்,” என்றார்.

வெட்எடர்னா எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு பயனர் தன்னைப் பற்றிய விவரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை வலைதளத்தில் பதிவு செய்வார். அதன் பிறகு விரிவான விவரங்களும் கேள்விகள் அடங்கிய பட்டியலும் இருக்கும். இந்தக் கேள்விகள் விருப்பம் இருந்தால் பதிலளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். 

இதற்கான விடைகள் மக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருக்கும். ஒரு பயனர் உரையாடுவதற்கு தேர்ந்தெடுக்கும் மற்றொரு பயனர் மட்டுமே இதைப் பார்க்கமுடியும். புகைப்படங்களுக்கும் இது பொருந்தும். பயனர்கள் இரண்டு புகைப்படங்களைப் பார்க்கலாம். கூடுதல் புகைப்படங்களைப் பார்க்கவேண்டுமானால் அந்தக் குறிப்ப்ட்ட பயனரிடம் உரையாடவேண்டும். பாதுகாப்பு கருதியும் தனிநபர் ரகசியம் கருதியும் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

பயனர் தனது உறுப்பினர் நிலையை ப்ரீமியமாக மேம்படுத்திக்கொண்டால் மற்றொரு பயனரின் தொடர்பு விவரங்களைக் கோரலாம். அத்துடன் தங்களது தொடர்பு விவரங்களையும் மெசேஜ்களையும் மற்ற பயனர்களுக்கு அனுப்பலாம். ஒருவருக்கு தொடர்பு விவரங்களை பகிர்ந்துகொள்ளுமாறு விண்ணப்பம் வந்தால் அவர் தன்னுடைய தனிப்பட்ட தகவலையோ அல்லது பெற்றோரின் தகவல்களையோ அனுப்பலாமா வேண்டாமா என்பதை அவரே தீர்மானித்துக்கொள்ளலாம்.

பாரம்பரிய மேட்ரிமோனி தளங்களில் மற்ற பயனர்களின் தொடர்பு எண்கள் மற்றும் முகவரி விவரங்களை கட்டணம் செலுத்தும் உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் வெட்எடர்னாவில் அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பில்லை. தகவல் பரிமாற்றம் முழுவதுமாக உறுப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும். 

தேவைப்படும் பட்சத்தில் கல்வி, பணி, முகவரி என சுயவிவரத்தில் இருக்கும் பின்னணியை சரிபார்க்க ஏஜென்சிகளுடனும் இக்குழு இணைந்துள்ளது.

துவக்கம்

“குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஒரு தருணமும் இம்முயற்சிக்கு உந்துதலாக இருக்கவில்லை. சில திருமணங்களில் ஏற்பட்ட சங்கடமான சூழல்கள் குறித்து நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் கேட்டபோதும் என்னுடைய சொந்த அனுபவமும் இந்த முயற்சிக்கு வழிவகுத்தது. மக்கள் ஏன் தங்களை சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ளக்கூடாது என சிந்தித்தேன். 

”ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இணையும் வகையில் ஒரு தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என யோசித்தேன். ஆரம்பத்தில் இந்த திட்டம் சாத்தியம் என்று தோன்றவில்லை. ஆழமாக ஆய்வு செய்தும் எங்களை முறையாக தயார்படுத்திக்கொண்டுமே இந்த முயற்சியில் ஈடுபடத் துவங்கினோம்,” என்றார் சனீஷ்.

எனினும் முதல் பயனர் தொகுப்பைப் பெறுவது கடினமாகவே இருந்தது. ஏனெனில் போலியான சுயவிவரத்தை உருவாக்க நம்பகத்தன்மையற்ற தகவல்களை பயன்படுத்த இக்குழுவினர் விரும்பவில்லை. ப்ராடகட் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி தகவல் தொழில்நுட்ப சேவை பிரிவில் 13 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் இருப்பதால் ப்ராடக்டை விற்பனை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்துவம் அவசியம் என்பதை சனீஷ் அறிந்திருந்தார்.

தனிப்பட்ட சேமிப்பில் இருந்து வணிகத்தை துவங்கிய நிலையில் விரைவிலேயே அவிஷ் ஜோசப் என்கிற சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டாளரிடம் இருந்து ஏஞ்சல் நிதி பெற்றார். அதன் பிறகு இந்த யோசனையை தனக்கு அறிமுகமான அனைவரிடமும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியமானது. பெண்களை மையமாகக் கொண்ட இடங்கள் மற்றும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியதாக தெரிவித்தார் சனீஷ்.

மக்களுடன் உரையாடி சரியான குழுவை ஒன்றிணைத்து தளத்தை உருவாக்க இக்குழுவினர் நேரம் எடுத்துக்கொண்டனர். 2016-ம் ஆண்டு துவக்கத்தில் இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. 12,000 பயனர்களைக் கொண்ட உறுப்பினர் தொகுப்பை இக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

ப்ரீமியம் உறுப்பினர் நிலைகளுடன் தற்போது செயல்படும் மேட்ரிமோனி, ஷாதி, ஜீவன்சாதி போன்ற மேட்ரிமோனியல் தளங்கள் போலவே வெட்எடர்னா சந்தா மாதிரியைப் பின்பற்றுகிறது.

ஆன்லைன் மேட்ரினோனியல் தளங்களுக்கான சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் சந்தையில் சிறந்து விளங்க அவகாசம் தேவைப்படும் என்கிறார் சனீஷ். ஒருவர் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும்.

சந்தை மற்றும் வருங்காலத் திட்டம்

இந்தியாவில் திருமணம் தொடர்பான சேவைகளுக்கான சந்தை சுமார் 40 பில்லியன் டாலர் என அமெரிக்காவைச் சேர்ந்த வென்சர் கேப்பிடல் நிறுவனமான Cerracap Ventures தெரிவிக்கிறது. திருமண விழா தொடர்பான தீர்வுகளை வழங்கும் மும்பையைச் சேர்ந்த ’தி வெட்டிங் பிரிகேட்’ நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் ஒரு மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் திருமணம் தொடர்பான சேவைகளுக்கான ஓராண்டு செலவு 57 பில்லியன் டாலர் என்றும் 18 முதல் 35 வயது வரையில் உள்ள திருமணமாகாத இந்தியர்கள் 100 மில்லியனுக்கும் அதிகமான இருப்பதாகவும் கேபிஎம்ஜி அறிக்கை தெரிவிக்கிறது. ஆன்லைன் திருமணப்பொருத்தத் துறை 2020-ம் ஆண்டில் 318 மில்லியன் டாலரை எட்டும் என 2016-ம் ஆண்டு கென் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இவர்களது தற்போதைய வருவாய் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் இருப்பதாக இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். “வெட்எடர்னாஷாப் வாயிலாக வழங்குவதற்கான பிரத்யேகமான சேவைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்,” என்றார் சனீஷ்.

வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துவது வருவாய் ஈட்டுவதில் சந்தித்த சவால்களில் ஒன்றாகும் என்கிறார் சனீஷ்.

”பயனர் மற்ற பயனர்களின் போன் அல்லது முகவரி விவரங்கள் தெரியாமலேயே அவர்களுக்கு பரிசுகள் அனுப்பும் முறையை அறிமுகப்படுத்துகிறோம். இந்தியாவில் இத்தகைய முயற்சியை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் நாங்கள்தான்,” என்றார் சனீஷ்.

வெட்எடர்னா திருமணப்பொருத்தம் மட்டுமின்றி திருமணத் தேவைகள் தொடர்பான அனைத்து தீர்வுகளையும் ஒரே கூரையின்கீழ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ”பரிசு வழங்கும் தளத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு மின்வணிக திருமண ஸ்டோரை (வெட்எடர்னாஷாப்) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த காலாண்டில் ஐஃபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார் சனீஷ்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா